உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!

world_book_day

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், யுனெஸ்கோ இந்நாளைக் கொண்டாடுகின்றது.

முதன்முதலில் ஸ்பெயினில் தான், இந்நாளைக் கொண்டாடுவது குறித்த எண்ணம் ஏற்பட்டது.  ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், ரோஜாக்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்வது வழ்க்கம். இந்த நாள் கிட்டத்தட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஒத்தது.

துவக்கத்தில் ஆண்கள், பெண்களுக்கு ரோஜாக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளிப்பர். ஆனால் நாளடைவில் பெண்களுக்கு ரோஜாக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்போதைய நடைமுறையில் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் முக்கிய காரணம்.

புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

இந்த உலகப் புத்தக தினத்தில், புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; குழந்தைகளுக்கும் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவோம்!

நம் வருங்காலத் தலைமுறையை, அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்க உதவுபவை சிறந்த புத்தகங்களே!

எல்லோருக்கும் இனிய உலக புத்தக நாள் வாழ்த்துகள்!

Share this: