பள்ளிக்குச் சென்ற பசுக்கள்!

Puthuvellam_pic

டாக்டர் அகிலாண்ட பாரதி எழுதிய ‘புதுவெள்ளம்’ தொடரின் மூன்றாம் பகுதி!

அரசுப்பள்ளியில் கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் குறித்தும், இடைநின்ற மாணவர் குறித்தும், அர்ப்பணிப்புடன் பணி செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்தும்  மருத்துவர் எஸ்.அகிலாண்ட பாரதி எழுதிய இறுதிப்பகுதி:-  

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் தரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரைகளை வாசித்த பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தூண்களில் ஒருவரான அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், தம் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

சென்ற கல்வியாண்டில் மட்டும் இரண்டு வித்தியாசமான மாணவிகளை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு சிறுமி பள்ளி வளாகத்திற்குள்ளாகத் தன் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுக் கொண்டு, ஓய்ந்த நேரத்தில் அவற்றை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு, மரத்தடியில் அமர்ந்து கொண்டே இருப்பாளாம். அந்தச் சிறுமிக்கு 12 வயது தான். புதிதாக அந்தப் பள்ளிக்குச் சென்ற நம் ஆசிரியைக்கு, ‘இவள் ஏன் இங்கு மாடு மேய்க்க வருகிறாள்? ஏன் படிக்க வரவில்லை?’ என்று நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்திருக்கிறது.

சிறுமியை நெருங்கிச் சென்று பேச முயன்ற போதெல்லாம், அவள் விலகி வெட்கத்துடன் ஓடியிருக்கிறாள். பின் மெல்ல மற்ற ஆசிரியர்களிடம் விசாரித்ததில், அவளுக்குத் தந்தை கிடையாது, பாட்டி, அம்மா மற்றும் இவள் ஆகிய மூவரும் தான் இருக்கின்றனர் என்றும், வயிற்றை நிரப்புவதற்கு மூவரும் வேலை செய்வது ஒன்றே வழி என்றும் தெரிந்திருக்கிறது.

அவளின் ஐந்து வயது முதலே, ஒவ்வொரு பள்ளியிலும் அவளது பெயர் இருக்குமாம்; ஆனால் பெயர் பெயராக மட்டுமே இருக்கும்; இவள் ஒரு நாளும் பள்ளிக்குச் சென்றதில்லை. ‘தனியே பொதுவெளியில் மாடு மேய்த்தால் பாதுகாப்பு கிடையாது என்பதால், பரந்து விரிந்த பள்ளி வளாகத்தில் மேய்த்துக் கொள்ளட்டும்; அப்படியே இங்கிருக்கும் புற்கள், செடிகளைச் சுத்தம் செய்தது போலவும் ஆயிற்று’ என்று பள்ளியில் விட்டுவிட்டார்களாம்.

ஒரு நாள் நம் ஆசிரியை சத்துணவு கூடத்திற்குச் சென்றிருக்க, அங்கிருந்த மிச்சம் மீதி உணவுகளைத் தன் மாடுகளுக்காக வாங்கிக் கொண்டு நின்றிருக்கிறாள், அந்தச் சிறுமி. அதுவும் அவளது வருகையின் இன்னொரு நோக்கம் என்றறிந்த ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர் மூலமாக அந்தப் பெண்ணிடம் லேசாக பேச்சுக் கொடுத்துத் தம் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.

தயங்கித் தயங்கி ஒரு நாள் வந்தவளை ஆசிரியரின் குடும்பமே அன்பாக கவனித்திருக்கிறது. ஆரம்பத்தில் ரொம்பவும் யோசித்தவளின், வாய்ப் பூட்டு ஒரு நாள் திறந்து கொள்ள, பேசியிருக்கிறாள், பேசியிருக்கிறாள் அவ்வளவு பேசியிருக்கிறாள். இதுவரை தன் மனதில் இருந்த அழுத்தங்கள், பயங்கள், தன் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மாற்றி, ஒருவரிடம் கொட்டி இருக்கிறாள்.

தலைமை ஆசிரியரிடம் இந்த பெண்ணைக் குறித்து ஆசிரியை பேசி,  சிறப்புச் சலுகைகள் அளித்து, பள்ளிக்கு அழைத்திருக்கின்றார். “உன் மாடுகளைத் தொடர்ந்து உள்ளேயே கட்டிப் போடலாம், ஏதேனும் அவசர வேலை என்றால், நீ எந்த நேரமானாலும் வெளியில் செல்லலாம், தாமதமாக  வந்தாலும் பரவாயில்லை” என்று அனுமதி தந்திருக்கின்றனர்.

பின்னர் அதே விஷயத்தை அவள் வகுப்பு மாணவர்களிடம் (பதிவேட்டில் அவளது பெயர் இருந்த வகுப்பு) சொல்லி, “இனிமே அவ உங்க பொறுப்பு, அவளுக்குச் சொல்லிக் கொடுங்க” என்றிருக்கிறார் ஆசிரியை. அ, ஆ கூட எழுதத் தெரியாத சிறுமிக்கு, வகுப்பே வழிகாட்டியாக மாற, அவர்களுடன் இருப்பது ஒன்றே போதுமானதாக இருக்கிறது, அவளுக்கு. “இப்பொழுது ஒன்றிரண்டு வார்த்தைகளை வாசிக்கிறாள், இவ்வளவு நாட்களாக இழந்திருந்த குழந்தைத்தனம் கொஞ்சம் அவள் முகத்தில் மீண்டிருக்கிறது” என்றார் ஆசிரியை.

அவர் சமீபமாகச் சந்தித்த இன்னொரு நபர் ஒரு வளரிளம் பெண். ஒன்பதாம் வகுப்பு முடித்த நிலையில், வீட்டினர் கண்காணிப்பில்லாததால் ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவனின் பொய் வார்த்தைகளை நம்பி அவனுடன் சென்றிருக்கிறாள் இந்தப் பெண். அவன் கைவிட்டு விட்டான். அவளது சக தோழிகள் அனைவரும் இப்பொழுது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் பெருமையாக நின்றிருக்க, இவள் கையில் குழந்தையுடன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நிற்கிறாளாம். “குழந்தையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், மீண்டும் அவள் படிக்க வரட்டும்” என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் நம் ஆசிரியை.

எங்கள் அரசுப் பணியிலும் நாள் தோறும் இப்படி இடைநின்ற மாணவர்களையும், விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய்த் தவறி நிற்கும் சிறுவர் சிறுமிகள் பலரையும் நாங்கள் பார்க்கிறோம்.

எப்போதும் தாய் தந்தையர் அரவணைப்புடன் மருத்துவமனைக்கு வருவான், ஒரு இளைஞன். அவன் சில மாதங்கள் முன்பாக என்னிடம் தனியாக வந்தான். “ரெண்டு மாசம் ஸ்கூலுக்குப் போகல. மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்தா, பன்னிரெண்டாம் வகுப்பு எக்ஸாம் எழுத விடுறேன்னு சொன்னாங்க, ஏதாவது எனக்கு உடம்பு சரியில்லைன்னு போட்டு சர்ட்டிபிகேட் தாங்களேன்” என்றான்.

“உனக்கு என்ன உடம்புக்கு? நீ இப்ப ரொம்ப நாளா வரலையே! உங்க அம்மா அப்பாவுக்கு விஷயம் தெரியுமா?” என்று நான் கேட்க, “இல்ல நானா தான் ஸ்கூலுக்குப் போகலை.. அவங்களுக்குத் தெரியாது” என்றவனிடம், அடுத்தடுத்து நான் பிடிவாதமாக சில கேள்விகளைக் கேட்டு அவன் பதிலை எதிர்பார்த்து நிற்கவும், “இல்ல ஸ்கூலுக்குப் போறேன்னு தான் கிளம்பி வருவேன். அப்புறமா பசங்க கூட சேர்ந்து, அங்க இங்கன்னு சுத்தப் போயிட்டேன்” என்றான்.

இத்தனை வருட அனுபவத்தில் அவனது உதடுகளின் நிறமே அவனது புகைப்பழக்கத்தைப் பற்றிச் சொல்லியதை, என்னால் உணர முடிந்தது. வேறு சில உடலியல் மாற்றங்கள் மது மற்றும் பிற போதை பழக்கங்களும் இருக்கலாம் என்றும் சொல்லின. பெற்றோரை வரவழைத்து எடுத்துச் சொல்லி, அவனது தீய பழக்கங்களுக்கான சிகிச்சையையும் ஆலோசனையையும் கொடுத்தோம்.

மருத்துவ விடுப்புக்காகத் தானே வந்திருந்தான், போதைப்பழக்கம் காரணமாகத் தான் அவன் வரவில்லை என்றும், சிகிச்சை எடுத்தான் என்றும் சான்று வழங்கினோம், ஒரு நல்லாசிரியரின் உதவியுடன் அணுகியதால் தேர்வெழுத பள்ளி நிர்வாகம் அனுமதித்தது. இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில் தேறியும் விட்டான் அவன்.

இத்தனை நல்முயற்சிகளை, பாடம் கற்பிப்பதைத் தாண்டிய முனைப்புகளை அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் ‘ஓப்பன் சீக்ரெட்’ என்று சொல்வார்களே, அதைப் போல அனைவருக்கும் தெரிந்தவைதான்.

அரசுப் பள்ளிகள் சற்றே பின்தங்கி, தனியார் பள்ளிகளின் கை ஓங்க ஆரம்பித்த சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, ஓரளவு நன்றாகப் படிக்கும், எப்பொழுதும் எழுவது சதவீதத்திற்கு மேல் வாங்கும் என்னுடைய நண்பரின் மகள் ஒருத்தி புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் படித்தாள். ஒரு நாள் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், “எங்க ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் 90% க்கு மேல மார்க் வாங்குறாங்க அப்படின்னு சொல்றது தான் எங்களுக்கு முக்கியம். பேப்பர் அட்வர்டைஸ்மென்ட்ல கடந்த அஞ்சு வருஷமா அப்படித்தான் போடறோம். அதனால நீங்க இங்க ஸ்கூல்லையே படிச்சாலும் உங்க மகளை டுடோரியல்ல படிச்ச மாதிரி கணக்குக் காட்டி பிரைவேட் கேண்டிடேட்டா தான் எக்ஸாம் எழுத வைப்போம். சம்மதமா?” என்றனர்.

“அதிர்ந்து போன உறவினர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதி நேரத்தில் இப்படிச் சொன்னால் என்ன செய்வது? வேறு வழியின்றி அதற்கு உடன்பட்டார்கள். எல்கேஜி முதல் அதே பள்ளியில் படித்த அவள், பன்னிரண்டாம் வகுப்பில் வேறெதோ ஒரு டுடோரியலில் படிப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டுத் தேர்வெழுதினாள். வழக்கத்தை விட அவளுடைய மதிப்பெண்கள் குறைவாக இருந்தன. ‘உயர் கல்வி படிப்பேன், வேலைக்குப்‌ போவேன்’ என்று உத்வேகத்துடன் படித்த அவளிடம் அதன் பின் பழைய சுறுசுறுப்பு இல்லவே இல்லை. ஏதோ ஒரு கல்லூரி, அதன் பின் திருமணம் என்று தன் சிறகுகளைத் தன்னுள் குறுக்கிக் கொண்டாள்.

இன்னொரு மூத்த ஆசிரியர் ஒருவர். ஓய்வு பெற்ற பின்னும் தன் பள்ளியுடன் இன்னும் தொடர்பில் இருப்பவர். இன்னமும் ஆண்டுதோறும் இலவசமாக சில குழந்தைகளுக்கு டியூஷனும் சொல்லித் தருபவர். அவர்,

“ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதன் பள்ளி நன்றாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பள்ளியில் படித்து வெளியேறும் மாணவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களாவது கல்லூரி, பாலிடெக்னிக் போன்ற மேற்படிப்புகளில் சேர வேண்டும். அதில் பாதிப் பேராவது அரசு/ நல்ல தனியார் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒன்றிரண்டு டாக்டர்கள், விஞ்ஞானிகள் அவசியம் தேவை. இப்படி இருந்தால் தான் மற்ற மாணவர்களுக்கு அது அதிக ஊக்கத்தைக் கொடுக்கும். விவசாயம் செய்து அதில் வெற்றி காண வேண்டும் என்றாலும் அடிப்படைக் கல்வி மிக முக்கியம்” என்றார்.‌

எல்லா அரசு அலுவலகங்களையும் போல, சின்னச் சின்னப் பிரச்சனைகள் முளைத்து, ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் கதைகள், இன்றைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு நிலைக்கவும், இன்னும் படித்து முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவும், இருக்கும் பள்ளிகளை சீராக வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். அதில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதும் முக்கியம். ஆனால் அது ஏற்கெனவே பணியில் இருக்கும் பலருக்கும் புரிவதில்லை என்பதும் அந்த ஆசிரியரின் ஆதங்கம்.

“ஒவ்வொரு ஊரிலும் பொது நலனில் அக்கறை கொண்ட இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார் அவர். “நீங்கள் சொன்னால், அது சரியாகத் தான் இருக்கும்” என்றேன் நான்.

(முற்றும்)

மருத்துவர் எஸ்.அகிலாண்ட பாரதி கண்மணி இதழில் எழுதிய இத்தொடரின் மூன்றாம் பகுதியை, அவர் அனுமதியுடன் இங்கு வெளியிட்டுளோம்)

Share this: