பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

Mallikavin_veedu_pic

மல்லிகாவின் வீடு

ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் கொண்ட இவர், தம் படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

16 சிறுவர் கதைகள் உள்ள ‘மல்லிகாவின் வீடு’ என்ற தொகுப்புக்கு, 2022 ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ இவருக்குக் கிடைத்துள்ளது.

கிருங்கை சேதுபதி இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில், “இதழியல் துறையில் அவரது பணி என்றாலும், சிறார்களின் அன்பு உலகத்தில் கதை சொல்லும் அக்காவாகவும், அம்மாவாகவும் நல்ல தோழியாகவும் உலா வருகிறார்; சின்னச் சின்ன கதைகள் சொல்கிறார்; செல்லமான நடையில் சொல்கிறார்” என்று கூறியுள்ளார்.

1. செல்லப்பெண்

அம்மை போட்டிருந்ததால், பள்ளிக்கு விடுப்பெடுத்த ரம்யா என்ற சிறந்த மாணவிக்காக ஆசிரியை உட்பட, எல்லோரும் கவலைப்படுகிறார்கள். இரண்டாம் ராங்க் எடுக்கும் ரூபா மட்டும், ரம்யா மேல் பொறைமையோடிருக்கிறாள். இறுதியில் ரூபா திருந்துகிறாள்.

2. காகங்களின் சேவை

வெள்ளை கொக்குகள் காகங்களைக் கறுப்பு என்று எந்நேரமும் கிண்டல் செய்கின்றன. காகங்கள் கோபித்துக் கொண்டு போய்விடுகின்றன. ஆற்றாங்கரை முழுக்க அசுத்தமானவுடன், கொக்குகள் திருந்தி மன்னிப்புக் கேட்கின்றன

3. மல்லிகாவின் வீடு

மல்லிகாவின் வீட்டுக்கு அவளுடைய தோழிகளான சீதாவும் ரமாவும் வருகிறார்கள். அவள் வீட்டில் பிளாஸ்டிக் பொருள் ஒன்று கூட இல்லையென்பதைப் பார்த்து வியக்கின்றனர். இயற்கை உரம் தயாரிப்பது குறித்துத் தெரிந்து கொள்கின்றனர். தங்கள் வீட்டிலும் இனி பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதென்ற விழிப்புணர்வு பெறுகின்றனர்.

4.  மெழுகுவர்த்திச் சுடர்

“பிறப்பதற்கு முன் எங்கிருந்தோம்? இறந்த பிறகு எங்குப் போகின்றோம்?” என்று ஞானியிடம், ஓர் இளைஞன் கேட்கிறான். “அதைப் பற்றிக் கவலைப்படாதே; இருக்கும் போது என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்து” என்று சொல்லும் ஞானி, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, அணைப்பதன் மூலம், தம் கருத்தை அவனுக்கு விளக்குகிறார்.

5. கண்டு படிக்கலாம்

வினோதினியின் தம்பி செந்தில் 7 ஆம் வகுப்பில் படிக்கிறான். சாமான்களைக் கண்டபடி வீசுகிறான். ஒரு ரயில் பயணத்தில் அவனை விட 2 வயது குறைந்த சிறுமி, சாக்லேட் தாளைக் குப்பைத் தொட்டியில் போடுவதைப் பார்த்துத் திருந்துகிறான்.

6. பேஸ்புக் நண்பர்கள்

ராணி என்பவள் சிவா என்பவனை முகநூல் வழியே தொடர்பு கொண்டு வீட்டுக்கு முன் மரக்கன்றுகள் நடக் கேட்டுகொள்கிறாள். அவன் எஞ்சீனியரிங் படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறான். பசுமைப்பயணம் என்ற முகநூல் பக்கத்தைத் துவங்கி ஒத்த சிந்தனைகள் கொண்ட நண்பர்களைக் கொண்டு, மரம் நடுகின்றான்.

7. காட்டுக்குள் ஒரு விபத்து

12 பேர் கொண்ட ஒரு குழு குரங்கணி பகுதியில் மலையேறும் போது, காட்டுத்தீ பரவுகின்றது. நித்யாவின் பாவாடையில் தீ பிடிக்கிறது. கம்பளியால் ஒருவர் அவள் உடலை மூட, தீ அணைந்துவிடுகிறது. பத்திரமாக அவர்கள் தரையிறங்குகின்றனர்.

8. புதன்கிழமை ரகசியம்

முன்னாள் ராணுவ வீரரான ராம்பிரசாத் ஷா, வாராவாரம் புதன் கிழமை காலையில் எங்கோ போய்விட்டு வருகிறார். அவர் எங்குப் போகிறார் என்று தெரிந்து கொள்ள பிள்ளைகளுக்கு ஆர்வம்.

ஒரு நாள் காலையில் காரில் அவர்கள் போகும் போது, அதற்கான விடை கிடைக்கிறது. அவர் அரசு மருத்துவமனைக்கு எதிரே இருந்த பிச்சைக்காரர்களுக்குச் சவரமும், சிகை அலங்காரமும் செய்து விடுகின்றார். அவரது சேவையைப் பார்த்துக் குழந்தைகள் மனம் நெகிழ்கின்றனர்.

9.வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்கள் ஒவ்வொன்றும் தான் தான் எல்லாரையும் விட சிறந்தவன் என்று சண்டை போடுகின்றது. அவை ஊர் பெரியவரிடம் போய் முறையிடுகின்றன. “நீங்கள் அனைவருமே அழகானவர்கள்: அனைவரும் ஒற்றுமையாக வானவில்லாக இருந்தால் தான் அழகு” என்று அவர் சொல்லிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கின்றார்.

10. மயில்சாமி வாத்தியார்

மயில்சாமி என்கிற தமிழாசிரியர், பள்ளி வளாகம் முழுக்க, மாணவர்களை வைத்து, மரங்கள் நடுகின்றார் பறவைகள் வருகின்றன; தண்ணீரும் தீனியும் வைக்கின்றார். பள்ளிப்பாடத்துடன், மாணவர்கள் தோட்டப் பணிகளும் செய்கிறார்கள்.

11. நான்கில் ஒரு பங்கு

“பள்ளியில் போஸ்ட் மாஸ்டர் ஒரு உண்டியல் கொடுத்து, பணம் சேமிக்கச் சொல்லியிருக்கிறார்; ஓராண்டு முடிவில் எவ்வளவு சேர்கிறதோ அப்பணத்துக்கு வட்டியும் தருவார்களாம்” என்று பள்ளி மாணவி அஸ்வினி, தன் அப்பாவிடம் சொல்கிறாள்.

இன்னொரு உண்டியலைத் தாம் வாங்கித் தருவதாகவும், ‘பாக்கெட் மணி’யில் மூன்று பங்கைப் பள்ளி உண்டியலில் போடவும், ஒரு பங்கைத் தாம் கொடுக்கும் உண்டியலில் போடவும் அப்பா சொல்கிறார். ஏனென்று அவள் புரியாமல் கேட்க, தாம் கொடுக்கும் உண்டியலில் சேரும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குக் கொடுக்கலாம் என்கிறார் அப்பா.

12. தோல்வியின் ருசி

8 ஆம் வகுப்பு தேர்வுக்குப் படிக்காமல், தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் ராமு, தேர்வில் தோல்வியடைகிறான். அவமானத்தால் அழுது புரள்பவன், புத்தி வந்து 10 நாட்களில் நடந்த மறு தேர்வில் நன்கு படித்துத் தேர்ச்சியடைகிறான்.

13. அப்பாவை ஏன் பிடிக்கும்?

மாரல் சயின்ஸ் வகுப்பில், “ரோல் மாடல் யாரு?” என்று ஆசிரியர் மாணவர்களைக் கேட்கிறார். எல்லோரும் “அப்பா” என்கிறார்கள். “ஏன்” என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் “சாக்லெட் வாங்கித் தருவார்”, “டிரஸ் வாங்கித் தருவார்”, “வெளியில அழைத்துச் செல்வார்” போன்ற பதில்களைச் சொல்கின்றனர். 

கடைசியாக ஒரு மாணவனுக்கு, ‘பார்க்கர்’ பேனா பரிசு கிடைக்கிறது அவன் சொன்ன பதில்:-

“எங்கப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்; ஏன்னா அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே” என்பது தான்.

14 .தேன் குடித்த நரி

தேன் குடிக்க ஆசைப்படும் நரி, காக்காவிடம் தேனடையைக் கொண்டு வர மிரட்டுகிறது. காக்கா ராணித்தேனியிடம் தன் பிரச்சினையைச் சொன்னவுடன், அது ஒரு தேனடையைக் கொடுக்கிறது. நரி தின்னத் துவங்கியவுடன் அதில் மறைந்திருந்த தேனீக்கள் நரியைக் கொட்ட, அது அலறுகிறது.

“மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவது தவறு; உழைக்காமல் மற்றவர்களை வருத்திச் சாப்பிடுவது என்றும் துன்பத்தையே தரும்” என்று காக்கா நரியிடம் நீதி போதிக்கிறது.

15. பசுமைத் தூதர்

காஷ்மீர் டால் ஏரிக்கரையின் படகோட்டியான ராம்லாலின் மகள் லில்லி.   ஏரியில் சுற்றுலாப் பயணிகள் தூக்கி வீசும் சிப்ஸ் பாக்கெட், பிளாஸ்டிக் கப் போன்ற குப்பைகளை அள்ளிக் குப்பை சேகரிப்பவரிடம் தினமும் ராம்லால் கொடுக்கிறார்.  இவ்வேலையில் லில்லியும், தன் தந்தைக்கு உதவுகிறாள்.  ‘இளம் பசுமைத் தூதர்’ என்ற விருது, அவளுக்குக் கிடைக்கின்றது

16.பரிசுப்பணம்

பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் விஜய்க்கு முதல் பரிசான 10000 ரூபாய் கிடைக்கிறது. தன் பள்ளி சுவரில் வெள்ளையடிக்கவும், நல்ல கருத்துகளைச் சொல்லும் ஓவியம் வரையவும், பரிசுப் பணத்திலிருந்து 5000 ரூபாய் வாங்கிப் போகிறான்.

இக்கதைகள் சிறுவர்கள் வாசிப்புக்கேற்றவாறு, எளிய நடையில் இல்லை. மேலும் பெரும்பாலான கதைகளில் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டும் கதையம்சம் குறைந்து, கட்டுரைத்தன்மை மிகுந்திருப்பது பெரிய குறை.

Share this: