சுட்டி உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

ChuttiUlagambirth_pic

இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது.

இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில், வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக் கொடுக்கும் காணொளிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட விருக்கிறோம் என்பதை, மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகள், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழி யாகக் கொண்டு படிப்பதால், தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும், மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் தாய்மொழித் தமிழை, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்மொழிக் காணொளிகளை வெளியிட எண்ணியுள்ளோம்.

வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கும், தமிழைக் கற்றுக் கொள்ள விரும்பும் பிறமொழியினர்க்கும், இவை பயனுள்ளவையாயிருக்கும்.  இலக்கணச் சுத்தமான தமிழைப் போதிப்பது, எங்கள் நோக்கமல்ல; குழந்தைகளுக்குத் தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக, அடிப்படைத் தமிழைப் போதிப்பதே, எங்கள் நோக்கம்!

‘சுட்டி உலகம்’ காணொளியில், நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் பாடல்களும், கதைகளும் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. சில காணொளிகள் பதினேழாயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி. குழந்தைகள் இப்பாடல்களைப் பாடிப் பழகினால், பல புதிய சொற்களை எளிதாகக் கற்றுக் கொள்வதுடன், உச்சரிப்பும் திருத்தமாகும். நாக்குக்குப் பயிற்சியளிக்கும் நாபிறழ் பயிற்சிப் பாடல்களும் இதிலுண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன் குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வலைத்தளத்தைத் துவங்கினோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களைப் பற்றிய அறிமுகங்கள், இதில் வெளியாகியுள்ளன. வயதுவாரியான நூலறிமுகம் இதில் இருப்பதால், புத்தகக் காட்சிக்குப் போவதற்கு முன், சிறுவர் நூல் பெயர்களையும், பதிப்பகப் பெயர்களையும் பெற்றோர் தெரிந்து கொண்டு போனால் தம் குழந்தைகளின் வாசிப்புக்கேற்ற நூல்களை, எளிதாகத் தேர்வு செய்ய முடியும். 

தற்காலத்தில் தமிழில் எழுதும் சிறார் எழுத்தாளர் யாவர்? என்னென்ன நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறுவர் நூல்களை வெளியிடுகின்றன? போன்ற விபரங்களைச் சுட்டி உலகத்தில் பெற முடியும்.

சுருங்கச் சொன்னால், பதிப்பகங்களுக்கும், பெற்றோருக்குமிடையே ஒரு பாலமாக எங்கள் ‘சுட்டி உலகம்’ செயல்படுகின்றது. குழந்தைகளுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பை ஊக்குவிப்பதே, எங்கள் முக்கிய நோக்கம்.

தொடர்ந்து பயணிப்போம்,

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: