டாம் மாமாவின் குடிசை

tom maamavin book cover

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.  கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் வகையில், பி.ஏ.வாரியார் மலையாளத்தில் வெளியிட்டுள்ள நூலின் தமிழாக்கமே, ‘டாம் மாமாவின் குடிசை’.

கறுப்பின அடிமைகள் அனுபவித்த கொடுமைகள் குறித்துப் பேசும் முதல் நாவலான  இது, வெளியான ஓராண்டில் 3 லட்சம் பிரதிகள் விற்றது.  இதற்குப் பிறகு தான் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான அமெரிக்க உள்நாட்டுப் போர் துவங்கியது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல், கறுப்பின மக்களின் மீதான வெள்ளையரின் ஒடுக்குமுறை பற்றியும், அடிமை வியாபாரம் குறித்தும் பேசுகின்றது. 

கறுப்பினத்தைச் சேர்ந்த டாம். என்பவர் ஹேலி என்ற வெள்ளைக்காரரிடம் அடிமையாக வேலை செய்கிறார்.  மிகவும் நம்பிக்கையானவரும் எஜமானர் மீது மிகுந்த பக்தியும் கொண்டவருமான அவரைத் தம் கடனைத் தீர்ப்பதற்காக ஷெல்பி என்ற வியாபாரியிடம் விற்க தீர்மானிக்கிறார் ஹேலி.  டாமுடன் சேர்த்து, வீட்டில் வேலை செய்யும் எலிசாவின் குழந்தையையும், அந்த வியாபாரி வாங்குவதற்குக் கேட்கவே, வேறு வழியின்றி அதற்கும் சம்மதிக்கிறார் ஹேலி.   

எலிசாவும், குழந்தையும் அவள் கணவன் ஜார்ஜூம் மிகவும் கஷ்டப்பட்டு கனடாவுக்குத் தப்பித்து ஓடுகின்றார்கள்.  டாம் எலிசாவுடன் ஓடிப்போக நேரமிருந்தும், ‘என்னை நம்பியிருக்கும் எஜமானரை நான் ஏமாற்ற மாட்டேன்’’ என  மறுத்து விடுகின்றார்.  முதல் இரண்டு ஆண்டுகள் ‘டாம் மாமா’ என்றழைத்துப் பாசத்தைப் பொழியும் இவா என்ற சிறுமியின் வீட்டில் வேலை செய்யும் டாமை, பின்னர் சைமன் கெல்ரி என்பவன் வாங்குகிறான்.  அங்கு டாம் கொடுமையான சித்ரவதைகளை அனுபவிக்கின்றார். டாம் மாமா அனுபவித்த கொடுமைகளும், சித்ரவதைகளும் வெள்ளையரிடம் அடிமைகளாகக் கிடந்த கறுப்பின மக்களைத் தூண்டிவிட்டு, அவர்தம் விடுதலைக்குப் போராட காரணமாக அமைகின்றன..

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், இனவெறி காரணமாக கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், அவர்தம் போராட்டங்களின் பின்னணி குறித்தும் இளையோர் தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல். 

  வகை  Uncle Tom’s Cabin – ஆங்கில நாவல் மொழிபெயர்ப்பு (மலையாளத்திலிருந்து தமிழாக்கம்)
ஆசிரியர்ஆங்கிலம் – Harriet Beecher Stowe. மலையாளம் – பி.ஏ.வாரியார் தமிழாக்கம் – அம்பிகா நடராஜன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை 044-24332424  91-9498002424
விலை₹60/-
Share this: