கொ.மா.கோதண்டம்

Ko_Ma_Kothandam_pic

டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர்.

இவரது ‘ஆரண்ய காண்டம்’, ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’ போன்ற நூல்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் ஏலத்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியலைப் பேசுகின்றன. ‘ஆரண்ய காண்டம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல், குடியரசு தலைவர் விருது பெற்றது.

சிறுவயது முதல் இவருக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், வனங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் வழக்கமிருந்தது. மலைவாழ் மக்களுடன் கருங்காடு எனும் அடர்வனத்துக்கும் சென்றிருக்கிறார். இவர் மலைப்பகுதிகளில் தங்கி, பழங்குடி மக்களுடன் பழகி பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியதால் ‘குறிஞ்சிச்செல்வர்’ எனும் பட்டப்பெயர், இவருக்குக் கிடைத்தது.

 ‘குறிஞ்சிக்கு ஒரு கொ.மா.கோதண்டம்’ என்று ந.பிச்சமூர்த்தியும், ‘20 நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்’ என்று கரிசல் பிதாமகன் கி.ராஜ்நாராயணனும், இவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

சிறுவர் இலக்கியத்துக்கும், இவர் பங்களிப்பு அளப்பரியது. சிறுவர்க்கான படைப்புகளில் காட்டை முக்கிய களனாக வைத்து, பறவை, விலங்கு, தாவரம், மலைவாழ் மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார்.   

‘காட்டுக்குள்ளே இசைவிழா’ என்ற சிறுவர் நூலுக்கு, 2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கிடைத்தது. இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளில், விலங்குகளும், பறவைகளுமே கதாபாத்திரங்கள்.   

இவரது படைப்புக் கதாபாத்திரமான பழங்குடி பையன் நீலனுக்கு, அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரத்தில் சிறுவர் ரசிகர் மன்றம் செயல்படுகிறதாம்! இதிலிருந்து, இந்தக் கதாபாத்திரத்தை, எந்தளவுக்கு இரத்தமும் சதையுமாக இவர் உருவாக்கிக் கதைகளில் உலவவிட்டிருக்கிறார் என்பது புரியும்.

Share this: