அற்புத எறும்பு

Arputhaerumbu_pic

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர்.

தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.

இந்த உலகம் மனிதருக்கானது மட்டுமல்ல, எல்லா உயிர்க்குமானது என்பது, இந்நாவலின் அடிப்படைக்கரு. இந்தக் குட்டிப் படைப்பாளர்களின் இயற்கையின் மீதான நேசம், இந்நாவலில் தெளிவாக வெளிப்படுகின்றது.

அர்ஜெண்டினா காட்டில் முயல் அளவுள்ள அதிசய எறும்புகள் உள்ளன. அதில் ஒரே ஒரு எறும்பின் தலையிலிருந்த கொம்பில், இரண்டு வைரங்கள் இருக்கின்றன. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு எட்டு நண்பர்கள் பிரேசில் நாட்டிலிருந்து, அக்காட்டுக்குச் செல்கின்றார்கள்.

அந்த எறும்பு தலையிலிருந்த வைரங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து விற்றுப் பணக்காரராக வேண்டும் என்பது, அவர்கள் திட்டம்.  அவர்கள் அக்காட்டுக்குச் சென்று எறும்பைக் கண்டுபிடித்தார்களா? அவர்களிடமிருந்து தப்புவதற்குப் புத்திசாலி எறும்புகள், என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டன? கடைசியில் வைரத்தைக் கைப்பற்றினார்களா? முடிவில் நண்பர்கள் என்ன ஆனார்கள்? என்பதைச் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், இந்நாவல் விவரிக்கின்றது.

எறும்பு முயல் அளவுக்குப் பெரிதாக இருக்கின்றது; எறும்பு தலையில் வைரம் இருக்கின்றது. ஓர் எறும்பு டெக்னாலஜி ராட்சதனின் மார்பில் இருந்த பட்டனை அமுக்கி, வெடிக்க வைத்து, அவனைச் சிதறடிக்கின்றது. குழந்தைகளின் விநோதமான லாஜிக் இல்லாத கற்பனைக்கு எல்லையே கிடையாது என்பதை, இந்நாவல் மெய்ப்பிக்கின்றது. அது தான் நம் வாசிப்பைச் சுவாரசியமாக்குகிறது.

இயற்கையில் ஏற்படக்கூடிய பேரிடரை முன்கூட்டியே உணர்ந்து, எறும்புகள் இடமாற்றம் செய்யும் என்ற கருத்தையும், இக்கதையுடன் சேர்த்துச் சொல்லியிருப்பது சிறப்பு.

பொருத்தமான ஓவியங்களுடன் தரமான வடிவமைப்பு. சிறுகுழந்தைகள் வாசிப்புக்கேற்ற எளிய மொழி நடை. அவசியம் வாங்கி, உங்கள் விட்டுச் சுட்டிகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.   

வகைசிறார் நாவல்
ஆசிரியர்கள்பா. ஸ்ரீராம் & பா.மதிவதனி
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 ( +91) 9176549991
விலைரூ 40/-
Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *