சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

Dad reading to child

Imagination is more important than knowledge.

– Albert Einstein

நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப் புத்தகங்களைக் கற்பிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.  இதற்கு முக்கிய காரணம், சிறந்த தனியார் பள்ளியில், தம் குழந்தைக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதே.  

தம் குழந்தை எல்லாப் பாடங்களிலும், அதிக மதிப்பெண் பெற்று, சிறந்த அறிவாளியாகத் திகழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் 0-5 வயதில் குழந்தைகளின் கற்பனை திறனை வளர்ப்பது, அறிவை வளர்ப்பதை விட முக்கியமானது என்பதையே அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன.  இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட, சாதனையாளர் பலரின் பரிந்துரையும் இதுவே.

குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருக வேண்டுமானால், இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கம் துவங்க வேண்டும்.  குழந்தைகளிடம் இந்த வாசிப்புத் திறனை வளர்ப்பதில், பெற்றோரின் பங்கு, மிக முக்கியமானது.

இதற்குப் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன ?

  1. குறைந்த பட்சம் பத்து கதைப் புத்தகங்களாவது வாங்கி, குழந்தைக்கான முதல் நூலகத்தை, வீட்டிலேயே அமைக்க வேண்டும். 
  2. தங்கள் குழந்தையின் வயதுக்கேற்ற, கதைப் புத்தகங்கள் வாங்குவதைச் செலவாக எண்ணாமல், முதலீடாகக் கருதுவது அவசியம்.
  3. குழந்தைகளின் வயதுக்கேற்ற சரியான நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. தங்கள் நேரத்தில் சில மணித்துளிகள், குழந்தைகளுக்காக ஒதுக்கி அவர்களுடன் சேர்ந்து, கதை வாசிப்பது மிக முக்கியம்.  மேலை நாடுகளில் தினந்தோறும் இரவு உறக்கத்துக்கு முன் குழந்தைகளுக்குக் கதை வாசித்துக் காட்டுவது, குறிப்பிடத்தக்கது.
  5. பெற்றோர் தாம், குழந்தையின் முன்மாதிரி.  எனவே பெற்றோர் முதலில் வாசிப்புப் பழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்வது, மிக மிக அவசியம்.

மேலை நாடுகளை நாம் பார்த்து வியக்கக் கூடிய விஷயங்களில், மிக முக்கியமான ஒன்று, அவர்களின் நூலகங்களும், அதிலும் குறிப்பாக அவற்றினுள் அமைந்திருக்கும், சிறார்க்கான பகுதியும் தாம்.  வண்ணச் சுவர்கள், ரயில் வண்டி போல மரத்தினால் செய்யப்பட்ட புத்தக அலமாரி, சிறிய நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றை, நூலகத்தினுள் குழந்தைகளைக் கவரும் விதத்தில், மிக அழகாக அமைத்துள்ளனர்.  அதில் மிக முக்கிய அம்சம், மண்டி போட்டுத் தவழ்ந்து செல்லும் குழந்தை கூட தானே சென்று, அதற்கு எட்டக் கூடிய உயரத்தில் அடுக்கப்பட்டிருக்கும், புத்தகத்தை எடுத்துப் பார்ப்பதும், விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்வதும் தான். 

நம் நூலகங்களில் இத்தகைய வசதி இல்லாவிடினும், பெற்றோர் அவரவர் வீடுகளில், இத்தகைய அமைப்பை ஏற்படுத்துவது, எளிதான காரியமே. குழந்தைகள் வீட்டில் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுச் சாமான் கூடையிலோ, அவர்களுக்கு எட்டக்கூடிய உயரத்தில் அமைந்துள்ள சிறிய மேசையிலோ, ஐந்திலிருந்து பத்து புத்தகங்களை அடுக்கி வைத்து, குழந்தைக்கான முதல் நூலகத்தை, வீட்டிலேயே அமைத்து விடலாம். 

உங்கள் குழந்தைக்கான முதல் நூலகம்

இதை வாசித்தவுடன், உங்கள் மனதில் எழக்கூடிய கேள்வி, பெற்றோர் குழந்தைக்கு, எந்த வயதிலிருந்து, கதை புத்தகங்களை வாசிக்கத் துவங்கலாம் என்பது தானே ?  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள் என்கின்றனர், வல்லுநர்கள்.  குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அதற்குக் கேட்கும் திறன் இருப்பதால், நூல்களை வாசிக்கலாம் என்கின்றனர்.

பிறந்து சில மாதங்களேயான குழந்தைக்கு, நீங்கள் வாசிப்பது புரியாவிடினும், பலவிதமான ஒலிகளுடன் கூடிய சொற்களை, அவர்கள் கேட்டுப் பழக, இந்த வாசிப்பு உதவுகிறது.  மேலும் நீங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக அமர்ந்து, மகிழ்ச்சியாகச் செலவிடும் நேரம், அவர்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி  பாசப்பிணைப்பை வலுப்படுத்தும்.   

கதையை எப்படி வாசிக்க வேண்டும் ?

கதையை ஒரு சொல் விடுபடாது, வாசித்து முடிக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ  அதையே திரும்பத் திரும்ப வாசியுங்கள்.

விலங்கு போன்று சத்தமிடுதல், குழந்தையிடம் கேள்வி கேட்டு நீங்களே பதிலளிப்பது, பாடல்களை ராகத்துடன் பாடுவது, என வாசிக்கும் நேரத்தைக் குழந்தைகள் ரசிக்கும் வகையில், அமைத்தல் நன்று.

குழந்தைகளின் கனவுகள், வண்ணங்களால் நிறைந்தவை; அவர்களின் கனவுலகின் திறவுகோல், கதைப் புத்தகங்களே.  வருங்காலத்தில் உங்கள் குழந்தை சிறந்த அறிவாளியாகவும், சிந்தனையாளனாகவும் திகழ வேண்டுமானால், இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கம் துவங்க வேண்டும்.  எனவே வாசிப்பின் சுவையை, அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்க உதவுங்கள்.

If you want your children to be intelligent, read them fairy tales.  If you want them to be more intelligent, read them more fairy tales.

Albert Einstein

Share this:

3 thoughts on “சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

  1. Very good article for parents to introduce reading habit to their children.

  2. Very nicely written for parents and should start from there.. especially the pictures relates to the article.. it helps readers to connect well..

Comments are closed.