கேளு பாப்பா கேளு – சிறுவர் பாடல்கள்

Kelu_pappa_pic

இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன.

குழந்தை கை வீசுவதில் துவங்கி, சாய்ந்தாடுதல், நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல், தூங்க வைத்தல் என்பது வரை, அனைத்துச் செயல்களிலும் பாடல்கள், நம் மரபில் முக்கிய இடம் வகிக்கின்றன. சிறுவர்களுக்குத் தெரிந்த எளிய சொற்களில், இனிய ஓசையுடன் பாடுவதற்கேற்றவாறு இப்பாடல்கள் அமைந்துள்ளன.

குழந்தைகளுக்கு இயற்கையைக் கூர்ந்து நோக்குவதும், பிற உயிர்களைப் பார்த்து ரசிப்பதும் பிடித்த பொழுதுபோக்கு.  இதிலும் குயிலக்கா, சிட்டுக்குருவி, காக்கா, நாய்க்குட்டி, அணில், வண்ணத்துப்பூச்சி, எனக் குழந்தைகளுக்குத் தெரிந்த, அவர்களுக்கு மிகவும் பிடித்த உயிரினங்கள் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களை வியப்பிற்குள்ளாக்கும் நிலா, நட்சத்திரம், புகைவண்டி, கப்பல் போன்ற உயிரற்ற பொருட்கள் குறித்த பாடல்களும் இதில் உள்ளன.

முதல் பாடலான, ‘குயிலக்கா’வில் மரமின்றித் தவிக்கும் ஒரு குயிலுக்குக் குட்டிப்பொண்ணு ஒருத்தி, ‘குட்டிச்செடி வளர்த்து, அது மரமான பின்னால் உனக்குத் தருவேன்’ என்ற நம்பிக்கை வார்த்தை சொல்லி மகிழ்வூட்டுகிறாள். ‘பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதில்லை; அனைத்து உயிர்களுக்குமானது’ என்ற உண்மையை, இப்பாடல் சொல்கிறது. பல பாடல்கள் இயற்கையைப் போற்றிக் காக்கவும், பிற உயிர்களை நேசிக்கவும், கற்றுக் கொடுக்கின்றன.

இந்த அறிவியல் நூற்றாண்டில், பகுத்தறிவுடன் மூடநம்பிக்கையை அகற்றிக் கேள்வி கேட்டுச் சிந்திக்க வலியுறுத்தும் பாடல்களும் இதில் உள்ளன.

கேளு பாப்பா கேளு’என்பதில் கேள்வி கேட்பதன் அவசியம் சொல்லப்படுகின்றது.

“கேளு பாப்பா கேளு

கேள்விகள் யாவும் கேளு

கேள்விகள் வந்தது எப்படிக் கேளு

விஞ்ஞானம் வளர்ந்தது, எப்படிக் கேளு

மெய்ஞானம் என்றால், என்னன்னு கேளு

அஞ்ஞானம் அழிக்க, வழி என்ன கேளு

கேளு பாப்பா கேளு

கேள்விகள் யாவும் கேளு!”

‘எழுதப் படிக்கத் தெரியணும் பாப்பா!’ என்ற பாடலில், படிப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்ற பாடல், வறுமையின் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும் மாரியம்மாவின் அவல நிலையைப் பேசுகின்றது.

“பறக்கலாம்” என்ற பாடலிலிருந்து

“படியுங்கள் படியுங்கள் புத்தகமே

பறக்கலாம் பறக்கலாம் வானத்திலே

வீசிடும் வீசிடும் காற்றினிலே

விரிக்கலாம் விரிக்கலாம் சிறகுகளே!” என்று, வாசிப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

தமிழ்மொழியின் சிறப்புகளை, அகர வரிசையில் அமைந்த, ‘தமிழ்மொழி’ பாடல் எடுத்தியம்புகின்றது. தாய்மொழியில் நல்ல தேர்ச்சி பெற, இந்நூலை அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்குப் பாடக் கற்றுக்கொடுப்பீர்!

வகைசிறுவர் பாடல்கள்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 செல் 91765 49991
விலைரூ 40/-

Share this: