குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த, சில எளிய வழிகள்:-

Parents_read_pic

எழுத்தாளர் உதயசங்கர்

1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும்.

2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.

3. குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே, வாசிப்பது நல்லது.

4. புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.

5. கதை சொல்லும்போது, புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டுக் கதை சொல்லவேண்டும்.

6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு, எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டும்.

7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ, கிழித்தாலோ, திட்டவோ, மிரட்டவோ கூடாது.

8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.

9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி, குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு, அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.

10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, முதலில் அம்மாவும், அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.

11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு, பெற்றோர்களுக்கு வேண்டும்.

12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின் ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக, வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.

13. பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள், என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.

14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.

15. விளையாட்டுச் சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும், அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அலமாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.

16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து, குழந்தைகளிடம் சிறு முகச் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.

17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.

18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

1. கதைகள் குழந்தைகளின் படைப்பூக்கத்தை தூண்டுகின்றன.

2. கதையின் புனைவு குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கிறது.

3. குழந்தைகள் அறிந்திராத ஒரு புதிய உலகம் கதைகளில் விரியும்போது குழந்தைகள் அதைப் பற்றி புரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

4. கதைகளில் வருகிற கதாபாத்திரங்கள் படுகிற துன்பமோ, இன்பமோ, கஷ்டமோ, நஷ்டமோ, மகிழ்ச்சியோ, குழந்தைகளையும் கற்பனையாகப் பாதிக்கிறது. அப்போது குழந்தைகள் உளவியல் ரீதியாக இன்பதுன்பங்களைப் பற்றிய உணர்வுபோதம் அடைகிறார்கள்.

5. குழந்தைகள் கதை கேட்கும்போதோ வாசிக்கும்போதோ கதைகளில் வருகிற கதாபாத்திரங்களாக தங்களை சில நிமிடங்களுக்கேனும் வாழ்கிறார்கள். கதை சொல்லும்போதோ, வாசிக்கும்போதோ குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள். உணர்ச்சி வெள்ளத்தில் இருக்கும்.

6. கதைகளில் கதாபாத்திரங்கள் அநுபவிக்கும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை, கேலி, கிண்டல், எல்லாவற்றையும் கற்பனையில் குழந்தைகள் அநுபவித்து விடுவதால் குழந்தைகள் உள்வியல்ரீதியாக பலம் பெறுகிறார்கள்.

7. யதார்த்த உலகில் அவர்கள் உணர்ச்சிப்பாதிப்புகளுக்கு ஆளானாலும் அவர்களது இந்தக் கற்பனைஅநுபவம் அவர்களை ஆற்றுப்படுத்தும்.

8. கதைகள் யதார்த்த உலகின் ஏற்றத்தாழ்வுகள், அழுத்தங்களுக்கு எதிராக ஒரு உளவியல் சமநிலையைத் தருகின்றன.

என்ன இருந்தாலும் இது பெரியவர்களின் உலகம். அவர்களது அனைத்து விருப்பங்களுக்கும் அநுசரித்துப்போக வேண்டிய அழுத்தத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த அழுத்தத்தை ரிலீஸ் செய்யும் சாதனங்களாக கதைகள் இருக்கின்றன.

9. புதிய வீட்டில் என் அருகில் வராமலேயே இருந்த ஒரு குழந்தை நான் கதை சொல்லச்சொல்ல மெல்ல மெல்ல அருகில் வந்து என் மீது சாய்ந்து, அப்படியே மடியில் படுத்து உறங்கிவிட்டது. கதைகளுக்கு அத்தனை வலிமை இருக்கிறது.

10. 1930 களில் பள்ளிக்கல்விமுறையில் புதியமாற்றங்களைக் கொண்டுவரத் திட்டங்கள் தீட்டியிருந்த கிஜூபாய் பகேகே எழுதிய பகல் கனவு அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதில் வரும் ஆசிரியர் லட்சுமிசங்கர் அடங்காத அவரது வகுப்பு மாணவர்களை தினம் கதை சொல்லியே வசப்படுத்துவார்

11. குழந்தைகளின் உலகம் உற்சாகமானது;உணர்ச்சிமிக்கது. எல்லாவற்றையும் நம்பத் துடிப்பது. அதனால் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் கவனம் தேவைப்படுகிறது.

12. மூடநம்பிக்கைகள் நிறைந்த கதைகள், சகுனம், ராசி, சடங்குகள், முனிவர்கள், யாகங்கள், சாபங்கள், வரங்கள், பேய், பிசாசு, ரத்தக்காட்டேரிகள், முனி, போன்ற அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும், புறம்பான கதைகளைச் சொல்லக்கூடாது. ஏன் சொல்லக்கூடாதென்றால், குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் அபாயமும், எல்லோருக்கும் பணிந்துபோகும் அடிமைமனமும், எதைக்கண்டும் பயப்படும் குணமும் குழைந்தகளின் ஆழ்மனதில் படிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

13. குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும் கதைகளையே அதிகமாகச் சொல்லவேண்டும். அது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

14. 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வண்ணப்படங்களும் மிகக்குறைந்த பெரிய எழுத்துகளும் கொண்ட புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கவேண்டும். கதைகள் சொல்லவும், பாடல்களைப்பாடவும் வேண்டும்.

15. 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படங்கள் நிறைந்த எழுத்துகளும் நிறைந்த கதைப்புத்தகங்களை வாங்கிக்கொடுக்க வேண்டும். கதைகளைச் சொல்லவேண்டும்.

16. 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாகசக்கதைகள், லட்சியக்கதைகள், அறிவியல் கதைகள், பகுத்தறிவுக்கதைகள், துப்பறியும் கதைகள், கட்டுரைப்புத்தகங்கள், வாங்கிக்கொடுக்கவேண்டும். வாசிப்பில் சிரமம் இருந்தால் வாசித்துக்காட்ட வேண்டும்.

17. மாதம் ஒரு புத்தகமாவது குறைந்தது 100 ரூபாய்க்காவது வாங்கிக் கொடுக்கவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் என்னகேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் மிகச்சரியாகக் கொடுத்து விடும் பெற்றோர்கள் கதைப்புத்தகங்கள் வாங்கித் தருவதற்கு அப்படி யோசிக்கிறார்கள். சென்னைப் புத்தகக்கண்காட்சியில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

18. பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, பல்துறை அறிஞர்களாகவோ வெளிவரலாம். அவர்களை இந்த சமூகத்தின் மனிதர்களாக மாற்றுகிற வல்லமை கதைகளுக்கு உண்டு

19. சுருக்கமாகச்சொல்லப்போனால் கதைகள் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்று சொல்கிற உளவியல் பயிற்சிகள்.

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், 21/09/2022 அன்று முகநூலில் எழுதிய பதிவை, அவர் அனுமதியுடன் இங்குப் பதிவிட்டிருக்கிறோம். அவருக்கு எங்கள் நன்றி)

(கவர் போட்டோ – நன்றி ஜிபாயிண்ட் ஸ்டூடியோ- Image by gpointstudio on Freepik)

Share this: