‘யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்’ – இணையவழி உரையாடல்

Children_sex_abuse_pic

நம் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான சீண்டல், தொடுதல், வன்முறை காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் அணுக வேண்டிய விதம் குறித்தும், பேசுவதற்குத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், ‘யாரேனும் இந்த மெளனத்தைத் தகர்த்திருந்தால்’ என்ற தலைப்பில், 19/12/2021 அன்று மாலை 4 முதல் 5.30 மணி வரை, இணையவழி உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.   

இதில் ஆர்த்தி ராஜரத்தினம் (உளவியலாளர்), அருணா ரத்னம் (குழந்தைகள் செயற்பாட்டாளர்), தமிழ் ஆசான், (ஆசிரியர்) ஆகியோர் பங்கு பெற்று, தம் கருத்துகளை முன்வைத்தனர். 

குழந்தை நல செயற்பாட்டாளர்கள் சாலை செல்வம்,  வனிதாமணி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தனர். 

இதில் குழந்தைகள் குறித்தும், கல்வி குறித்தும் ஊடக வாயிலாகப் பரவலாகப் புரிதலை ஏற்படுத்தும் பிரபல உளவியலாளர் ஆர்த்தி ராஜரத்தினம் அவர்கள் சொன்ன கருத்துகள், பலருக்கும், குறிப்பாகப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடியவையாயிருந்தன.

அக்கருத்துகளைத் தொகுத்துத் தருவதே, இப்பதிவின் நோக்கம்:-

Time of Disclosure – பாலியல் துன்புறுத்தலால் (சீண்டல், தொடுதல், வன்முறை) அவதிப்படும் குழந்தைகள், தங்கள் பிரச்சினை குறித்த விபரத்தை எப்போது வெளியிடுவார்கள்?

மிகவும் சிறு வயது குழந்தை என்றால், பிரச்சினை நடந்த உடனே பெற்றோரிடம் வந்து சொல்லிவிடும்.   பெற்றோர் குழந்தை சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டு, அது தொடர்ந்து நடக்காதவண்ணம் குழந்தையைப் பாதுகாத்து அரவணைக்க வேண்டும்.

கொஞ்சம் பெரிய குழந்தைகள் என்றால், பாலியல் துன்புறுத்தல் துவங்கி ஆறு, ஏழு வாரம் கூடச் சொல்லாமல், குழப்பத்திலேயே இருப்பார்கள்.  பாலியல் துன்புறுத்தலில் பேச்சு வார்த்தை, தொடுதல், சீண்டல் என எல்லாமும் அடங்கும்.

பாலியல் துன்புறுத்தலில் தொடும் வகை, தொடாத வகை என இரண்டு வகையுண்டு.  (Touch and Non-touch forms).

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் (Good touch & bad touch) பற்றி மட்டுமே நாம் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.  இந்தத் தொடா வகை பற்றி, நாம் சொல்வதில்லை.

இந்தத் தொடா வகைகள் யாவை?

கேவலமாகப் பேசுதல், உடலைப் பற்றித் தவறான கருத்து சொல்லுதல், ஜோக் அடித்தல், கேவலமான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, இது வெறும் ஜோக் தான் என்று சொல்லுதல் (shaming and normalising) என்பவை இந்தத் தொடா வகையில் அடங்குவன. 

கேவலமான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, அது ஜோக் தான் (shaming and normalising) என்று சொல்லிக் குழந்தையைக் குழப்பிவிடுவது தான்,  பாலியல் துன்புறுத்தலின் முதல் கட்டம். 

பின்னால் குற்றமிழைப்பவர் தவறாக நடக்கும் போது, இதுவும் ஜோக்காக இருக்குமோ என்று குழந்தை குழம்பிவிடுமாம்!  எனவே குற்றமிழைப்பவர் முதலில் தொடா வகையில் தான் துவங்குவாராம். குழந்தை சென்று பெற்றோரிடம் சொல்லவில்லையென்றால், அடுத்த கட்டத்துக்குப் போவாராம். 

குழந்தை தன் பிரச்சினை குறித்து, ஆறு ஏழு வாரம் கழித்துச் சொன்னாலும், அதைக் காது கொடுத்துக் கேட்டு,மேற்கொண்டு பாதிக்காத வகையில் உடனே குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது, பெற்றோரின் கடமை. உடனே பள்ளியில் புகார் செய்து, மற்ற குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். 

சில குழந்தைகள் ஓராண்டு கழித்துக் கூட சொல்வார்களாம்.  இன்னும் சிலரோ குழந்தை பருவத்தில் பாதிக்கப்பட்டு, 30 அல்லது 35 வயதில் மனநல ஆலோசனை பெற வருவார்களாம்! 

எனவே குழந்தை தன் பாலியல் பிரச்சினையை வெளியிடும் காலத்தைப் பொறுத்து (time of disclosure of abuse)அதற்கான பெற்றோரின் எதிர்வினை ‘பாதுகாப்பு, ஆதரவு, மனநல ஆலோசனை/சிகிச்சை’ (Protection, Support, Therapy) என்ற மூன்று பிரிவுகளில் அடங்குகிறது.   

Types of disclosure – குழந்தை தன் பிரச்சினையை வெளிப்படுத்துவதில், என்னென்ன வகை உள்ளன?

Spontaneous disclosure – குழந்தைகளில் சிலர் தாமாகவே தன்னிச்சையாகவே திடீரென வெளியிடுவார்கள்.  ஆனால் இப்படி நடப்பது மிகவும் குறைவே. இந்தியாவைப் பொறுத்த வரையில், குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களாலேயே, குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

Indirect disclosure –  குழந்தைகளில் சிலர் மறைமுகமாக வெளியிடுவார்கள்.  சாதாரணமாக ஆரம்பித்து (Casual statement) ஒன்றிரண்டு வாக்கியங்களைச் சொல்லி, அதற்குப் பெற்றோரிடம் என்ன மாதிரியான எதிர்வினை வருகின்றது என்பதைச் சோதிப்பார்கள். சாதாரண விஷயத்துக்கே திட்டும் அம்மா, இந்தப் பிரச்சினையைச் சொன்னால் எப்படி எதிர்வினையாற்று வாரோ என்ற பயமே, இதற்குக் காரணம்.

பெற்றோரின் எதிர்வினையைப் பொறுத்து மேற்கொண்டு சொல்வதா, வேண்டாமா என்பதைக் குழந்தைகள் முடிவு செய்வார்களாம். எதிர்வினை பயங்கரமாக இருந்தால், “நான் சும்மா சொன்னேன், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை, நான் பொய் சொன்னேன்” என்று மேற்கொண்டு சொல்லாமல், நிறுத்திவிடுவார்களாம்.    

பாலியல் ரீதியாகத் துன்பத்துக்கு ஆளாகும் குழந்தைகளின் நடத்தையில் என்னென்ன மாற்றங்கள் தென்படும்?

 1. Behaviour change – மிகவும் விரும்பி ஒருவர் வீட்டுக்குச் சென்ற குழந்தை, “அவர் வீட்டுக்குச் செல்ல மாட்டேன்; அவர் நம் வீட்டுக்கு வரவேண்டாம்; நான் அவரிடம் பேசமாட்டேன்” என்றெல்லாம்  சொல்லும் விதமாக நடத்தை மாற்றம் ஏற்படும்.
 2. Dressing sense change-  உடை அணிவதில் மாற்றம். ஏற்கெனவே போட்டிருக்கும் உடை மேல், இன்னும் சில உடைகளைக் குழந்தை அணிந்து கொள்ளும்.  ‘நாலைந்து உடையணிந்து குண்டாக இருந்தால், நான் அவர் கண்ணுக்குக் கவர்ச்சியாகத் தோன்ற மாட்டேன்’ என்று குழந்தை நினைக்குமாம். 
 3. Children will behave sexually to other children – டாக்டர் விளையாட்டு விளையாடுவது போல், தனக்கு நடந்ததைக் குழந்தை இன்னொரு குழந்தையிடம் செய்து பார்க்குமாம். 
 4. தற்கொலை முயற்சி, அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கும்.
 5. வகுப்புகளுக்குச் சென்று உளவியல் ஆலோசகர்கள் பேசும்போது,   “மேம்! உங்ககிட்ட நான் தனியாப் பேசணும்” என்று சொல்லுமாம்.

பாலியல் ரீதியாகத் துன்பத்துக்கு ஆளாகும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை யாவை?

 1. குழந்தை சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். ‘சும்மா சொல்லாதே’, ‘டூப் விடாதே’ என்பது மாதிரியான வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.
 2. குழந்தை தன் பிரச்சினையை எப்போது சொல்லும் (time of disclosure of abuse) என்று தெரியாது.  தனக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் காரணமாக பெரிய கடைத்தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் போது கூட, அது சொல்லத் துவங்கலாம். எனவே எப்போது சொன்னாலும், எந்தச் சமயத்தில் சொன்னாலும், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே முழுக் கவனம் கொடுத்துக் கேட்க வேண்டியது, பெற்றோரின் கடமை.
 3. Don’t use judgement statement – நாம் குழந்தை சொல்லும் விஷயத்தைப்  புரிந்து கொள்கிறோம் என்பதை நம் வார்த்தைகளின் மூலமும், நம் செயல்கள் மூலமும், குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.   மாறாக “நீ என்ன செய்தாய்? இதற்குத் தான் வெளியே போகும்போது, ஷார்ட்ஸ் போடக் கூடாதென்று சொன்னேன்?” என்பது போன்ற (Judgement statement) வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.
 4. Self pity – தன்னிரக்கத்தை வெளிப்படுத்தி “ஐயோ! எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” என்று புலம்புவது கூடவே கூடாது.   
 5. நீ வந்து சொன்னது தைரியமான செயல்; இதில் உன் தப்பு எதுவுமில்லை என்று ஆறுதல் சொல்ல வேண்டும்.  வெளியே ஒப்புக்காகத் தைரியம் சொல்லிவிட்டு, உடனே “இதை யார்க்கிட்டேயும் சொல்லிடாதே” என்று சொன்னால், குழந்தை பயந்துவிடும்.  தப்பு செய்பவரும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று குழந்தையை ஏற்கெனவே மிரட்டியிருப்பதால், குழந்தையின் குழப்பம் அதிகமாகிவிடும். 
 6. அமைதியாக இருந்து குழந்தையைப் பேசவிட வேண்டும்.  அதன் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.  குற்றவுணர்வு காரணமாகக் குழந்தை பயந்து போயிருக்கும் சமயத்தில் “முடிஞ்சது முடிஞ்சு போச்சு; இனிமே அதைப் பத்திப் பேசாதே” என்று உணர்வுகளை வெளியே கொட்டவிடாமல் அமுக்கக் கூடாது.  இப்படிச் செய்தால் குற்றம் இழைப்பவருக்கு இன்னும் அதிக பலம் கிடைத்தது போலாகும்.
 7. அவசரப்படாமல் அவர்கள் வார்த்தைகளில் சொல்ல விடவேண்டும்.  நாம் இடையில் புகுந்து, அவர்கள் சொல்லாத வார்த்தைகளைச் சேர்க்கக் கூடாது.  “எல்லாத்தையும் இன்னிக்கே சொல்லு; அப்புறம் என்னாச்சு?” என்று அவசரப்படுத்தக் கூடாது.  அவர்கள் போக்கில் சொல்ல அனுமதிக்க வேண்டும்.  குழந்தை சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டால் போதும்; ‘நான் இப்படிப் பண்ணிவிடுவேன்; அப்படிப் பண்ணிவிடுவேன்’ என்று வாக்குறுதி கொடுக்கக் கூடாது.
 8. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குழந்தைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  “நானும், அப்பாவும் கலந்து பேசி முடிவு எடுக்கிறோம்” என்பது போன்ற விபரத்தைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.
 9. குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டவரிடம், சினிமாவில் காட்டுவது போல் நேரே போய்ச் சண்டை போடக்கூடாது.  அவரைப் பற்றிப் புகார் செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
 10. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றிலுமாகப் போய்விட்டிருக்கும்.  தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற குற்றவுணர்வும், அவமான உணர்வும், தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். எனவே தொடர்ச்சியான ஆதரவு கொடுத்து அரவணைத்துக் குழந்தைக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்த முயல வேண்டும்.  இது ஒரு நாளில் நடக்காது.  எனவே தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

ஆசிரியர் தமிழ் ஆசான் அவர்களும், குழந்தை நல செயற்பாட்டாளர் அவர்களும் தங்கள் சொந்த அனுபவங்களை முன் வைத்து, அரிய கருத்துகளை முன்வைத்தனர். அனைவரும் அவசியம் காண வேண்டிய காணொளி. முக்கியமாகப் பெற்றோர்க்கும்,  ஆசிரியருக்கும் மிகவும் பயனுள்ள காணொளி. 

இந்நிகழ்வினை முழுமையாக யூடியூப் காணொளியில் காணலாம்.

Link:- https://www.youtube.com/watch?v=2itePLOIC0o

Share this: