தலையங்கம் – மார்ச் 2023

Editorial_March_23

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில் இது முதல் புத்தகக் காட்சியாம்! சென்னைக்கு வரமுடியாத புத்தகப் பிரியர்களுக்கு, இது வரப்பிரசாதம்! உள்ளூரிலேயே குழந்தைகளை அழைத்துச் சென்று பல்வேறு புத்தகங்களைப் பார்த்து, அவர்களுக்குப் பிடித்ததை வாங்கித் தருவது, உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்!

தமிழில் தற்காலத்தில் சிறுவர்க்காக எண்ணற்ற புத்தகங்கள் வெளியாகின்றன.  ஆங்கிலப் புத்தகங்களோடு, தமிழ்க் கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளை வாசிக்கச் செய்யுங்கள்.   பெரும்பாலோர் ஆங்கிலப் புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைப் பெருமையாக எண்ணுகின்றனர்.  ஆனால் குழந்தைகளின் சிந்தனைத் திறனும், படைப்பூக்கமும் சிறக்க வேண்டுமாயின், தாய்மொழியில் குழந்தைகள் வாசிப்பது அவசியம்.

தாய்மொழியே மனிதனின் சிந்தனைகளின் திறவுகோல் என்பதாலும், படிப்படியான இயல்பான மூளை வளர்ச்சிக்குத் தாய்மொழி மிகவும் அவசியம் என்பதாலும் தான், ஒவ்வோராண்டும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.  

ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை; அவற்றோடு சில தமிழ்ப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுங்கள்.  அதிகமாக விற்பனையானால் தான், மேலும் பல புதிய புத்தகங்களைத் தமிழில் வெளியிட பதிப்பாளர்கள் முன்வருவார்கள். குழந்தைகளுக்காகத் தமிழில் எழுதுபவர்களுக்கும் உற்சாகம் ஏற்படும்.

குழந்தைகளின் பிறந்த நாளை கேக், பிரியாணி என ஆயிரக்கணக்கில் செலவழித்து ஆடம்பரமாகக் கொண்டாடும் நாம், புத்தகங்களுக்காகச் சில நூறு செலவு செய்வதற்குத் தயங்குகிறோம். குழந்தைகளின் பிறந்த நாளுக்குப் புத்தகங்கள் பரிசாகத் தரும் வழக்கத்தை, இப்போதாவது நாம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் வயதுக்கேற்ப புத்தகங்களைத் தேர்வு செய்ய, எங்கள் சுட்டி உலகத்தில் வயது வாரியான புத்தக அறிமுகம் செய்துள்ளோம். புத்தக் காட்சிக்குப் போகுமுன்பு ஒரு முறை புத்தகங்கள் & பதிப்பகங்கள் பற்றிய அறிமுகத்தைப் படித்துச் சென்றால், வாங்குவதற்கு உதவியாயிருக்கும்.

மேலும் ‘சுட்டி உலகம்’ காணொளியில், பாடல்களும், கதைகளும் வெளியாகின்றன.  இக்காலக் குழந்தைகள் பெரும்பான்மையான நேரம் செல்போனிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடப்பதால், அவர்களுக்குப் பேச்சு வர மிகவும் தாமதமாகின்றது. எனவே குழந்தைகள் பாடல்கள் பாடி வளர்வது, அவர்கள் பேச்சுத் திறனைத் துரிதப்படுத்தும்.  

மேலும் இப்பாடல்களைப் பாடக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால், தமிழ் உச்சரிப்பு மேம்படும்; பல புதிய சொற்களை எளிதாக அவர்கள் கற்றுக் கொள்வர்.  எங்கள் காணொளியில் உள்ள ‘தாத்தா தைச்ச சட்டை’ போன்ற பாடல்களைப் பாடிப்பழகினால், நாக்குக்குச் சிறந்த பயிற்சியாகவும்(Tongue twister) அவை அமையும்.

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: