ஆர். வெங்கட்ராமன் (ஆர்வி)

(6 டிசம்பர் 1918 – 29 ஆகஸ்ட் 2008)

‘ஆர்வி’ என்று தமிழ் பத்திரிகை உலகால் அன்போடு அடையாளங்காட்டப்படும் ஆர். வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ராமையா – சீதாலக்ஷ்மி தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.  

காந்திய வழியில் பெரும் பற்றும் ஈடுபாடும் கொண்டு, தனது பதினாறு வயதில் கதராடை அணியத் தொடங்கிய அவர், இறுதிக்காலம் வரை தொடர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார். 1941-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று கைதாகி பாபநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.  

‘கலைமகள்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சில காலம் இடம்பெற்றிருந்தார். கலைமகள் காரியாலயம் தொடங்கிய ‘கண்ணன்’ என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார். அதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகள், சித்திரக்கதைகள், புதினங்கள் மற்றும் தொடர்கதைகளை எழுதியுள்ளார். 

‘ஆர்வி’ என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், வானொலி நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள் என சுமார் எண்பது நூல்களை எழுதியுள்ளார். 1946-ல் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் செயலாளராக திகழ்ந்தார். 1960-ல் சமகால எழுத்தாளர்கள் சிலரோடு இணைந்து தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். அப்போது அன்றைய துணை குடியரசுத் தலைவர் ஜாகிர்ஹூசேன் அவர்களைக் கொண்டு மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 

ஆர்வி எழுதிய சிறுவர் இலக்கியப் படைப்புகளை விரிவாக ஆய்வு செய்து ‘சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்’ என்ற பெயரில் 2008-ஆம் ஆண்டு நூலாக்கியிருக்கிறார் குழந்தை எழுத்தாளர் ரேவதி. அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆர்வியின் சில நாவல்கள் அசட்டுப்பிச்சு, சைனா சுசூ!, ஜக்கு ஜக்கு துப்பறிகிறான், சந்திரகிரிக் கோட்டை, காளி கோட்டை இரகசியம், புதிய முகம், ஜம்பு, காலக்கப்பல், ஒருநாள் போதுமா? லீடர் மணி ஆகியவை.  

ஆர்வி எழுதிய படைப்புகள் சில நூலுலகம் இணையதளத்தில் கிடைக்கின்றன. 

Share this: