உலகிலிருந்தே அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை, அரசாங்கம் ஆதவன் தலைமையிலான சிறுவர் கூட்டணியிடம் ஒப்படைக்கின்றது. ஆதவனும், அவன் நண்பர்களும் அத்தாவரத்தைத் தேடி நீலகிரிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுடைய சாகசப் பயணத்தில், ஆதிரை என்ற சிறுமியும் சேர்ந்து கொள்கின்றாள்.
நீலகிரியைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் அவர்கள் பயணம் செய்ய தோடர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனை அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது. இப்பயணத்தில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்னென்ன? அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? அத்தாவரத்தை அவர்கள் கண்டுபிடித்தார்களா? என்பதையெல்லாம் விறுவிறுப்புடன் சொல்லும் நாவல். ஏற்கெனவே இந்நூல் ஆசிரியர் எழுதி, சென்னை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பூதம் காக்கும் புதையல்’ என்ற நாவலில் வரும் கதாபாத்திரங்களே, இதிலும் வருகின்றார்கள்.
“சாகசங்களும், அறிவியல் உண்மைகளும், சமூகப்பார்வையும் கலந்த அற்புதமான நூல். கீழே வைக்கவிடாத வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நாவல். தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் துப்பறியும் அறிவியல் புதினம் என்ற வகைமையில் வெளிவரும் முக்கியமான நூலிது” என்று எழுத்தாளர் உதயசங்கர் இந்நூல் குறித்து எழுதியுள்ளார்.
நீலகிரியைச் சுற்றியுள்ள இயற்கை, அந்நிய மரங்களின் அறிமுகத்தால் அங்கு ஏற்பட்டுள்ள சூழல் சீர்கேடு, தோடர் இன மக்களின் வாழ்வியல் ஆகியவை குறித்து, வாசிப்பின் வழியே இளையோர் தெரிந்து கொள்ளவியலும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | இளையோர் நாவல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 9444960935 |
விலை | ரூ 80/- |