இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

V.O.Chidambaram

ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று!  நம் நாட்டின் விடுதலைக்காகச் சொத்து, சுகம், தொழில், வாழ்க்கை என அனைத்தையும் இழந்த, தியாகச் செம்மலின் பிறந்தநாள்!

இவர் போல் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை, குழந்தைகள் அறியச் செய்வது, நம் தலையாய கடமை.  இவர்கள் செய்த தியாகங்களின் பலனைத் தான், இன்று நாம் அனுபவிக்கிறோம்!  இவர்களின் பிறந்த நாளிலாவது, இவர்கள் செய்த தன்னலமற்ற தொண்டையும், தியாகத்தையும் ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்வது,  நம் கடமையல்லவா?.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், வக்கீல் தொழிலைச் செய்து கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம்.  ஆனால் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் சொத்துக்களை இழந்து, வெள்ளையருக்கு எதிராகச் சுதேசி கப்பல்களை ஓட்டி, சிறையில் கொடுமையான சித்ரவதைகளை அனுபவித்தவர்.  சிறையில் இருந்த போது செக்கிழுத்தமைக்காகச் ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படுகின்றார்

16-10-1906 அன்று சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி பதிவு செய்து, “எஸ்..எஸ். காலியோ”, “எஸ். எஸ். லாவோ” என்ற இரண்டு கப்பல்களை வாங்கினார்.  தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்ற ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களின் அவல நிலையைப் போக்க, வ.உ.சி அவர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் அந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர்

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினார். அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே உரையாற்றுவார் என்றறிந்த ஆங்கில அரசு, அதைத் தடை செய்ய விரும்பியது. அவரின் எழுச்சி மிக்க உரையின் வீச்சு அப்படிப்பட்டது!

வ.உ.சிதம்பரம், சுப்பிரமணி சிவா ஆகிய இருவரையும், திருநெல்வேலியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். வ.உ.சி. ஆட்சியரது  நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதால், இருவரையும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்தனர்..

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன், மக்கள் கொந்தளித்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கோரல் நூற்பாலை தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்  வ.உ.சி. யைக் கைது செய்தமைக்காக நடந்த வேலை நிறுத்தமே, இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தமாக, வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

தேசத்துரோகி என்று குற்றஞ் சாட்டப்பட்ட இவருக்கு, 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  ஆனால் மேல் முறையீட்டில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது.  1908 முதல்1912 வரை, இவர் சிறைவாசம் அனுபவித்தார். இவர் சிறையிலிருந்த போது, இவர் துவங்கிய சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது.

அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பலை, ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டனர்.. அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. ” மானம் பெரிதென கருதாமல் வெள்ளையனிடமே விற்றதற்கு பதிலாக, அந்தக் கப்பலை உடைத்து நொறுக்கி, வங்கக் கடலில் வீசியிருக்கலாம் ” எனக் கொந்தளித்தாராம்..

வ.உ.சி. யின் வழக்கறிஞரின் உரிமமும், ஆங்கிலேய அரசால் பறிக்கப்பட்டதால் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், குடும்பம் நடத்த வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டார்.  மண்ணெண்ணெய் கடை, அரிசி கடை நடத்திப் பார்த்தும், போதுமான வருமானமில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.

தான் சிறையில் இருந்தாலும், அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால், வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். 1908-ஆம் ஆண்டு ஈ.எச். வாலஸ் திருநெல்வேலியில் பணியாற்றிய போது, வ.உ.சி.யின் நேர்மையையும், திறமையையும் அறிந்திருந்தபடியால், அனுமதி அளித்தார். இச்செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வஉசி தமது கடைசி மகனுக்கு “வாலேஸ்வரன்” என்று பெயரிட்டார்.

சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி, அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். இவர் நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி, தமிழுக்கும் பெரிய தொண்டு ஆற்றியிருக்கிறார். தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பல கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்.  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

வ.உ.சி பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தை, இதுவரை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? ஒட்டப்பிடாரத்துக்கு அக்கம்பக்கம் உள்ள ஊர்களில் வாழ்பவர்கள், இதுவரை எப்போதாவது அவரது நினைவில்லத்தைப் போய்ப் பார்த்ததுண்டா?   இதுவரை செய்யாவிடிலும் பரவாயில்லை.

உங்கள் வீட்டுக் குழந்தைகளை, இவர் போன்ற தலைவர்களின் நினைவு இல்லங்களுக்கு முடியும் போது அழைத்துச் சென்று, அவர்கள் வாழ்க்கை பற்றியும், செய்த தியாகங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். 

இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம்  எனச் சாதனைகள் படைத்து வரலாற்றில் அழியாப் புகழைப் பெற்ற வ.உ.சிதம்பரனார், ஒரு தமிழன் என்பதில் நாம் பெருமை கொள்ளுவோம்!   

Share this:

2 thoughts on “இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

  1. சிறப்பான கட்டுரை. ஆங்கிலேயக் கப்பல் கம்பெனிக்கு எதிராக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்த, கப்பலோட்டிய தமிழன் என்று பாராட்டப்பட்ட வ.உ.சி. சிறையிலும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் பட்ட துன்பங்களை நினைத்தால் மனம் கனக்கிறது. இளைய தலைமுறையினர் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஆளுமை.

Comments are closed.