பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-5

Thedal_vettai_pic

‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள்

ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி

இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலைப்பட்டம் பெற்ற கவிஞர் செல்ல கணபதி அவர்களைக் குழந்தை இலக்கியப் பாதையில், திசை திருப்பியவர், அழ.வள்ளியப்பா.  ‘குழந்தைக் கவிஞரின் வாரிசு’ எனப் போற்றப்படும் இவர், தம் குருவின் மீதுள்ள பக்தியினாலும், அன்பினாலும், அவர் பெயரில் ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ எனும் அமைப்பை, டாக்டர் பூவண்ணன் அவர்களுடன் இணைந்து தொடங்கினார்.  அதன் வழி ஆண்டுதோறும் குழந்தை இலக்கிய விழாக்களைப் பல ஊர்களில் நடத்தி வருகிறார்.   

நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை இயற்றியுள்ள இவர், குழந்தை இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவரது ‘மணக்கும் பூக்கள்’ என்ற நூல், தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது.

தேடல் வேட்டை’ தொகுப்பில், 36 சிறுவர் பாடல்கள் உள்ளன. இதில் சிறுவர்க்குத் தெரிந்த எளிய சொற்களில், இனிய ஓசையுடன் பாடுவதற்கேற்றவாறு பாடல்கள் அமைந்துள்ளன. பள்ளிப் பருவத்தில் சிறுவர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நண்பர்களின் அவசியத்தை, ‘நண்பர்களே வாழ்க’ எனும் முதல் பாடல் எடுத்துரைக்கிறது:-

“உதைத்த காலையும் அணைக்கும் தாய்மைபோல்

உனக்கு வேண்டுமே ஒருநட்பு

உதைத்த காலையே சுமக்கும் செருப்புபோல்

உன்னை விலகிடா ஒருநட்பு

அப்பா அம்மா அண்ணன் தம்பி

ஆயிரம் சொந்தம் இருந்தாலும்

எப்போ தும்நம் உணர்வுகள் பகிர்ந்திட

இருக்க வேண்டுமே ஒருநட்பு!”

பிற உயிர்களின் பசியைப் போக்குவதன் அவசியத்தைப் ‘பசியைப் போக்கலாம்’ என்ற இரண்டாம் பாடல் எடுத்தியம்புகிறது. குருவி, காக்கா, கோழி என ஒவ்வொரு உயிராகச் சொல்லிக் கொண்டே வந்து, முடிவில் மானுடத்தின் பசியைப் போக்கவும், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியர்.  

குருவிக்கு அரிசி வீசலாம்

குருவிகள் கொத்தித் தின்னுமே

குருவிகள் தின்னும் ஓசையில்

கொஞ்சும் இசையைக் கேட்கலாம்.

……………

பசித்தவர் தம்மை அழைத்துநாம்

பரிவுடன் சோறு படைக்கலாம்

புசிப்பவர் மனலயம் குதிப்பதில்

புறப்படும் ஒலிநயம் ரசிக்கலாம்”   

அறிஞர் அண்ணாவின் பெருமைகளைச் சிறுவர்க்கு விளக்கும் பாடலிது:-

அண்ணா மேடைப் பேச்சால்

ஆளுமைச் சரித்திரம் படைத்தார்

அண்ணா பேசப் பேச

ஆட்சியே அவர்கை வசத்தில்

மனங்களைச் சுண்டி இழுக்கும்

மந்திரப் பேச்சால் அண்ணா

ஜனநா யகத்தை வென்றார்

சரித்திர முதல்வராய் ஆனார்”

‘நமக்குக் கிடைக்கும் கோடிப் புத்தகங்களில், சிறந்த புத்தகத்தை நாம் எப்படிக் கண்டறிவது?’ என்ற வினா தொடுத்து, விடைகளைப் பகிர்கின்றார் ஆசிரியர். “எது தான் சிறந்த புத்தகம்?” என்பது, பாடலின் தலைப்பு.

“புத்தகம் புத்தகம் புத்தகம்

புத்தகம் கோடிப் புத்தகம்

புத்தகம் தனிலே சிறந்த

புத்தகம் எப்படி அறிவது?

………………..

இன்று படித்தோம் நாளையும்

இன்னும் படிப்போம் பலமுறை

என்று சொல்லும் வகையிலே

இருப்பது சிறந்த புத்தகம்”

வலசை செல்லும் பறவைகள் குறித்த பாடல், “யாதும் ஊரே” என்ற தலைப்பில் அமைந்து தமிழரின் கொள்கையைப் பிரகடனப்படுத்துகிறது. இது சிறுவர்கள் பாடுவதற்கேற்ற, இனிய ஓசைநயமுள்ள பாடல்.  

“பறவைகள் வான எல்லையில்

பறந்து பறந்து திரியுமே

உறவென உலகைக் கொள்ளுமே

ஒவ்வொரு நாடும் செல்லுமே

…………

சிறகடிப் போமா பறவைபோல்

சிறகடிப் போமா பறவைபோல்

உறவென உலக மானுடம்

ஒன்றாய்ச் சேரும் வண்ணமாய்”

இத்தொகுப்பில் அறிவியல் கருத்துக்களை எளிய சொற்களில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பாடல்களும் உண்டு. “பழங்களின் பலகதை’ என்ற பாடலில், பழங்களின் கதைகளோடு, நியூட்டனின் கண்டுபிடிப்பும் இடம் பெற்றிருப்பது, மிகச் சிறப்பு:-

“……

பழுத்ததும் மேலே போகாமல்

பழங்கள் கீழே விழுவதும்ஏன்

நியூட்டன் இதனை யோசித்தான்

நினைத்தே உணர்ந்தான் புவியீர்ப்பை

நியூட்டன் இப்படி ஆய்வுசெய்ய

நிகழ்ந்தது ஆப்பிள் பழத்தால்தான்”

“மரம் நடுவோம்” என்ற பாடலில், மரம் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து, ஆக்சிஜனை வெளியிடும் என்ற அறிவியல் கருத்தும் இக்காலத்துக்குத் தேவையான சூழலியல் கருத்தும் இடம் பெற்றுள்ளன.

மானுடம் கழிக்கும் மூச்சினிலே

மண்டிடும் கார்பன் டை ஆக்சைடே

மானுடக் கழிவை உள்ளிழுத்து

மரங்கள் தருவதோ ஆக்சிஜனை”

இந்நூலின் தலைப்பான ‘தேடல் வேட்டை’ என்ற பாடல், ‘தேடுங்கள் கிடைக்கும்’ என்று, தேடலின் அவசியத்தை வலியுறுத்துகிறது

“தேடல் தேடல் தேடல்

தேடித் தேடிப் பார்த்தால்

தேடல் உள்ளவர் மனதில்

தெரியும் பற்பல உண்மை

……….

இன்னும் முயற்சி செய்வதன் அவசியம், ஆசிரியரின் மேன்மை போன்ற கருத்துகளைச் சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம், பாடலாகப் புனைந்து தந்திருக்கிறார் கவிஞர் செல்ல கணபதி.  இறுதியில் திருக்குறளின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஐந்து பாடல்கள், இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகள் பாடல் தொகுப்பு என்றால், அவர்களுக்கு மிகவும் பிடித்த நாய், பூனை,பறவை மற்றும் இயற்கை அழகு ஆகியவை குறித்த பாடல்களே, மிகுதியாக இடம்பெற்றிருக்கும். ஆனால் இத்தொகுப்பில்   நட்பின் சிறப்பு, தாத்தா பாட்டியின் அன்பு, தேடலின் அவசியம், பயணத்தின் சிறப்பு, உழைப்பின் மேன்மை, சிறந்த புத்தகத்தின் பண்பு, அண்ணாவின் புலமை போன்ற கருத்துகளுடன், அறிவியல் உண்மைகளும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

வெளியீடு:-

பழனியப்பா பிரதர்ஸ்

‘கோனார் மாளிகை’, 25 பீட்டர்ஸ் சாலை,

சென்னை 600014.

விலை ரூ 50/-

Share this: