சாவித்திரியின் பள்ளி

Savithiri_pic

200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகச் சாதிக்கொடுமைக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் போராடினார்கள்? என்னென்ன சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்? என்பதையெல்லாம், இளையோர் மட்டுமின்றிப் பெரியவர்களும் இந்நூலைப் படித்து, விரிவாக அறிந்து கொள்ளலாம்.  

‘கல்வியின் மூலமே ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியும்’ என்று மிகச்சரியாகச் சிந்தித்த ஜோதிபாய் பூலே, அம்மக்களுக்காகத் திறந்த முதல் பள்ளியில், 18 வயதே ஆன சாவித்திரிபாய் பூலே பள்ளியாசிரியராகப் பொறுப்பேற்றார்.

இவர் பள்ளிக்குப் பாடம் நடத்த சென்ற போது, பழைமைவாதிகள், இவர் மேல் சேற்றையும் சாணியையும் கரைத்து ஊற்றினார்களாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தைரியமாகச் சமாளித்துக் கல்வி கற்பித்து, வரலாற்றில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்ற பெருமைக்குரியவராகிறார், சாவித்திரிபாய் பூலே.

பல்வேறு சமூக சீர்த்திருத்தங்கள் செய்து, சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய இவர்கள் பெயர்கள், இந்திய வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாகத் தான், இவர்கள் மேல் வெளிச்சம்படத் துவங்கியுள்ளது. இவர்களுடைய வரலாற்றை நம் இளைய தலைமுறை அறிந்து கொள்வது மிக அவசியம். ஓங்கில் கூட்டம் அமேசான் தளத்திலும், மின்னூலாக இதை வெளியிட்டுள்ளது.

ஓவியர் சுந்தரம் முருகேசன் இந்நூலில் வரைந்துள்ள ஓவியங்கள் மிக அருமை. இளையோர் வாசிக்கக்கூடிய எளிய மொழியிலும், விறுவிறுப்பான நடையிலும் அமைந்துள்ள இந்நூலை அவசியம் வாங்கி வாசியுங்கள்.

வகைஇளையோர் கட்டுரை நூல்
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 +91 9498062424
விலைரூ 60/-
Share this: