தனக்குத் தானே பெயர் வைத்தவன்!

Pudhuvellam2_pic

டாக்டர் அகிலாண்ட பாரதி

புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி..

எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட, அதில் தேறியதால் நிரந்தரப் பணிக்காக புதிதாக ஒரு ஊருக்குச் செல்ல வேண்டும்.

எனக்குக் கலந்தாய்வில் கிடைத்த இடம், வட்டாரத்தில் ‘பிரச்சனை பிடித்த ஊர்’ என்று பெயர் வாங்கிய ஊர். கண்டிப்பாக வீட்டுக்கு ஒருவர் மேல் ஏதாவது கோர்ட்டில் கேஸ் நடக்கும். பல பேர் சிறையில் இருப்பார்கள்; சிறுவர் பெரியவர் என்றில்லாமல், அடிதடி வெட்டுக் குத்தால் ஏற்பட்ட காயத் தழும்புகள் ஊரில் எல்லாரின் மேலும் இருக்கும்.

“அந்த ஊருக்கா வேலைக்குப் போறீங்க? போகாதீங்க” என்றார்கள் பழைய ஊர்க்காரர்கள். பல சிரமங்களைச் சந்தித்தாலும், மேற்படிப்பிற்குச் செல்லும் வரை, ஐந்து வருடங்கள் அந்த ஊரில் தான் பணிபுரிந்தேன்.

இதே போன்ற பெயரை வாங்கிய இன்னொரு கிராமம் அது. வாகன வசதிகள் இல்லாமல் நடந்தே பயணப்பட்ட அந்த நாட்களில், அங்குள்ள பலர் வழிப்பறி செய்து கொண்டிருந்தார்களாம். அந்த ஊர்க்காரர்கள் என்றாலே, “வாடகைக்கு வீடு கொடுக்காதீர்கள்; உடன் பழகாதீர்கள்; ஏதாவது வம்பு தும்பு வந்துவிடும்” என்று வெளிப்படையாகவே எச்சரிப்பது வழக்கம்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த ஊரில் பிறந்து இப்போது மருத்துவம் படித்து முடித்த, ஒரு பெண்ணைச் சந்தித்தேன். “எங்க ஊர்ல இருந்தா சரிப்படாதுன்னு நாங்க ஒன்னாம் வகுப்பு படிக்கும் போதே, எங்க பேரண்ட்ஸ் ஊரைக் காலி பண்ணி வேற ஊருக்குப் போயிட்டாங்க. இன்னமும் எங்க ஊர்ல இருந்து எஸ்கேப் ஆயிடணும்னு தான், நிறைய பேர் முயற்சி பண்றாங்க” என்றார்.

அண்மையில் அந்த ஊரில் நெடுநாட்கள் பணிபுரிந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நான் வேலைக்குச் சேர்ந்த அதே காலகட்டத்தில், நான் சொன்ன இரண்டாவது ஊரில் வேலைக்குச் சேர்ந்தவர் அவர். மிகுந்த அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர். நேர்மையான ஆசிரியர்.

“வளர்ச்சி அடையாத ஊர், என்றால், பல இடைஞ்சல்கள் வந்திருக்கும், அதையும் மீறி உங்களுக்கு மன நிறைவை சில சம்பவங்கள் கொடுத்திருக்குமே, அதைச் சொல்லுங்கள்” என்று கேட்டேன்.  சற்று நேரம் யோசித்தவர், சொல்லத் தொடங்கினார்:-

“முதல்ல நீங்க சொல்ற மாதிரி தான், எப்படியாவது இந்த ஊரை விட்டுப் போயிடனும், அரசாங்க வேலை கிடைச்சா நல்லது அப்படிங்கிற மாதிரி மனநிலைல அந்த ஊர் மக்கள் இருந்தாங்க. இது சரியா, மாற்றத்தை விரும்புறவங்க ஏன் ஊரை விட்டுப் போகணும்னு நினைக்கணும், அது தவிர வேற வழி இல்லையான்னு யோசிப்பேன்.

ஆரம்பப் பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளியா அப்பதான் தரம் உயர்த்தியிருந்தாங்க. அங்கே படிச்ச ஒரு பொண்ணு பத்தாவதுல மாநிலத்திலேயே ஆங்கிலப் பாடத்துல முதலாவதாக வந்தா. அவளுடைய முயற்சி தான் அதிகம். இருந்தாலும் அவ வார்த்தைக்கு வார்த்தை, உங்களால தான் சார்னு என்னைக் காரணமா சொல்லுவா.

அப்படியே நிறைய மாணவர்கள் என்கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சாங்க. படிப்பு முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருந்த இளைஞர்களும், நல்ல அன்பா பேசுவாங்க. அப்ப தான் எனக்கு ஒன்னு தோணுச்சு, இந்த ஊர்ல ஒரு நூலகம் இல்லையே! அது இருந்தா நிறைய பேருக்கு உபயோகமா இருக்குமேன்னு நினைச்சேன். பக்கத்துல உள்ள பெரிய ஊர்ல இருக்குற தலைமை நூலகர் கிட்ட “அரசு நூலகம் அமைக்க, என்ன செய்யணும்?”னு கேட்டேன்.

முதல்ல பஞ்சாயத்தில் ஒரு தீர்மானம் போடணும், குறைந்தது 200 பேரையாவது உறுப்பினர்களாச் சேர்க்கணும், அப்புறம் நூலகத்துக்கு ஒரு கட்டடம் ஊரிலிருந்து கொடுக்கணும், இது எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுச் சொன்னா நாங்க சீக்கிரமே பகுதிநேர நூலகம் ஒன்னை, சேங்ஷன் பண்ணிடுவோம்னு சொன்னாங்க, அந்த இளைஞர்களோட முயற்சியினால் பஞ்சாயத்து தலைவரும், ஊர் மக்கள் நிறைய பேரும் வேகமாச் செயல்பட்டு ரொம்ப சீக்கிரமா நூலகம் வந்துருச்சு.

அதுக்கப்புறம் நிறைய பேர் அந்த நூலகத்துக்குப் புத்தகங்களைத் தானமாக் கொடுத்தாங்க. என்னோட பணிக்குச் சம்பந்தமே இல்லைன்னாலும், அந்த ஊர்ல நூலகம் அமைச்சதைப் பெருமையா நினைக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த அளவுக்கு, இப்ப அங்க வம்பு வழக்குகள் இல்லைன்னு உறுதியாச் சொல்லலாம். அதுக்கு ராமருக்கு உதவி செய்த அணில் மாதிரி, இந்த நூலகமும் ஒரு சின்னக் காரணம்” என்றார்.

ஒரு நூலகம் மக்கள் மத்தியில் கொண்டு வரும் மாற்றம் அலாதியானது. எங்கள் ஊரில் எனக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு நூலகம் என்பேன் நான்.

இன்று கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் உதவியால், ஒரே நேரத்தில் பல ஜன்னல்களைத் திறக்கிறோம். spotify-யில் பாட்டு கேட்டுக்கொண்டே முகநூலில் உலவுகிறோம். அழைப்பு வந்தால், முகநூலை ஒதுக்கிவிட்டு அழைப்பை ஏற்கிறோம். இணையம் வாயிலாகக் கதை படிக்கிறோம். கதை போர் அடிக்கிறதா, நிறுத்திவிட்டு வாட்ஸ் அப் பார்க்கிறோம். இப்படி கையடக்கக் செல்பேசிக்குள் பல சாளரங்கள், அவற்றின் வழியே பல்வேறு உலகங்களைக் காண முடிகிறது. இதை விட அதிகமான எண்ணிக்கையில் உலகைக் காண பல்வேறு சாளரங்கள், ஒவ்வொரு நூலகத்திலும் உள்ளன. என்றோ, யாரோ உணர்ந்து, ரசித்து எழுதிய பல கருத்துகள், நூல்கள் வாயிலாக நமக்காகக் காத்திருக்கின்றன.

ஒற்றை மனிதர் ஆண்டுக்கணக்காய்த் தோண்டி, ஊருக்கென ஒரு குளத்தை உருவாக்கினார் என்று படித்திருக்கிறோம். ஒரு சில மனிதர்கள் சேர்ந்து மலையைக் குடைந்து தங்கள் ஊருக்கு பாதை அமைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். கணக்கில்லாமல் பணம் கடன் கொடுப்பவரை விட, தண்ணீர் இல்லாத ஊரில் அடிபம்பு அமைத்துத் தந்தவர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். அந்த வகையில் திடீரென மனதில் தோன்றிய சிறு பொறியை ஊதிப் பெரிதாக்கி, ஒரு நூலகம் கட்டித் தந்து சத்தமின்றிப் பலர் மனதில் மாற்றம் விளைவிக்க, இந்த ஆசிரியர் காரணமாய் இருந்திருக்கிறார்.

இன்னொரு கிராமம். இதில் முழுக்க முழுக்க விவசாயக் கூலிகள் தான். ஒருவருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது. அதில் இருப்பது ஒரே ஒரு ஆரம்பப்பள்ளி. “எங்க படிக்க அனுப்புறாங்க? சத்துணவு சாப்பிடத் தான் அனுப்புறாங்க” என்று சலிப்புடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மத்தியில் விடாமுயற்சியாக பலதரப்பட்ட மக்களை அழைத்துக் குழந்தைகள் மத்தியில் பேச வைக்கிறார், இன்னொரு ஆசிரியர்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள், விவசாயிகள், பொறியாளர்கள் என்று பலரை விருந்தினராக அழைத்து வந்து, பேச வைத்து அறிமுகம் செய்கிறார், அந்த ஆசிரியர். தத்தம் துறையில் வெற்றி பெற்ற பலரை மாணவர்கள் சந்திக்கும் போது, அவர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. தங்கள் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பதை ஓரளவு தெரிந்து கொள்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல, ‘அந்தப் பள்ளி மாணவர்களா? நல்லா படிப்பாங்களே!’ என்று பேச்சு கிளம்புகிறது. ஆறாம் வகுப்புக்குப் பக்கத்து ஊரில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி செல்ல வேண்டும். நுழைவுத் தேர்வு எழுதினால், ‘அந்த ஊர்ப் பசங்களா? நிச்சயம் பாஸ் ஆயிடுவாங்க’ என்ற நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கின்றனர்.

இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் இன்னொரு சிற்றூரின் ஆசிரியர் என்னிடம் நேற்று ஒரு சிறிய உதவி கேட்டார். அந்த ஊரில் ஒரு ஐந்து வயது சிறுவனாம். அப்பா முழு நேரக் குடிகாரர், அம்மாவுக்கு மனநிலை சரியில்லை. அந்தச் சிறுவனுக்கும் அவனுடைய மூன்றரை வயதுத் தம்பிக்கும், இன்னும் பிறப்புச் சான்றிதழ் வாங்கவில்லை. இருவரும் எங்கள் அரசு மருத்துவமனையில் தான் பிறந்திருக்கின்றனர். “கொஞ்சம் உதவி பண்ணுங்க, பர்த் சர்டிபிகேட் வாங்கிட்டா, எங்க ஸ்கூல்ல இந்த வருஷம் சேர்த்துடுவேன்” என்கிறார் அவர்.

இருவரும் அங்கன்வாடிக்குப் போய் வருகிறார்கள். அங்கு சேர்க்க ஏதாவது பெயர் வேண்டும் என்பதால், இரண்டு பேருக்கும் முனியசாமி, கௌதம் என்று அங்கன்வாடியில் பணி புரியும் ஆசிரியை தான் பெயர் வைத்திருக்கிறார். அருகில் வசிக்கும் அனைவரும் சொந்தக்காரர்கள் என்பதால், பிறப்புச் சான்றிதழும் இல்லாமல், பெயர் கூட ஒழுங்காக வைக்கப்படாமல் இருவரும் வளர்கிறார்கள்.

பிறப்புச் சான்றிதழ் வழங்கும் அலுவலரிடம் பேசி, அதற்கான முயற்சிகளில் இறங்கி, கிட்டத்தட்ட இதோ தயாராகிவிடும் என்கையில் இந்த ஆசிரியர் மீண்டும் அழைத்தார். “முனியசாமிங்குறது அந்த சத்துணவு டீச்சர் வச்ச பெயர் தான். பிற்காலத்தில் அவனுக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போகலாம், வேற நாலஞ்சு பேர் அவன் கிட்ட சொன்னேன். அதுல ‘கவிநேசன்’ அப்படிங்குற பேர், அவனுக்குப் பிடிச்சிருக்காம்” என்றார். தன் பிள்ளைக்குப் பெயர் வைக்க நியூமராலஜி படித்து, ஆயிரம் பேர்களை அலசும் மக்கள் மத்தியில், இப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்கள்.

இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றில் பெயர் சூட்டக்கூட, பொதுநலனில் அக்கறையுள்ள ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். அந்தச் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில் வருத்தம் கொள்ளும் மனது, இந்த நம்பிக்கை ஆசிரியர்களை நினைக்கையில் பெருமிதமும் கொள்கிறது.

இதோ இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சொந்தப் பிள்ளையின் மதிப்பெண்ணுக்குக் கூட இவ்வளவு சந்தோஷப் படாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர், “எங்க பிள்ளைங்க நாலு பேரு நூற்றுக்கு நூறு! எல்லாரும் ஆல் பாஸ்!” என்று பெருமையாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கிறார்கள்.

கடினமான சூழலிலும் போராடி, தன் மாணவர்களின் வளர்ச்சியே தம் மகிழ்ச்சி என்று வாழும் ஆசிரியர்களுக்குப் புதிய கல்வியாண்டு துவங்கும் இந்த சமயத்தில் ஒரு ராயல் சல்யூட்! தன் பெயரைத் தானே தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்று, முதன்முதலில் பள்ளிக்குள் நுழையவிருக்கும் கவிநேசனுக்கும், ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து!

(டாக்டர் அகிலாண்ட பாரதி கண்மணி இதழில் எழுதும் தொடரின் இரண்டாம் பகுதியை, அவர் அனுமதியுடன் இங்கு வெளியிட்டுள்ளோம்)

Share this: