பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-7

Kattukulle_Isaivizha_pic

காட்டுக்குள்ளே இசைவிழா

ஆசிரியர் கொ.மா.கோதண்டம்

2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய ‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற சிறுவர் கதைத்தொகுப்புக்குக் கிடைத்தது. 

பெரியவர்களுக்கு 40 நூல்களும், சிறுவர்க்கு 30 நூல்களுக்கு மேலும் எழுதியுள்ள இவர், காடு, பறவை, விலங்கு, தாவரம், மலைவாழ் மக்களின் வாழ்வியல் ஆகியவை பற்றி, ஏராளமாக எழுதியிருக்கின்றார். சிறுவயது முதலே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், வனங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் வழக்கமுடைய இவர், மலைவாழ் மக்களுடன் கருங்காடு எனும் அடர்வனத்துக்கும் சென்றிருக்கிறார். மலைப்பகுதிகளில் தங்கிப் பழங்குடி மக்களுடன் பழகி பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியதால் ‘குறிஞ்சிச்செல்வர்’ எனும் பட்டப்பெயர், இவருக்குக் கிடைத்தது.

‘குறிஞ்சிக்கு ஒரு கொ.மா.கோதண்டம்’ என்று ந.பிச்சமூர்த்தியும், ‘20 நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்’ என்று கரிசல் பிதாமகன் கி.ராஜ்நாராயணனும், இவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. ‘பட்டுப்புழுவும், எட்டுக்கால் சிலந்தியும்’ என்ற முதல் கதையில், பட்டுப்புழுவுக்கும், சிலந்திக்கும் இரண்டில் எது உயர்ந்தது என்ற சண்டை வருகின்றது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவது ஒரு காகம்.

‘பசி போக்க உதவு’ என்பது குஞ்சுகளுக்காக உணவு தேடியலையும்  குருவியின் கதை. காக்கா தட்டிப்பறித்த உணவை, ஒரு பருந்து மீட்டுக்  குருவிக்கு உதவுகிறது.

‘கொசு, ஈ கூட்டு மாநாடு’ என்ற 3 வது கதையில், கொசுக்களும், ஈக்களும் மனிதர்களைக் கொன்றழிக்க மாநாடு போடுகின்றன. ஆனால் மனிதன் அடித்த கொசு மருந்து, அவற்றைக் கொன்றொழிக்கின்றது.

துன்புறும் உயிர்களைக் கண்டபோது’ என்ற கதையில், சாக்குக்குள் பிடித்து வைக்கப்பட்டிருந்த பருந்தை, எறும்புக் கூட்டம் விடுவிக்கிறது. அதற்கு நன்றிக்கடனாகப் புற்று கட்ட புது இடம் தேடியலைந்த அந்த எறும்புக் கூட்டத்துக்குப் பருந்து உதவிசெய்கிறது. (சிங்கமும் சுண்டெலியும் கதையை, இது நினைவுபடுத்துகிறது)

‘மனிதர்கள் இரக்கம் மிக்கவர்கள்’ என்ற கதையில், கூட்டிலிருந்து தவறிவிழுந்த தையல்சிட்டுக் குஞ்சை, தாத்தா மீண்டும் கூட்டில் எடுத்து விடுகிறார். சாதாரணமாகப் பறவைகளும், விலங்குகளும் மனிதர்களைச் சுயநலமிக்கவர்கள் என்று திட்டுவதாகத் தான், நாம் கதை படித்திருக்கிறோம். ஆனால் இதில் மனிதர்கள் இரக்கம் மிக்கவர்கள் எனப் பறவைகள் நினைப்பதாகக் காட்டப்பட்டிருப்பது புதுமை.

சேட்டைக்குட்டிகள்” என்ற கதையில், சிறுவர்கள் காட்டுக்குள் சென்று, பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள், தொலைநோக்கி வழியாகக் கரடி ஒன்றையும், சேட்டை செய்த அதன் குட்டிகளையும் கண்டு ரசிக்கிறார்கள்.

‘பச்சோந்திகளும் மாருதியும்’ என்ற கதையில், இரண்டு பச்சோந்திகளுக்கிடையே வரும் எல்லைத் தகராறைக் குரங்கு, புத்திமதி சொல்லித் தீர்த்து வைக்கின்றது.

‘நீலன் வந்தான்’ என்ற கதையில், ஆசிரியரின் பிரபல கதாபாத்திரமான பழங்குடியைச் சேர்ந்த நீலன் என்ற சிறுவன் வந்தவுடன், அவனைப் பார்த்துச் சிறுவர்கள் மகிழ்ச்சியாகப் பாடுகிறார்கள்:-

“நீலன் வந்தான் எங்கள் நீலன் வந்தான்

நெடிய மலைகள் சுற்றிவிட்டு நீலன் வந்தான்

பறவை விலங்கு வனங்கள் காட்ட நீலன் வந்தான்

பள்ளி மாணவர்க்கு நண்பன் நீலன் வந்தான்”

அவன் சிறுவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று, ஆற்றில் குளிக்க வைக்கிறான். வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மானைக் காப்பாற்றுகிறான்.  ஆனால் வெள்ளம் அதிகமாகிக் கரையேறமுடியாமல் தவிக்கும் அவனைச் சிறுவர்கள் காப்பாற்றுகிறார்கள்.

‘கருஞ்சிட்டின் தந்திரம்’, ‘ஆணவக் கரடியும் தந்திரக் குரங்கும்’ என்ற இரண்டும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவை. முதல் கதையில் ஒரு போட்டியில் பருந்தைக் கருஞ்சிட்டு தந்திரமாக ஏமாற்றி வெல்கிறது. இரண்டாவது கதைப்போட்டியில் கரடியைக் குரங்கு தந்திரமாக ஏமாற்றி வென்று அதன் ஆணவத்தைப் போக்குகின்றது. ‘புத்திசாலி நத்தை’ கதையிலும், போட்டியில் நத்தை எறும்பைத் தந்திரமாக வெல்கிறது.

சுத்தத்துக்குப் பரிசு’ என்ற கதையில், ‘வனத்தைச் சுத்தமாக வைத்திருப்பது யார்?’ என்ற போட்டி வருகின்றது. இதில் கழிவுகளைத் தின்று வனத்தின் தூய்மையைப் பராமரிப்பதில், என் பங்கே அதிகமென்று கழுகு, கழுதை, காகம் ஆகியவை வாதிடுகின்றன. இக்கதையில் ஆசிரியர் குழந்தைகளுக்குத் தெரியாத சாணிவண்டு பற்றிய செய்திகளைச் சொல்லியிருப்பது சிறப்பு.

இத்தொகுப்பின் இறுதியில் நூலின் தலைப்புக் கதையான ‘காட்டுக்குள்ளே திருவிழா’ இடம் பெற்றுள்ளது.  இதில் காட்டில் இருந்த எல்லா விலங்குகளும், பறவைகளும் சேர்ந்து சத்தம் பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் போட்டன. அந்த விவாத்தை முடித்து வைக்க அழைக்கப்பட்ட குரங்கு, வனத்தாய்க்கு இசையில் ஆர்வம் அதிகமென்றும், எந்நேரமும் இசையொலி கேட்க வேண்டுமென்ற விருப்பமுடையவள் என்றும் சொல்கின்றது.

இக்கதைகள் காட்டைப் பற்றியும், அதில் வாழும் உயிரினங்கள் பற்றியும் தெரியாத பல செய்திகளைச் சிறுவர்க்குச் சொல்வதோடு, ‘பிறர்க்கு உதவ வேண்டும்’; ‘காட்டைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கருத்துகளை வலியுறுத்தவும் செய்கின்றன.

வெளியீடு:-

நிவேதிதா பதிப்பகம்,

10/3 (முதல் தளம்) வெங்கடேஷ் நகர் பிரதான சாலை

விருகம்பாக்கம், சென்னை – 600092. (செல் +91 8939387276/96).

Share this: