வாயும் மனிதர்களும்

Vayum_Manithargalum

இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதனை மலையாளத்திலிருந்து எழுத்தாளர் உதயசங்கர் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

தத்துவமும், சோகமும் இயல்பாக இழையோடும் கதைகளை எழுதுகிற அபிமன்யு இந்தியாவின் இலக்கியத் தரமான எழுத்தாளர் என்ற அங்கீகாரம் பெற்றவர்.  இந்தக் கதைகள் மலையாள மனோரமா, மாத்ருபூமி போன்ற பிரபல மலையாள இதழ்களில் வெளிவந்தவை.

இந்தச் சின்ன வயதிலேயே இவருக்கு அற்புதமாகக் கதை சொல்லும் ஆற்றல் கைவரப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சராசரியாகப் பத்தே வரிகளுடன் மின்னல் வெட்டும் குறுங்கதைகளாக  உள்ளன.

குழந்தைகளுக்கு மட்டுமே தோன்றுகிற விசித்திர கற்பனைகளுடன் சில கதைகள் அமைந்துள்ளன. சாதாரணமாகச் செல்லும் சில கதைகளின் கடைசி வரி நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.  வாசிப்பவர்  அவரவர் மனநிலைக்கேற்ப  ஓராயிரம்  அர்த்தங்களை   உருவாக்கிக் கொள்ளத் தக்கவாறு கதைகள் அமைந்திருப்பது வியப்பு.

‘மரங்கள்’ என்ற இரண்டாவது கதையில் மா,பலா, தென்னை மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. மாவும், பலாவும் இன்னும் காய்க்கவில்லை.  மரம் வெட்டுபவர்கள், இந்த இரண்டு மரங்களையும் வெட்டித் தள்ளினர். தென்னை மரத்துக்குப் பயம் வந்துவிட்டது.  அடுத்துத் தென்னை மரத்தை அவர்கள் வெட்ட முற்பட்ட போது, வெட்டுபவர் தலையில் தேங்காய் விழுந்து மண்டை உடைந்து விட்டது.  அதைப் பார்த்த மற்றவர்கள் ஓடிப் போய்விட்டார்கள் என்று கதை முடிகிறது. 

இயற்கை தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்கிறது;  மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்கும் மனிதர்களின் பேராசை முறியடிக்கப் படுகின்றது.  மரங்களை வெட்டுவது தவறு என்பது குழந்தைகளுக்குக் கூட இன்று  புரிய ஆரம்பித்துவிட்டது.  தன் தோழர்களான மா,பலாவை வெட்டியவரின் மண்டையை உடைத்துத் தென்னை பழி வாங்கி விட்டது எனப் பல்வேறு அர்த்தங்களை இந்த ஒரு சிறு கதையின் மூலம், அர்த்தங்களை நாம் விரிவு படுத்த முடியும்.   

மலையாள மனோரமாவில் வெளிவந்த ‘ஒரு பூ’ என்ற 6 வரிக்கதை மிகவும் சிறப்பு.  எந்த நாட்டிலுமில்லாத ஒரு பூ பூக்கிறது.  அது திருடர்களுடைய பூ.  ஒரு போலீஸ்காரன் அதைத் திருடிக்கொண்டு(!) போய்விடுகிறான்.  அச்சமயம் திருடர்கள் போலீஸ்காரருடைய உடையைத் திருடப் போயிருந்தார்கள் என்ற கடைசி வரியில், நகைச்சுவையும் இழையோடுகிறது.

ஒரு குழந்தையின் இயல்பான படைப்பூக்கம் கதை சொல்வதில் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்து கொள்ளவும், இக்கதைகளை வாசித்தல் அவசியம்..

வகைமொழிபெயர்ப்புக் கதை
ஆசிரியர் –  மலையாளம் தமிழாக்கம்வி.அபிமன்யு உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 +91 9176549991
விலை₹30/-
Share this: