உலகப் புத்தக நாள் (23/04/2023) வாழ்த்துகள்!

world_book_day

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், யுனெஸ்கோ இந்நாளைக் கொண்டாடுகின்றது.

முதன்முதலில் ஸ்பெயினில் தான், இந்நாளைக் கொண்டாடுவது குறித்த எண்ணம் ஏற்பட்டது.  ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், ரோஜாக்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்வது வழ்க்கம். இந்த நாள் கிட்டத்தட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஒத்தது.

துவக்கத்தில் ஆண்கள், பெண்களுக்கு ரோஜாக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளிப்பர். ஆனால் நாளடைவில் பெண்களுக்கு ரோஜாக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்போதைய நடைமுறையில் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் முக்கிய காரணம்.

புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பல்வேறு அமைப்புகளால், தமிழ்நாடெங்கும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவது, மகிழ்ச்சியான செய்தி. சிறார் தாங்கள் வாசித்த நூல்கள் குறித்துப் பேசுகின்றார்கள்; பெரியவர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புதிய நூல்கள் வெளியீடும் நடக்கின்றது; பதிப்பகங்கள் புத்தக விலையில், கணிசமான அளவுக்குத் தள்ளுபடி அறிவித்துள்ளன.

இந்த உலகப் புத்தக நாளில், புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; குழந்தைகளுக்கும் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவோம்!

புத்தகங்கள் குறித்தும், வாசிப்புக் குறித்தும், சிலரின் பொன்மொழிகள் இவை:-

“மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது?”

“புத்தகம்”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

“இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை… கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கின்றது…அது தான், புத்தக வாசிப்பு.”

எமர்சன்.

“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அது போல மனப்பயிற்சி, புத்தக வாசிப்பு.”

சிக்மண்ட் பிராய்டு.

“ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில், ஒரு சிறைச்சாலை மூடப்படும்.”

விவேகானந்தர்.

“எவ்வளவோ கேளிக்கைகளைக் குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன்; எல்லாவற்றையும் விட, அதிகப் புதையல்கள் புத்தகங்களிலேயே உள்ளன.”

வால்ட் டிஸ்னி.

Share this: