சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

Suriyanai_Olithu_pic

இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது.

காலுக்கும் தலைக்கும் வைக்கும் தலையணைகள், ஒன்றுக்கொன்று நான் தான் உசத்தி என்று சண்டை போடுகின்றன; அவற்றுக்குப் புத்திமதி சொல்லித் தவறை உணர வைக்கின்றது மெத்தை. 

மின்மினி பூச்சிகள் மருத்துவ வாகனத்துக்கு ஒளி கொடுத்துச் சென்று பயணம் செய்ய வைத்து, நாய்க்குட்டியைக் காப்பாற்றுகின்றன. காட்டுக்குச் சென்ற அப்பு, சோப்புக்குமிழியைப் பிடித்துக் கொண்டு, வானத்தில் பறக்கின்றான்.  பறந்தபடியே காட்டு விலங்குகளை வேடிக்கை பார்க்கின்றான்.  முடிவில் தாத்தாவின் அறிவரைப்படி பத்திரமாகக் கீழே இறங்குகின்றான். வெயிலில் சூடேறி மேலே பறந்த சோப்புக்குமிழியை மேகம் கறுத்துக் குளிர்ந்திருந்த பகுதியில் இறங்கச் சொல்கிறார். ஒரு அறிவியல் உண்மையைக் கதையின் வழியே, சிறுவர்க்கு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

நிலாவை வாளித் தண்ணீரில் பிடித்து, விளையாடுகின்றாள் கலா.  இன்னொரு கதையில், தாவரங்கள் பூக்களின் நிறத்துக்கும் வாசனைக்கும் என்ன காரணம் எனத் தேடி அலைகின்றது, தேன்சிட்டு.   பூச்சிகளை ஈர்த்து மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்காகப் பூக்கள் பல வண்ணங்களில் பூக்கின்றன என்ற அறிவியல் உண்மையை, இக்கதை சொல்கிறது.  

குழந்தைகளின் தலையணைகளில், குஞ்சுக் கனவுகள் வசிக்கின்றன. அதற்கு ஆசை என்று பெயர் வைக்கிறாள் குழந்தை.  அது செல்லமாக அவளை இளவரசி என்று அழைக்கின்றது.  இளவரசி ஆசையோடு சேர்ந்து விளையாடுகின்றாள்.

‘அதீபா பெற்ற திகில் அனுபவம்’ கதையில், பாலைவனத்தைப் பற்றிய உண்மை செய்திகள் இடம்பெற்றுள்ளன. ‘சூரியனை ஒளித்து வைத்த சிறுமி’ கதையில், ஓவியத்தில் இருந்த சிறுமி சட்டென்று வெளியே குதிக்கின்றாள்.  ஓவியங்களில் உள்ள வண்ணங்களை மாற்றி விளையாடுகின்றாள். சூரியனைக் கடலுக்கடியில் மறைத்து வைக்கின்றாள்.  பொழுது விடியும்போது அவளும் ஓவியச் சட்டத்தில் புகுந்து கொள்கிறாள்.

‘ஆழ்கடலில் ஓர் அதிசயம்’ கதையில், ஒரு திமிங்கலத்தைச் சிறுவர்கள் பார்க்கிறார்கள் அது கடலில் இருக்கும் குப்பைக் கூளங்களைத் தின்கிறது; முடிவில் அதைப் பற்றிய ஒரு வியப்புக் கலந்த அறிவியல் உண்மையை இருவரும் தெரிந்து கொள்கிறார்கள்.

விநோதமும், விசித்திரமும் நிறைந்த கற்பனையுடன் கூடிய கதைகள்.  சிறுவர்களுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 செல் 8778073949
விலைரூ 70/-

Share this: