பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

Marapachi_rakasiyam

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும்  மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.  சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய புரஸ்கார்  விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது..

அதன்படி தமிழ் மொழிக்கான 2020 ஆண்டுக்கான பால சாகித்ய அகாடமி விருது, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இளையோர் நாவலை எழுதிய எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்நூலை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  டி.என்.ராஜன் ஓவியங்கள் வரைந்துள்ளார்.

மூத்த சிறுவர் எழுத்தாளர்களான எம்.கமலவேலன், ருத்ர துளசிதாஸ், யூமா வாசுகி ஆகியோர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.   2014 முதல் 2018 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் வெளியான சிறார் நூல்களிலிருந்து, இந்த நூலை விருதுக்காகத் தேர்வு செய்தனர்.  பால சாகித்ய புரஸ்கார் விருது பெறுபவர்களுக்குச் செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.

‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘தலை கீழ் புஸ்வாணம்’, ‘மந்திரச் சந்திப்பு’, ‘பூமிக்கடியில் மர்மம்’ உள்ளிட்ட பல கதை நூல்களை இளையோர்க்காக இவர் எழுதியுள்ளார்.  ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நூல்களையும் தொடர்ந்து இவர் எழுதி வருகிறார். ஆட்டிசம் குறித்த இவர் விழிப்புணர்வுக் கட்டுரைகளை ‘யெஸ்.பாலபாரதி’ என்ற வலைப்பூவில் வாசிக்கலாம்.  அதற்கான இணைப்பு:-http://blog.balabharathi.net

குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை ‘குறித்துப் பேசும் போது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், ‘நல்ல தொடுதல்’, ‘கெட்ட தொடுதல்’ என்பவை முற்றிலும் சரியான பதங்கள் அல்ல.  மாறாக பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் என்பவையே சரியானவை.  இவற்றையே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் இவர், இந்தப் பதங்களை விருது பெற்றிருக்கும் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலில் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்.

“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு, பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல், அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக் கொடுக்கும்” என்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார்.

இந்நாவலில், செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. அப்போது ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்களே இதன் கதை.

“ஒவ்வொரு சிறுவனுக்கும், வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களுடைய கற்பனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை உயரும்; ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளின் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி. இந்நாவல் ஏற்கெனவே 2018 விகடன் நம்பிக்கை விருது, வாசக சாலை விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளது. 

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களைச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.

Share this: