டாமிக்குட்டி

Tamikutti_pic

இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி வளர்க்கிறான். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் குழந்தைகளின் இயல்பை, எடுத்துக் காட்டும் கதையிது.

ஊரில் மீனா வீட்டில் மட்டும் மின்சார வசதியில்லை. வீட்டுப்பாடம் செய்ய அவள் தோழி வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். ஆசைகளை நிறைவேற்றித் தருவதாகக் கனவில் வந்து செஸ் போர்டின் கறுப்பு ராஜா  சொல்கிற போது, அவள் ‘வெளிச்சம்’ கேட்கிறாள். அதை வாசித்த போது, மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது! இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் மின்சாரமில்லா வீடுகள் இருக்கின்றன என்ற உண்மை சுடுகின்றது!

‘மரியாதை’ கதையில் பெண் உயரத்தில் உட்காரக்கூடாது என்று சொன்ன மாமாவை மாலதி தக்க சமயத்தில் சரியான கேள்வி கேட்டுப் பதில் சொல்ல முடியாமல் மடக்குவது சபாஷ்! முற்போக்குக் கருத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கும் கதை!

“ஓஓஓ பேயா” என்ற கதையில், வழக்கத்துக்கு மாறாகப் பேய் கோமாளி போல் வெண்ணிலா என்ற பெண்ணிடம் மாட்டிக்கொண்டு, திருதிருவென்று விழிக்கின்றது. நகைச்சுவை கலந்த இக்கதையைக் குழந்தைகள் பெரிதும் ரசிப்பர்.  “மந்திரமா தந்திரமா?” கதை, அற்புதம் என்று மந்திரவாதி செய்து காட்டுவதில் உள்ள அறிவியல் உண்மையை விளக்குகிறது.

இந்தியாவின் இரண்டாவது பெண் மருத்துவர் ருக்குமாபாய் பற்றி, ஒரு கதை சொல்கிறது. “அபிக்கு என்ன ஆச்சு?” என்ற கதை, கடலில் மனிதர்கள் நெகிழியையும், குப்பைகளையும் கொட்டி மாசுபடுத்துவதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதைப் பேசுகின்றது.

முற்போக்கு, சூழலியல் கருத்துகளுடன், சிறுவர்கள் ரசித்து மகிழ, சிறந்த கதைத்தொகுப்பு. அவசியம் வாங்கிக் கொடுத்து, சிறுவர்களை வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்ச.முத்துக்குமாரி
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 8778073949
விலைரூ 40/-
Share this: