புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு

PuduvaiIlakiyam_pic

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.   

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சிறுவர் இலக்கியம் எப்போது துவங்கி எப்படி வளர்ந்தது? சிறார் இலக்கிய முன்னோடிகள் யாவர்? என்று இந்நூல் அறிமுகம் செய்கின்றது. பாரதியில் துவங்கி, தற்காலத்தில் எழுதும்  கு.அ.அறிவாளன் வரை, புதுவையில் சிறார் இலக்கியத்துக்குப் பங்களித்தவர்களைப் பற்றியும், அவர்கள் படைப்புகள் பற்றியும், இந்நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

‘சிறுவர் இலக்கியத்தின் தொடக்க காலம்’ என்ற கட்டுரையில், ஆதிகாலத்தில் சிறுவர் இலக்கியம் கதை,பாடல், விடுகதை என வாய்மொழியாகவே இருந்துள்ளது என்றும், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, சிறுவர் இலக்கியம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 20 ஆம் நூறாண்டில் புதிய பரிமாணத்தைத் தொட்டது என்றும் இவர் கூறுகிறார்.  

சிறுவர் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ள தமிழக முன்னோடிகளின் பெயர்களையும், ஒரு கட்டுரையில் தொகுத்துக் கொடுத்துள்ளார். பாரதி புதுவையில் இருந்த காலக்கட்டத்தில் (1908-1918) ‘குயில் பாட்டு’, ‘கண்ணன் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ என முப்பெரும் காவியங்கள் இயற்றினார் என்று சொல்லும் ஆசிரியர், பாரதிதாசன் குறித்த கட்டுரையில், அவர் இயற்றிய ‘இளைஞர் இலக்கியம்’ குறித்துச் சில பாடல்கள் தந்து, விரிவாக விளக்கியுள்ளார். சிறுவர்க்காக 133 பாடல்களைப் பாரதிதாசன் படைத்துள்ளார் என்பதை, இக்கட்டுரையிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

சிறுவர் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளர்களான வாணிதாசன், தமிழ் ஒளி, அணில் அண்ணா, இளம்பாரதி குறித்தும், நாம் விரிவான செய்திகளை அறிய முடிகின்றது. மேலும் புதுவையின் தற்காலச்                              சிறார் எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் ஆவணப்படுத்தியிருப்பதுடன், புதுவையில் நடந்த சிறுவர் இதழ்கள், அங்குச் செயல்படும் இலக்கிய அமைப்புகள், கொடுக்கப்படும் சிறார் இலக்கிய விருதுகள் என சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும், இந்நூலில் சேர்த்துக் கொடுத்திருப்பது சிறப்பு.

இந்நூல் புதுவையில் சிறுவர் இலக்கியம் கடந்த வந்த பாதை குறித்தும் சிறார் இலக்கியப் படைப்பாளர்கள் குறித்தும், அவர்தம் படைப்புகள் குறித்தும், அறிந்து கொள்ளவுதவும் வரலாற்று ஆவணம் எனலாம்.

வகைகட்டுரை
ஆசிரியர்ஆர்.வி.பதி
வெளியீடுநிவேதிதா பதிப்பகம்,சென்னை-92 +91 8939387276/ 8939387296
விலைரூ 240/-
Share this: