பேய்த்தோட்டம்

Peithottam_pic

இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க வைக்கிறாள். அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நாளில், அவளுடைய குட்டித்தம்பி செடியைப் பிய்த்துப் போட்டு விடுகிறான். அவளது பிரச்சினையை, சக மாணவியான மாலா எப்படித் தீர்த்தாள் என்பது மீதிக்கதை.

‘மம்மி’ திகிலும், விறுவிறுப்பும் நிறைந்த கதை. இதில் முகிலன் என்ற சிறுவனை, ஓர் உருவம் பிரமிடுவைப் பார்க்க, வானத்தில் பறந்தபடித் தூக்கிச் செல்கிறது. எகிப்தியர்களின் ‘மம்மி’யைப் பற்றியும், பிரமிடுகள் பற்றியும், சிறுவர்கள் ஓரளவு தெரிந்து கொள்ள உதவும் கதை.

‘பச்சைக்கிளி’ என்பது, கிளி ஜோசியம் என்ற மூட நம்பிக்கைக்கு எதிராகச் சிறார்க்கு விழிப்புணர்வூட்டும் கதை. ‘பயம்’ என்ற கதை, பெண் குழந்தையின் மீதான பாலியல் சீண்டல் குறித்துப் பேசுகிறது.

‘இலந்தைப்பழ ஆயா’, சிறுவனுக்கும், பள்ளிக்கூடம் எதிரே இலந்தைப்பழம் விற்கும் ஆயாவுக்கும் இடையில், ஏற்படும் பாசத்தை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் கதை. இந்நூலின் தலைப்புக் கதையான ‘பேய்த்தோட்டம்’ மந்திரமும், மாயாஜாலமும் நிறைந்த கதை.

திகில்,மாயாஜாலம்,யதார்த்தம்,இயற்கையின் மீதான அன்பு என எல்லாமும் கலந்த கதம்பமாக இக்கதைப் புத்தகம் அமைந்துள்ளது. அருமையான வடிவமைப்புடன், அழகான ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

9+ சிறார் வாசிப்பதற்கேற்ற கதைப்புத்தகம். அவசியம் வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலைரூ 80/-
Share this: