தலையங்கம் – ஜனவரி 2024

Adithee_pic

நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சென்னை புத்தகத் திருவிழா துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏராளமான புதுப் புத்தகங்கள் இந்தத் திருவிழாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

இது அறிவுத் திருவிழா! ஜனவரி 3இல் துவங்கி 21 வரை நடைபெறும் இவ்விழாவுக்கு, எல்லோரும் அவசியம் ஒரு முறையாவது சென்று வர வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகளை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டும். என்னென்ன வகைமைகளில் புத்தகங்கள் வந்திருக்கின்றன? என்பதை அவர்கள் பார்த்து, அவர்கள் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுக்கும் புத்தகங்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுக்க வேண்டும்.  

புத்தகம் வாங்குவதைச் செலவாகப் பார்க்கக் கூடாது. அது அறிவுக்கான முதலீடு! உங்கள் குழந்தையின் கற்பனையைத் தூண்டி, படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்பவை கதைகளே! எனவே கதைப் புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். வயதுக்கேற்ற நூல்களை வாங்கிக் கொடுப்பது அவசியம். எங்கள் சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகம் உள்ளது.   

பாடப் புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு, குழந்தைகளின் பன்முகத் திறமையை வளர்க்கும். எனவே வீட்டுக்கொரு நூலகம் உருவாக்குவோம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: