என் பெயர் வேனில்

Enpayar_pic

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் நாவலை எழுதியுள்ளார்.

ஏற்கெனவே ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பை, இவர் வெளியிட்டுள்ளார். இவரது ‘பூக்களின் நகரம்’ என்ற சிறுவர் கதை, மகாராஷ்டிரா அரசின் தமிழ்ப்பாடப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நாதன் என்ற வரிக்குதிரை, ஒரு தேனீக்கு ‘வேனில்’ என்றும், தேன்சிட்டுக்கு ‘மதி’ என்றும் பெயர் வைக்கின்றது. தேனீ தன் கூட்டையும், நண்பர்களையும் காணாமல் தேடி அலைகின்றது. தேன்சிட்டு அதற்கு உதவுதாகச் சொல்லிக் கூடவே பறக்கின்றது.

நாதன் ஒரு விலங்கு காட்சி சாலையிலிருந்து தப்பித்துக் காட்டில் தன் குடும்பத்தைத் தேடுகின்றது. நாதன், வேனில், மதி ஆகிய மூன்றும் சேர்ந்து செல்கையில், வழியில் தெம்பா என்ற யானையைச் சந்திக்கின்றன. இந்த நான்கும் சேர்ந்த குழுவுக்கு ‘லட்டு’ என்று பெயர். அடுத்து இவை சாம்பார் மானையும், அணில்களையும் சந்திக்கின்றன. அந்த மானும், தன் குட்டிகளைக் காணாமல் தவிக்கின்றது.

இடையில் மனிதர்கள் காட்டுக்குள் வந்து, விலங்குகளுக்கு மயக்க மருந்து ஊசி போட்டுக் மயக்கமடைந்த விலங்குகளைக் கூண்டுகளில் ஏற்றிச் செல்கிறார்கள். அவர்களிடமிருந்து இந்த விலங்குகள் தப்பித்தனவா? வேனில் தேனீ தன் கூட்டைக் கண்டுபிடித்ததா? நாதனும், தெம்பா யானையும் அவற்றின் பெற்றோருடன் இணைந்தனவா? மான் தன் குட்டிகளைக் கண்டுபிடித்ததா? போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள, நாவலை வாங்கி வாசியுங்கள்.

என்னிடம் நிறைய தேனிருக்கு வா” என்று ரோஜாப்பூ, தேனீயை அழைக்கின்றது. “உன் கூட்டைக் கண்டுபிடிக்க, நான் உதவவா?” என்று தேன்சிட்டு, தேனீக்குத் தானாகவே வலிய உதவ முன்வருகின்றது. வெளவால் டாக்டர், மான் காயத்துக்குப் போட ‘ஓரிதழ் தாமரை’ என்ற செடியைக் கேட்டவுடன், வரிக்குதிரை ஓடிப்போய் ஆற்றில் இறங்கி எடுத்து வருகின்றது. (இந்தச் சின்ன வயதில் ஆசிரியருக்கு மூலிகை செடிகள் பற்றித் தெரிந்திருப்பது வியப்பு!) இப்படிக் காட்டில் உயிரினங்கள் எல்லாம், கதை முழுக்க ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதாகக் எழுதியிருப்பது சிறப்பு. “

சாம்பார் மான் என்று மான் தன் பெயரைச் சொன்னவுடன், “ஹா ஹா! என்னது சாம்பாரா? இட்லிக்குத் தொட்டுச் சாப்பிடுவாங்களே, அதுவா?” என்று வரிக்குதிரை கேட்பது, குழந்தைகளுக்கே உரித்தான நல்ல நகைச்சுவை.  

எளிய நடையில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நாவலை எழுதியுள்ளார் ரமணி. கெட்டி அட்டையில், சிறப்பான படங்களுடன் அருமையான வடிவமைப்பு.  எழுத்தாளர் ரமணிக்குப் பாராட்டுகளும். வாழ்த்துகளும்!    

வகைசிறார் நாவல்
ஆசிரியர்ரமணி
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 (+91) 91765 49991
விலைரூ 122/-
Share this: