இன்று (20/03/2023) உலகக் கதை சொல்லும் நாள்!

Story_telling

படம் நன்றி:- Pixabay

இன்று உலகமுழுதும் கதை சொல்லும் கலையைக் கொண்டாடும் நாள்! குழந்தைகளுக்குக் கதை சொல்லும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஸ்வீடன் நாட்டில் முதன்முதலில் மார்ச் 20 ஆம் தேதி, இந்நாள் கொண்டாடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஐந்து நாட்கள் கொண்டாட்டம் நிகழ்ந்தது. மெக்ஸிகோவிலும், மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஏற்கெனவே மார்ச் 20 ஆம் நாளைக் கதை சொல்லும் நாளாகக் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிருந்தது.

ஸ்வீடன் நாட்டிலிருந்து மற்ற ஸ்காண்டியநேவிய நாடுகளுக்கும், இந்த நாளைக் கொண்டாடுவது பரவியது. தற்போது கனடா, பிரான்ஸ் உட்பட, பல நாடுகள் இந்நாளைக் கதை சொல்லும் நாளாக அனுசரித்துக் கொண்டாடுகின்றார்கள்.

கதை சொல்வதற்கு, ஒவ்வோராண்டும் ஒரு நாளை ஒதுக்கி, சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடுவதிலிருந்து, கதை சொல்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்குக் கதை சொல்வதால், பல நன்மைகள் ஏற்படுகின்றன. பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான இடைவெளி குறைகின்றது; நெருக்கம் ஏற்படுகின்றது.

எந்நேரமும் அலைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மூழ்கிக் கிடப்பதால் குழந்தைகளின் கண்களும், மூளையும் பாதிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்ப, கதை சொல்வது உதவுகின்றது.

கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனைத் தூண்டி, அவர்கள்தம் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. பின்னாளில் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு, குழந்தைகளின் இந்தப் படைப்பாற்றலே முக்கிய காரணியாக இருக்கின்றது.

கதைகள் குழந்தைகளுக்கு, இந்தச் சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உளவியல் பயிற்சியை அளிக்கின்றன.

இப்படிக் கதை சொல்வதால் உண்டாகும் பயன்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். நம் தமிழ்ச்சமூகத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கம் தொன்றுதொட்டு, இருந்து வந்துள்ளது.  கூட்டுக் குடும்பத்தில் பாட்டி, தாத்தா, வழி வழியாக, அவர்களுக்குத் தெரிந்த நாட்டுப்புறக் கதைகளைச் சொல்வார்கள்.  இடுப்பில் சுமந்து சாப்பாடு ஊட்டும் போது, அம்மா கதை சொல்வார். கதை கேட்கும் சுவாரசியத்தில்,குழந்தை அடம் பிடிக்காமல் சாப்பிடும். நிலாவில் வடை சுடும் பாட்டிக் கதைகள், அப்படி உருவானவை தாம்.  நிலாவைக் காட்டிச் சோறூட்டும் பழக்கம், சங்கக் காலத்திலேயே இருந்திருக்கிறது!

கதை சொல்லிகள் அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்!

Share this: