மரப்பாச்சி சொன்ன ரகசியம்

Marapachi_Rakasiyam

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள். 

திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. தன் பெயர் இளவரசி என்றும், அவளுக்குத் தான் உதவியாக இருப்பேன் என்றும் சொல்கிறது.  அது பேசுவதைப் பார்த்து முதலில் பயந்தாலும், பின்னர் மரப்பாச்சியை அவளுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.  அதை விட்டுப் பிரிய மனமின்றி எங்குச் சென்றாலும், அதையும் தன்னுடன் எடுத்துச் செல்கின்றாள் ஷாலு. பள்ளியில் அவள் தோழிகளிடத்திலும், நம்ப முடியாத பல சாகசங்களை அது செய்கிறது.

ஷாலுவின் தோழி பூஜாவிற்கு வெளியில் சொல்ல முடியாத ஒரு சங்கடம் நேருகின்றது.  அதுவும் வீட்டுக்குக் கீழே குடியிருக்கும் தாத்தாவால் நேருகின்றது.  “விஷயத்தை வெளியில் சொன்னால், உன்னைத் தான் அடிப்பார்கள்; பள்ளிக்குக் கூட அனுப்பாமல், வீட்டுக்குள் உன்னை வைத்துப் பூட்டிவிடுவார்கள்” என்று அவளை அவர் பயமுறுத்தி வேறு வைத்திருக்கிறார்.    

அதனால் தன் அம்மாவிடம் கூட பிரச்சினையைச் சொல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கும், மனவேதனைக்கும் உள்ளாகிறாள் பூஜா.  ஷாலுவின் மூலமாகப் பூஜாவின் பிரச்சினையை அறிந்து கொள்ளும் மரப்பாச்சி அவளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி விளக்குகிறது.

“உள்ளாடை அணிந்திருக்கும் அந்தரங்கமான பகுதியை யாரேனும் தொட்டால், உடனே சத்தம் போட்டுக் கத்தணும்;  அந்த இடத்தை விட்டு உடனே ஓடி வந்துடணும்; அம்மாவிடம் அது பற்றி உடனே சொல்லணும்; அம்மாக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு, மிரட்டுனதையும் சொல்லணும்”  என்று சொல்லி மரப்பாச்சி அவளுக்குத் தைரியம் கொடுக்கிறது.

மரப்பாச்சி சொன்னதைக் கேட்டு, பூஜாவிற்குத்  தைரியம் வருகிறது.  அம்மாவிடம் சொல்லுவதால், அந்தப் பிரச்சினையிலிருந்து அவளுக்குத் தீர்வும் கிடைக்கிறது.  அந்தத் தாத்தா பயமுறுத்தியது போல் தன்னை வீட்டுக்குள் பூட்டி வைக்கவில்லை; அடிக்கவில்லை என்று பூஜா தெரிந்து கொள்கிறாள்.  இந்தச் செய்தி இந்நாவலை வாசிக்கும் குழந்தைகளுக்கும் போய்ச் சேர்ந்து, அவர்கள் விழிப்புணர்வு பெறுவது நிச்சயம்.

முன்பை விட தற்போது குழந்தைகளின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது.  அதுவும் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே இது நிகழ்கிறது.  இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு அவர்கள் உடலைப் பற்றியும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றியும் சொல்லிக் கொடுப்பது நம் கடமையாகிறது.

குழந்தையிடம் யாரேனும் அத்து மீறி நடந்தால், உடனே அது பற்றித் தன் பெற்றோரிடம் அவள் தைரியமாகத் தெரிவிக்கவேண்டும் என்று மரப்பாச்சியின் மூலமாக ஆசிரியர் இந்நாவலில் தெரிவித்துள்ளார். அத்து மீறுபவர்கள் செய்யும் மிரட்டலுக்குப் பயப்படக் கூடாதென்றும் ஆசிரியர் வலியுறுத்தியிருக்கிறார்.

“இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சினை மட்டுமல்ல; நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணி தான். இதை வெறும் கதையாகக் கடந்து போய்விட வேண்டாம்.  இது பற்றி உங்கள் அம்மா  அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்” என்று தம் முன்னுரையில் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

மரப்பாச்சி பொம்மை, தஞ்சாவூர் பொம்மை, பார்பி பொம்மை, கோகோ ஆட்டம், பாராகிளைடிங், வைணு பாப்பு வானிலை ஆராய்ச்சி மையம் போன்றவற்றைப் பற்றிய செய்திகளையும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வசதியாகப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்துள்ளமை சிறப்பு.

குழந்தைக்குத் தன் உடல் தன் உரிமையென்றும், பாதுகாப்பற்ற தொடுதல் நடந்தால் அது பற்றி உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வூட்டும் சிறந்த நாவல். 

குழந்தைகளின் பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வூட்டும்  இந்நாவலுக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்தது .  குழந்தைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலை₹ 60/-
Share this: