தலையங்கம் – பிப்ரவரி 2023

Kavin_Kayal_pic

அனைவருக்கும் வணக்கம்.

சென்னையின் பிரமாண்டமான 46 வது புத்தகத் திருவிழா, எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது என்பது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்விழாவின் போது, 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்த தாகவும், 16 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றதாகவும், பபாசியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  

இப்புத்தகத் திருவிழா முதல் தடவையாகச் சர்வதேச புத்தகத் திருவிழாவாகவும் நடைபெற்றது. உகாண்டா, பிரான்ஸ், அர்மீனியா, மலேசியா, தான்சீனியா பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள், இவ்விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.

உலகின் பல மொழிகளிலிருந்து ஏராளமான படைப்புகள், ஏற்கெனவே மொழியாக்கம் பெற்றுத் தமிழுக்கு வந்துள்ளன. ஆனால் தமிழிலிருந்து உலகின் பிற மொழிகளுக்கு இதுவரை அதிக படைப்புகள் சென்று சேரவில்லை. இந்தச் சர்வதேச புத்தகத் திருவிழா நடத்தியதன் பலனாக பல மொழிபெயர்ப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக, பபாசி தெரிவித்துள்ளது. எனவே இனிமேல் தமிழின் படைப்புகள் பல்வேறு நாடுகளுக்கு மொழிமாற்றம் பெற்று, உலகளவில் கவனம் பெறும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

சென்னையின் புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து திருப்பூரில் புத்தகத்திருவிழா துவங்கி நடைபெற்றது. அச்சமயம் விழா மேடையில் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம், மேடையில் 50 சிறார் நூல்களை, 50 சிறுவர்களை வைத்து வெளியிட்டது. இவற்றை 50 சிறுவர்களே பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் குழந்தைகளை அவசியம் உங்கள் ஊரில் நடைபெறும் புத்தக விழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள். உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அதுபோல மனநலனுக்கான பயிற்சி, புத்தக வாசிப்பே. எந்நேரமும் செல்போன், கம்ப்யூட்டரில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை அவற்றிலிருந்து மீட்டுப் புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தினால், அது வாழ்நாள் முழுக்கச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். அறிவு வளர்ச்சிக்கும், மன முதிர்ச்சிக்கும் வழி வகுக்கும்.

சுட்டி உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் வெளியாகியுள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைத் தேர்வு செய்து வாங்கிக் கொடுப்பது மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளின் போது, கதைப்புத்தகங்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

சுட்டி உலகம் காணொளியில் தமிழில் பாடக்கூடிய சிறந்த பாடல்கள் வெளியாகியுள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்துப் பாடச் செய்யுங்கள். தமிழைச் சரியாக உச்சரிக்கவும், தமிழ்ச் சொற்கள் பலவற்றைக் கற்றுக் கொள்ளவும், இது உதவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்!

நட்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: