புத்தகத் திருவிழாவுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்!

Bookfair_pic

06/01/2023 ல் சென்னையில் துவங்கியிருக்கும் 46 வது புத்தகத் திருவிழாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.

இக்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தற்காலத்தில் சிறப்பான பல சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன.  இன்னமும் பஞ்சதந்திரக் கதைகள்,தெனாலிராமன்,மரியாதை ராமன் கதைகள் என அரதப்பழசான கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி அரைத்த மாவையே அரைக்காமல், புத்தம் புதிய கதைகளைச் சொல்வது மிகவும் அவசியம். கடைகள் தோறும் எங்கு நோக்கினும் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் பழைய புராண இதிகாச கதைகளைத் தவிர்த்துக் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டக் கூடிய புத்தம் புதிய நூல்களை வாங்கிக் கொடுங்கள். 

பாடநூல்கள் அல்லாத கதைப்புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிக்கின்றன. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் இந்தக் கற்பனாச் சக்தியும், படைப்பூக்கமுமே முக்கிய காரணங்கள்.

சென்னை புத்தகத் திருவிழாவுக்குக் கிளம்பு முன்பு, தமிழில் என்னென்ன சிறார் நூல்கள் தற்காலத்தில் வெளிவந்துள்ளன? தற்காலத்துச் சிறார் எழுத்தாளர்கள் யாவர்? எந்தெந்த பதிப்பகங்கள் சிறுவர் நூல்களை வெளியிடுகின்றன? என்கின்ற விபரங்கள் தெரிந்திருந்தால் நல்லது. 

சிறுவர்களின் வயதுக்கேற்ற நூல்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வது மிக மிக முக்கியம். சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற 100 புத்தகங்களை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் விபரங்களுடன், ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளோம்.

வாசிப்பின் துவக்க நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குப் படங்கள் அதிகமாகவும், வார்த்தைகள் மிகவும் குறைவாகவும் உள்ள கதைப் புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள்.  எடுத்துக்காட்டுக்குப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் என்ற பதிப்பகம், ‘சித்திரச் சிறார்க் கதை’ என்ற தலைப்பில், வெளியிட்டுள்ள வண்ணப்படங்களுடன் கூடிய குழந்தைக் கதைகள் இப்பிரிவில் அடங்கும். எழுத்தாளர்கள் உதயசங்கர், யூமா வாசுகி போன்றோர் மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்திருக்கும் நூல்களும் தற்போது அதிகளவில் தமிழில் கிடைக்கின்றன.  ஆங்கில நூல்களை மட்டுமே வாங்காமல், தமிழ் நூல்களையும் வாங்கிக் கொடுத்தால், மேலும் பல பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிட முன்வருவார்கள். மேலும் நம் குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கத் தேர்ச்சி பெறுவது, மிகவும் முக்கியம். ஏனெனில் தமிழ் தான் நம் அடையாளம்!  நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நம் கையில் தான் உள்ளது.

குழந்தைகளே எழுதிய கதைகளும், தற்போது நூல் வடிவம் பெறுகின்றன. வானம் பதிப்பகம், லாலிபாப் சிறுவர் உலகம் போன்ற பதிப்பகங்கள் சிறுவர்களுக்காகச் சிறுவர்களே எழுதிய கதைகளை வெளியிட்டுள்ளன. 

நம் இளைய தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுக்க வாசிப்பை இப்போதே துவங்குவோம்!  ஒன்று கூடி உழைப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: