ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

Aazhkadal_pic

கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார்.  ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. 

நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து, ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு அமைந்திருக்கும் மலைகள், பள்ளத்தாக்குகள், வெந்நீர் ஊற்றுகள் குளிர்க் கசிவுகள், பவள வாழிடங்கள், உப்புநீர்க் குளங்கள் என இதுவரை நாம் அறியாத அதிசயங்களை நமக்கு விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியர்.

நம்மிடம் நேரில் அவற்றைச் சுட்டிக்காட்டி உரையாடுவதைப் போல் அமைந்த இந்நூலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள் ஏராளம். நீண்ட தூரம் வலசை போகும் திமிங்கிலங்கள், கடல்மலைகளை அடையாளங்களாகப் பயன்படுத்துகின்றன என்பது அவற்றிலொன்று.

திமிங்கிலத்தின் இறந்த உடல் ஆழ்கடல் பகுதியில் வந்து விழுந்தால், வெறும் உணவுத் துணுக்குகளை மட்டுமே தின்று உயிர்வாழும் ஆழ்கடல் உயிரிகளுக்கு, அது ஒரு பம்பர் பரிசு விருந்தாம்! அவ்வுடலை நான்கு கட்டங்களாகப் பல்வேறு உயிரிகள் தின்று முடிக்க 50 முதல் 100 ஆண்டுகள் ஆகும் என்பது வியப்பின் உச்சம்!

மனிதரின் செயல்பாடுகளால் ஆழ்கடல் உயிரிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து இறுதி அத்தியாயத்தில் பேசும் ஆசிரியர், ஆழ்கடல் உயிரிகள் சூரிய ஒளியே புகாத அதீதமான சூழலில் கூடத் தாக்குப் பிடித்து வாழ்கின்றன என்பதால், பல ஆராய்ச்சிகளுக்கு உதவுகின்றன; எனவே ஆழ்கடலைப் பாதுகாப்பது நம் கடமை என்று முடிக்கின்றார். இந்நூலில் ஓவியர் தியனேஷ்வரன் அருமையாக ஓவியங்கள் வரைந்துள்ளார்.

ஓங்கில் கூட்டத்தின் மின்னூலாக, இது அமேசான் தளத்திலும் கிடைக்கின்றது. இளையோர் புரிந்து கொள்ளும் எளிய நடையில், சுவாரசியமாக அமைந்துள்ள இந்நூலை அவசியம் வாங்கி வாசியுங்கள்.

வகைஇளையோர் கட்டுரை நூல்
ஆசிரியர்நாராயணி சுப்ரமணியன்
வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18. (+91 9498062424)
விலைரூ 40/-
Share this: