விழியன்

Vizhiyan photo

விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன்.  ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார். 

‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘டாலும் ழீயும்’, ‘மாகடிகாரம்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘வளையல்கள் அடித்த லூட்டி’, ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘கிச்சா பச்சா’, ‘கடல்ல்ல்ல்ல்’, ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன்’ ஆகியவை இவருடைய சில குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். 

‘காராபூந்தி சிறார் சிறுகதைகள்’, ‘மலைப்பூ’, ‘உங்கா சிங்கா மங்கா’, ‘யாச்சியின் குமிழி ஆசை’, ‘அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி’ ஆகியவை 2020 ஆண்டு வெளி வந்த நூல்கள். இதில் மலைக்கிராமத்துச் சிறுமியின் வாழ்வை அடிப்படையாக வைத்து, இவர்  எழுதிய ‘மலைப்பூ’ சிறுவர் நாவல், பரவலாகப் பலருடைய கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றது.

இவருடைய படைப்புகள், சிறந்த சிறார் இலக்கியத்துக்கான பல பரிசுகளை வென்றுள்ளன.  இவருடைய ‘மாகடிகாரம்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘கிச்சா பச்சா’ ஆகிய நூல்கள் விருது பெற்றவை. விகடனின் சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது, நியூஸ்7 தொலைக்காட்சியின் யுவ ரத்னா விருது, வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவர் விருது உட்பட, பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.   

2020 ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கையை 80 மணி நேரத்தில், தமிழில் வெளியிட்டதில் இவருடைய பங்களிப்பு அதிகம்.  13/06/2021 அன்று துவங்கப்பட்ட சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவருடைய வலைப்பூ:- விழியன் பக்கம். 

அதற்கான இணைப்பு:- https://vizhiyan.wordpress.com

Share this: