குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

kuzhandaigalluku kadhai sollungal post feature image

மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க  வேண்டும் என்ற கட்டாயமில்லை.  பெற்றோர் இருவருமே, அந்தப் பொறுப்பைத் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, தினந்தினம் புத்தகம் வாசித்துக் காட்டிக் குழந்தையை மகிழ்வித்துத் தூங்க வைக்கிறார்கள்.  குழந்தைகள் உறக்கத்தில் இனிய கனவுகள் காண்பதுடன், பாதுகாப்பு உணர்வையும் பெறுகிறார்கள்.

நம் தமிழ்ச்சூழலிலும், குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கம் தொன்று தொட்டு, இருந்து வந்துள்ளது.  கூட்டுக் குடும்பத்தில் பாட்டி, தாத்தா, வழி வழியாக அவர்களுக்குத் தெரிந்த நாட்டுப்புறக் கதைகளைச் சொல்வார்கள்.  இடுப்பில் சுமந்து சாப்பாடு ஊட்டும் போது, அம்மா கதை சொல்வார் கதை கேட்கும் சுவாரசியத்தில்,குழந்தை அடம் பிடிக்காமல் சாப்பிடும். நிலாவில் வடை சுடும் பாட்டிக் கதைகள், அப்படி உருவானவை தாம்.  நிலாவைக் காட்டிச் சோறூட்டும் பழக்கம், சங்கக் காலத்திலேயே இருந்திருக்கிறது!

தமிழ்ச் சமூகத்தில் குழந்தை வளர்ப்பு விஷயத்தில், பழைய தலைமுறைகளைச் சேர்ந்த ஆண்கள், சிறிதும் பொறுப்பேற்கவில்லை.  குடும்பம் என்றாலே, எல்லாமே பெண்கள் தலையில் தாம்! வெளியில் சென்று, குடும்பத்துக்காகச் சம்பாதித்துத் தருவதோடு, ஆண்களின் கடமை முடிந்துவிட்டது என்ற எண்ணம், அப்போது வலுப்பெற்றிருந்தது..  எனவே பழங்காலத்தில், தந்தையிடம் கதை கேட்டு வளர்ந்த, தமிழ்க் குழந்தைகள், மிகவும் அபூர்வமே.

ஆனால் தற்காலத்தில் ஆணுக்கிணையாகப்  பெண்ணும், வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கத் துவங்கிய பின், குழந்தை வளர்ப்பில், ஆணும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.  கூட்டுக்குடும்பமும் மிகவும் குறைந்து விட்டதால், குழந்தைக்குக் கதை சொல்ல பாட்டி, தாத்தாவும் இப்போது இல்லை. எனவே தற்காலத் தமிழ்ச் சமூகத்தில், அப்பாக்களும், குழந்தைக்குக் கதை சொல்லும் ஆரோக்கியமான சூழல், உருவாகி வளர்ந்து வருகின்றது.  இது பெரிதும் வரவேற்க வேண்டிய விஷயம்!  எல்லாக் குடும்பங்களிலும், இது பல்கிப் பரவ வேண்டும். 

சரி. குழந்தைகளுக்கு, ஏன் கதை சொல்ல வேண்டும் ?

கதைகள் குழந்தைகளை மகிழ்விக்கின்றன.  கேட்கும் திறனும், சொல்வளமும் பெருகுகின்றன. பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான இடைவெளியைக் குறைத்து, நெருக்கத்தை அதிகப்படுத்துகின்றன. அவர்கள் கற்பனையை வளர்த்துப் .படைப்புத் திறனை ஊக்குவிக்கின்றன. 

இன்று உலகில் நாம் அனுபவிக்கும், அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கும், வானவியல் அதிசயங்களுக்கும், இந்தக் கற்பனா சக்தியும், படைப்பூக்கமுமே, அடிப்படையான காரணங்கள். பெரியவர்களின் பொதுப்புத்தியில் ஊறிப் போயிருக்கும் வறட்டுத் தனமான முன்முடிவு, எதுவுமின்றிக் கதைகளைப் புதிதாய் அணுகும், குழந்தைகளின் படைப்பூக்கத் தீப்பொறிகளே, பின்னாளில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகளாக மலர்கின்றன.  

கதை சொல்லும் போது, அதை உள்வாங்கி, குழந்தைகள் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்குக் “கதைன்னா அப்படித்தான்; அதுக்குக் காலும் கிடையாது; கையும் கிடையாது; வாயை மூடிக்கிட்டு சொல்றதை கேளு” என்று அதட்டி, உருட்டிப் பயமுறுத்தாமல், பொறுமையாகப் பதில் சொல்லுங்கள்.  குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டுப் புரிந்து கொள்ளும் போது, அவர்கள் சிந்தனைத் திறன், ஊக்குவிக்கப் படுகின்றது.  கதையை விமர்சனம் செய்யும் திறமையும், வளர்கிறது.

குரலை ஏற்றியும், இறக்கியும், முகபாவங்களை மாற்றியும், சுவாரசியமாகக் கதை சொன்னால், குழந்தைகள் உற்சாகமாகக் கேட்பார்கள். கதையை ஒரு கட்டத்தில் நிறுத்தி, அடுத்து என்ன நடக்கும் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  யோசித்து அவர்கள் சொல்லும் முடிவு, நீங்கள் சொல்லும் முடிவை விட, பிரமாதமாய் இருக்கலாம்.  வருங்காலத்தில் அவர்கள் சிறந்த எழுத்தாளராக பிரகாசிக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது!ஆகவே பெற்றோரே! அவசியம் கதை சொல்லிக் குழந்தைகளை வளருங்கள்!   கொரோனா பொது முடக்கத்தின் விளைவாக, சுவாரசியமாகக் கதை சொல்லும் பல காணொலிகள், ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன.  அவற்றையும், சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

Share this:

3 thoughts on “குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

  1. கதை சொல்லல் என்பது வெறும் பொழுது போக்கு அல்ல: அறிவூட்டல் மற்றும் குழந்தைகளுக்கான அகத்திறப்புக்கான செயல் என்பதை அழகுற விளக்குகிறது ” குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள் “. என் குழந்தைகளுக்கு கதை சொன்ன அபூர்வ ஆண்களில் நானும் ஒருவன் என்பதில் நிறைவு.வாழ்த்துக்கள் இதழ் குழுவிற்கு

  2. சிறப்பானதொரு முயற்சி. வாழ்த்துக்கள்

Comments are closed.