உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

Mother_tongue_pic

அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.

கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் மொழியியலில் பன்முகத்தன்மை இருக்க வேண்டியதன் தேவை குறித்தும், உலகின் பல்வேறு மொழி மரபுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியம் குறித்தும் (Multilingual education – a necessity to transform education) வலியுறுத்துவதைக் இந்தாண்டின் கருப்பொருளாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

தாய்மொழியே மனிதனின் சிந்தனைகளின் திறவுகோல்; குழந்தையின் படிப்படியான இயல்பான மூளை வளர்ச்சிக்கும், பகுத்தறிவு சிந்தனை செயல்பாட்டுக்கும், படைப்பாற்றலுக்கும் தாய்மொழி மிகவும் அவசியம் எனப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

உலகமுழுதும் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், பல மொழிகள் அழியும் நிலையிலிருப்பதாக, யுனெஸ்கோ ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மொழியே ஓர் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால். அம்மொழி பேசுவோரின் இன அடையாளங்களும் கலாச்சாரங்களும் அழிந்து விடுகின்றன. எனவே ஓர் இனத்தின் அடையாளமாக விளங்கும்  தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், தாய்மொழி வழிக்கற்றலின் அவசியத்தையும் வலியுறுத்தி, 2000 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வோராண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகத்தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அனுசரிக்கின்றது.

இந்நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை, நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியா விடுதலை பெற்ற போது, மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் (தற்போது பங்களாதேஷ்) ஒரே நாடாக இருந்தன. மேற்கு பாகிஸ்தானில் உருது தேசிய மொழியாக இருந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியே பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இருந்தது. மாறாக உருது மொழியைத் தேசிய மொழியாக வங்க மக்கள் மீது மேற்கு பாகிஸ்தான் வலுக்கட்டாயமாகத் திணித்ததால், அங்குப் போராட்டம் வெடித்தது.

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள், வங்க மொழி இயக்கத்துக்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் ஆதரவுடன் கிளர்ச்சி நடத்தினர். டாக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் இறந்தனர். போராட்டத்தின் விளைவாக 1956 ஆம் ஆண்டு, வங்க மொழி தேசியமொழியாக அறிவிக்கப்பட்டது.  இந்நாளே உலகத் தாய்மொழி நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.   

நம் தாய்மொழியாம் தமிழ் மீது, பற்று கொள்வோம்! தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாகக் கருதுவோம்! தமிழ் தான் நம் அடையாளம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, வழக்கிலிருக்கும் நம் செம்மொழித் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை!

வாழ்க தமிழ்!

அன்புடன்

ஆசிரியர்,

Share this: