ரேவதி (டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)

Revathi_writer

‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் சீடர் வரிசையில், சிறப்பான இடத்தைப் பெற்ற இவர், சிறார் இலக்கியத்துக்குச் சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது, இவர் எழுதிய ‘பவளம் தந்த பரிசு’ என்ற சிறுவர் கதைத் தொகுப்புக்குக் கிடைத்தது.

இவர் திருமணத்துக்கு வந்த அழ.வள்ளியப்பா, “பெரியவர்களுக்கு எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்; குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் மிகவும் குறைச்சல்; நீ இனிமேல் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதுவதில் அதிக கவனம் செலுத்து” என்று கூறினாராம். “இனிமேல் ரேவதி என்ற பெயரில் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதுகிறேன்; பெரியவர்களுக்கு வேறு பெயரில் எழுதுகிறேன்” என்று அவருக்கு வாக்குறுதி அளித்தாராம். இவர் பிறந்த நட்சத்திரம் ரேவதி என்பதால், இந்தப் புனைபெயர்.

இவர் ‘கோகுலம்’ சிறுவர் இதழின் ஆசிரியராகப் பதினொரு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்துச் அதனை நீண்ட காலம் சிறப்பாக வழிநடத்திய பெருமை இவருக்குண்டு.  ‘பூந்தளிர்’ சிறுவர் இதழில் வாண்டு மாமாவுக்கு உதவியாசிரியராக இருந்தார். 35 க்கும் மேற்பட்ட மத்திய, மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “கொடி காட்ட வந்தவன்” என்ற நாவல், அந்நாளில் குழந்தைகளிடையே மிகவும் பிரபலம். இது ஒன்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

தாம் சிறுவர் இலக்கியத்துக்கு வர, மூத்த எழுத்தாளர் ஜெ.எத்திராஜனும், அழ.வள்ளியப்பா மறைவுக்குப் பின் ‘கோகுல’த்தின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்க, டாக்டர் பூவண்ணனுமே காரணம் என்கிறார். இவரது படைப்புகள் நல்ல எண்ணங்களையும், சேவை மனப்பான்மையையும், சிறுவர் மனதில் பதிய வைப்பவை.

Share this: