ஆர்.வி.பதி

Pathi_pic

ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா பஜார்’ உள்ளிட்ட பல முன்னணி சிறுவர் இதழ்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் படைப்புகளைப் படைத்துள்ளார். 70 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களையும் எழுதியுள்ளார்.

திண்டுக்கல் காந்திகிராமத்தில் 2019 ல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்க்குழந்தை இலக்கிய மாநாடு உட்பட பல மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதிவருகின்றார்.

சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை’, ‘தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்’, ‘பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்’, ‘சிறுவர் இலக்கிய முன்னோடிகள்’, ‘சிறுவர்களி’ன் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100’, ‘புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு’ முதலான நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவர் தம் எழுத்துக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றுள் ‘வாருங்கள் செல்வங்களே! விஞ்ஞானி ஆகலாம்’ என்ற நூலுக்குக் கிடைத்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருதும், ‘முதலை குகை’ என்ற சிறுவர் சிறுகதை நூலுக்குக் கிடைத்த இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் விருதும் ‘விண்வெளியில் ஒரு பயணம்’ என்ற நூலுக்காகக் கிடைத்த திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் விருதும், குறிப்பிடத்தக்கவை.

Share this: