பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-8

Vikram_pic

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்

ஆயிஷா இரா.நடராசன்

மருத்துவத்துறை அற்புதங்களையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகளையும், ‘நவீன விக்ரமாதித்தன் கதைகள்’ வழியே சொன்ன இந்நூலுக்கு, 2014 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்தது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதி இருக்கும் ஆயிஷா இரா.நடராசன், அறிவியல் புனைகதைகள் எழுதுவதில், தமக்கென்று ஓர் தனியிடம் பிடித்திருக்கிறார்.

விக்கிரமாதித்தன் கதைகளை, நம்மில் பெரும்பாலோர் வாசித்திருப்போம். அரசனான அவன் தோளில், ஒரு வேதாளம் எப்போதும் பயணிக்கும். அவனிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி முருங்கை மரத்திலோ, மயானத்திலுள்ள புளிய மரத்திலோ ஏறிவிடும். அப்படி ஏறும்போது தன்னோடு பாதி எரியும் பிணத்தையும் எடுத்துச் சென்றுவிடும். 

விக்கிரமாதித்தன் அப்பிணத்தை மயான மேடையில் எரிப்பதற்கு எடுத்துச் செல்லும் போது, வேதாளம் அவனிடம் ஒரு கதையைச் சொல்லி, சில கேள்விகள் கேட்கும். அதற்குத் திருப்தியான பதிலை அவன் சொல்லாவிட்டால், அவன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று பயமுறுத்தும். எனவே வேதாளம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், விக்கிரமாதித்தன் விளக்கம் கொடுப்பான். ஆசிரியர் இந்தப் பழைய பாணியைத் தற்கால மருத்துவ அறிவியல் உண்மைகளைச் சொல்ல, உத்தியாகப் பயன்படுத்தியிருப்பது புதுமை.

இத்தொகுப்பில் எட்டுக்கதைகள் உள்ளன. ‘சர்க்கரைக் குண்டன்’ என்ற முதல் கதையில், சாப்பாட்டுப் பிரியனான சர்க்கரை குண்டன், சர்க்கரை நோய் வந்து அவதிப்படுகின்றான். மருத்துவர் ஆலோசனைப்படி சரியான ஊசி எடுத்துக்கொள்ள மறுத்துக் கடைசியில் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததுக்குக் காரணம், அவன் செய்த பாவமா அல்லது விதியா என்று வேதாளம் கேட்கிறது.  

‘முட்டாள் வேதாளமே!’ என விளித்துப் பதில் சொல்லும் விக்கிரமாதித்தன் நீரிழிவு நோய் பற்றியும், அது ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் விளக்குகிறான். மேலும் இன்சுலீன் பற்றிக் கண்டுபிடித்துச் சொன்ன மருத்துவ ஆய்வாளர் பிரெடிரிக் பாண்டிக் வாழ்க்கை பற்றியும், அவர் ஆய்வு பற்றியும், விரிவாக எடுத்துரைக்கிறான். இக்கதையின் முடிவில் அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து குறித்த அட்டவணையும், உடலுக்குச் சரியான சக்தியைக் கொடுக்கும் உணவுப் பொருள் அடங்கிய அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளன.

நாய்க்கடி நந்திவர்மன்’ கதையில், நந்திவர்மனுக்கு நாய் கடித்து விடுகிறது.  அவன் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிடுகின்றான். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், அவன் ‘ஹைடரோபோபியா’ எனப்படும் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியாகிறான். இறுதியில் அவன் நாய் போலவே ஆனதற்குக் காரணம் விதியா என்று வேதாளம் கேட்க, விக்கிரமாதித்தன் வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் பற்றி விளக்கிச் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறான்.

மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் பற்றியும், மலேரியா கிருமியை அழித்தொழிக்க வழி கண்டுபிடித்து, நோபெல் பரிசு பெற்ற ரொனால்ட் ராஸ் பற்றியும் ‘மலேரியா மங்காத்தாள் கதை’ பேசுகின்றது.

‘மாரடைப்பு மாணிக்கத்தின் கதை’யில் இதயத்தின் பணி, அது பழுதாவதற்கான காரணங்கள், சராசரி இரத்தக் கொதிப்பின் அளவு, இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் இருதய மாற்று அறிவை சிகிச்சை செய்த கிறிஸ்டியன் பெர்னார்டு என்பவரின் கதையும், இதில் சொல்லப்படுகின்றது. முடிவில் மாரடைப்பின் அறிகுறி பற்றியும், அதற்கான முதலுதவி பற்றியும் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

அளவுக்கதிகமாகப் புகை பிடித்த ஒருவர், இறுதியில் புற்றுநோய் வந்து இறந்ததைப் பற்றி, ‘ரத்தப்புற்று ராவுத்தர் கதை’யில் வேதாளம் சொல்லி அதற்கான காரணம் செய்வினையா எனக் கேட்கிறது. செய்வினை வைப்பது, ஜென்ம சாபம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லும் விக்கிரமாதித்தன், புற்று நோய் வருவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லி, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்த ஜெர்ட்ருட் பில்லி எலியன் என்ற அம்மையாரின் சாதனைகளைப் பட்டியலிடுகிறான். புற்றுநோய்க்கான அறிகுறிகளும், அதைப் பற்றிய சில தகவல்களும் கதையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

மனித குலத்தையே அழித்துவிடுமோ என்று பயமுறுத்திய எயிட்ஸ் நோய் பற்றியும், அது வைரஸ் ஏற்படுத்தும் நோய் எனக் கண்டறிந்த மாண்டேக்னர் வாழ்வு பற்றியும், கூடுமானவரை கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தால், எயிட்ஸ் நோயிடமிருந்து தப்பமுடியும் என்ற அறிவியல் உண்மை பற்றியும், ‘எயிட்ஸ் ஏகாம்பரத்தின் கதை’ மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் ஹெச்.ஐ.வி கிருமி பரவும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

இதொகுப்பின் முடிவில் இடம் பெற்றிருக்கும் ‘காயகாந்தன் கதை’யில், நமக்கு ஏற்படும் காயங்கள் குறித்தும், உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்த ஃபிளெம்மிங் குறித்தும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். “காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?” என்ற அட்டவணையும் கதையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கதைகளின் வழியே மனிதர்களைத் தாக்கும் கொடிய நோய்கள் குறித்தும், அவை உண்டாவதற்கான காரணங்கள் குறித்தும், மருந்துகளைக் கண்டுபிடிக்கத் தம் வாழ்வைத் தியாகம் செய்த மருத்துவ ஆய்வாளர்கள் குறித்தும் சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும் அறிந்து கொள்ளலாம். பழைய விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் வழியே மருத்துவ அறிவியலை அனைவருக்கும் கொண்டு செல்லும் சிறப்பான முயற்சி.

வெளியீடு:-

புக்ஸ் ஃபார் சில்ரன், (பாரதி புத்தகாலயம்)

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.

044-24332424/2433924

செல் +91 9444960935.

Share this: