அன்புடையீர்!
வணக்கம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம். ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான அண்ணாவின் 114 வது பிறந்த நாள். இவர் 1967 ல் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தான், ‘சென்னை மாகாணம்‘ என்ற நம் மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு‘ என மாற்றுவதற்கான தீர்மானத்தைத் தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றினார். எனவே ‘தமிழ்நாடு’ என்ற பெயர் வரக் காரணமான அண்ணாவை, அவரது பிறந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர்ந்து, புகழஞ்சலி செலுத்துவோம்!
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று கடந்தாண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த து மிகவும் பாராட்டத்தக்கது. பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று குறுக்காமல், சமூக நீதிக்கான போராளியாக, அவரைக் கொண்டாடுவதே மிகவும் சரி.
சமூக நீதி என்பது மக்கட்தொகையில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைக்கிற இட ஒதுக்கீடு மட்டுமல்ல; பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தை வேரறுத்துச் சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்குமான சமத்துவத்தை நிலைநாட்டுவதுமாகும்.
சனாதனத்துக்கு எதிராகப் வள்ளுவரின் வாக்குப்படி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதே, சமூக நீதி நாளின் அடிப்படை நோக்கம்! முன்னெப்போதையும் விட, இப்போது பெரியார் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறார். பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராகப் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண் விடுதலை குறித்துப் பெரியாரின் கருத்துகளை, நம் இளைய தலைமுறை அவசியம் வாசித்துத் தெரிந்து கொள்வதோடு, பெண்ணடிமைத்தனம் ஒழிய பாடுபடவேண்டும்!
தமிழ்நாடு முழுக்கப் பரவலாகப் புத்தக கண்காட்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன; அதில் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. பெற்றோர் புத்தகக் காட்சிக்குச் சென்று வாங்குவதற்கு முன்பு, தற்போது சிறுவர்க்காக வெளியாகும் புத்தகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும்.
குழந்தைகள் புத்தகமென்றால் தெனாலி ராமன், பஞ்சதந்திரக் கதைகள், நீதி நெறிக்கதைகள் என்று பொதுப்புத்தியில் உறைந்து போயிருக்கும் கருத்தை மாற்றிக் கொண்டு, தற்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டுகிற சமகால எழுத்தாளர்களின் நூல்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுப்பது மிகவும் அவசியம்.
அடுத்தது குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுப்பது மிக மிக அவசியம். சுட்டி உலகத்தில் வயது வாரியான புத்தக அறிமுகத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைப் பயன்படுத்திக் கொண்டு புத்தகம் வாங்கிக் குழந்தைகளிடம் கொடுத்தால், வாசிப்பில் அவர்களுக்கு நாட்டத்தை ஏற்படுத்தவியலும். ஆறு வயது குழந்தைக்குப் பொன்னியின் செல்வனைத் தூக்கிக் கொடுத்தால், புத்தகத்தைப் பார்த்தாலே குழந்தை மிரண்டு ஓடும்!
‘சுட்டி உலகம்’ காணொளியில் குழந்தைப்பாடல்களும், கதைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. குழந்தைகளுக்குத் தாய்மொழித் தமிழை நன்கு உச்சரித்துப் பேசிப் பழக, இப்பாடல்கள் மிகவும் உதவும். சுட்டி உலகம் பார்வை 20000 ஐ நெருங்குகிறது என்பதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்.
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்,
வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.