அழைக்கின்றது சென்னை புத்தகத்திருவிழா!

Book_exhibition_2023

பபாசியும், தமிழ்நாடு அரசும் இணைந்து 06/01/2023 முதல் 22/01/2023 வரை நடத்தும் சென்னையின் 46வது புத்தகத்திருவிழா, முதன்முறையாக 1000 அரங்குகளுடன், பிரம்மாண்ட பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது. இம்முறை குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பது, மிகவும் சிறப்பு.

தமிழின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதன்படி பொது நூலக இயக்ககம் மூலமாக நதி நாகரிக மரபு அடிப்படையில் காவிரி, பொருநை, சிறுவாணி,வைகை என்ற தலைப்புகளில், 4 இலக்கியத் திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்படுகின்றன.

2023 ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் சென்னை இலக்கியத் திருவிழாவினைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 06/07/2022 அன்று காலை 10 மணிக்குத் துவக்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களையும், அச்சமயம் வெளியிட்டுப் பேருரை நிகழ்த்தினார்.

படைப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம், பயிலும் அரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இந்த இலக்கிய விழாவில் இடம்பெறுகின்றன. இதில் இலக்கிய ஆளுமைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தவுள்ளனர். இவ்விழாவில் குழந்தைகளுக்கான இலக்கிய அரங்கமும் இடம் பெறுவது சிறப்பு. மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும், குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.  

வாய்ப்புள்ள அனைவரும் இந்த அறிவுலகத் திருவிழாவில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளை மறக்காமல் அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தைத் தொடரச் செய்யுங்கள்!

புத்தகம் வாங்குவது செலவல்ல! அது அறிவுக்கான முதலீடு! வளரும் தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுக்க, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்!

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: