வெல்வெட் முயல்

velvetmuyal_pic

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆங்கில சிறார் இலக்கியத்தில் செவ்வியல் நூலாகப் போற்றப்படுகின்றது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர், எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.

சிறுவனுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக, வெல்வெட்டில் தைத்த அழகான ஒரு முயல் பொம்மை பரிசாகக் கிடைக்கின்றது. அவனிடம் இருந்த பொம்மைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உரையாடுகின்றன.

ஒரு குதிரை பொம்மை வெல்வெட் முயலிடம், “உன்னை ஒருவர் நீண்ட காலம் உண்மையாக நேசித்தால், அதற்குப் பிறகு நீ பொம்மையாக இருக்க மாட்டாய்; உண்மையான உயிருள்ள முயலாகிவிடுவாய்” என்கிறது.

முயல் பொம்மை, ஒரு நிஜமான உயிருள்ள முயலாக மாற விரும்புகிறது. சிறுவனும், அதன் மேல் மிகவும் பிரியமாக இருக்கிறான். தூங்கும் போதும் அதை இறுக அணைத்துக் கொண்டு தூங்குகிறான். வெல்வெட் முயல் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.

ஆனால் சில காலம் கழித்து, அந்தப் பையனுக்கு வைரல் காய்ச்சல் வருகின்றது. நோயிலிருந்து குணம் பெற்றவுடன், வைரஸ் தொற்றை நீக்க, அவனிடமிருந்த எல்லாப் பொம்மைகளையும் எரித்து விட வேண்டும் என்கிறார் மருத்துவர்.

எல்லாப் பொம்மைகளையும் ஒரு சாக்கில் போட்டு எரிப்பதற்காகக் கொல்லையில் கொண்டு வைக்கிறார்கள். முயல் பொம்மை தன் நிலைமையை நினைத்து, ஒரு துளிக்கண்ணீர் சிந்துகிறது. அப்போது அங்கே ஒரு மாயாஜாலம் நிகழ்கின்றது.

அது என்ன? குதிரை பொம்மை சொன்னது போல், வெல்வெட் முயல் நிஜமான உயிருள்ள முயலாக மாறியதா? என்பதைத் தெரிந்து கொள்ள இக்கதையை வாங்கி வாசியுங்கள்.

குழந்தைகளுக்குப் பொம்மைகள் மேல் இயல்பாகவே இருக்கும் உண்மையான அன்பை நெகிழ்ச்சியுடன் இக்கதை விவரிக்கின்றது. இக்கதையில் சிறுவனுக்கும், முயல் பொம்மைக்குமான அன்பு, சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கதையாக இது உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பும், எளிய நடையில், குழந்தைகள் வாசிக்க ஏற்றதாயுள்ளது.

வகைசிறார் நாவல் – மொழிபெயர்ப்பு
ஆசிரியர் மூலம் தமிழாக்கம்மார்ஜெரி வில்லியம்ஸ் உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம் சென்னை-89 +91 91765 49991
விலைரூ 50/-
Share this: