சிறுவர் நாடகக் களஞ்சியம்

Siruvar_Nadagam_pic

இந்தச் சிறுவர் நாடகத் தொகுப்பில் 37 நாடகங்கள் உள்ளன.  குழந்தை இலக்கிய முன்னோடிகளான அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கூத்தபிரான், ரேவதி போன்றோர் எழுதியவற்றுடன், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்களையும் சேர்த்து இதில் தொகுத்துள்ளார், தொகுப்பாசிரியர் மு.முருகேஷ்.  தமிழில் சிறுவர் நாடகங்கள் பற்றிய பொதுவான பார்வையைப் பெற, இத்தொகுப்பு உதவுகின்றது.

‘மூத்த எழுத்தாளர்கள் யாரும் இன்று நாடகங்கள் எழுதுவதில்லை; சிறுவர் நாடகங்களை எழுதினாலும் அவற்றைப் பிரசுரிக்க இதழ்கள் ஏதும் முன்வருவதில்லை; நூலாக்கம் செய்வதற்கும் பதிப்பகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை’ என்று சிறார் இலக்கிய மூத்த எழுத்தாளர்கள், வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தியைத் தம் உரையில் தொகுப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய ரோஜாச்செடி மிகவும் பிரபலமானது.  இத்தொகுப்பில் முதல் நாடகமாக ரோஜாச்செடி இடம்பெற்றுள்ளது.  குழந்தைகள் பொய் பேசக் கூடாது; அடுத்தவரின் பொருளை ஏமாற்றி வாங்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் நாடகமிது. 

தேவைக்கு மேல் பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பதும் ஒரு திருட்டு தான் என்ற கருத்தைக் கூத்தபிரான் எழுதிய ‘இதுவும் ஒரு திருட்டு தான்’ என்ற நாடகம் பேசுகிறது.

இக்காலத்துக்கு மிகவும் அவசியமான சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது, மு.கலைவாணன் எழுதிய “காப்போம் வாரீர்” நாடகம்.  இதில் நெகிழியின் தீமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  நீரைச் சேமிக்க வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்களைச் சொல்லும் நாடகங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மின்மினிப்பூச்சிகளைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைப்பது தவறு என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது, சென்னிமலை தண்டபாணி எழுதிய ‘வள்ளி என்ன செய்தாள்?’ என்ற நாடகம்.  பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்ற கருத்தையும், இது குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறது.

வேலு சரவணனின் ‘ஓவியர் நரி’ நாடகத்தில் வரும் விலங்குகள், கரும்பலகை, பேப்பர் என எல்லாமும் பேசுகின்றன. கல்வியின் அவசியம், சேமிப்பின் பயன் ஆகியவற்றைச் சில நாடகங்கள் எடுத்துச் சொல்கின்றன. 

குழந்தைகளுக்கான நாடகங்களைப் படைப்பதோடு, அவற்றைப் பள்ளி விழாக்களில் மேடையேற்ற வேண்டும்.  சிறு நாடகங்களைக் குழந்தைகளை வைத்து நடிக்க வைத்து அவற்றைக் காணொளிகளில் பதிவேற்றலாம்.

நாடகக் கலை காட்சிப்பூர்வமானது என்பதால் பார்வையாளர்களை உடனே ஈர்க்கும் சக்தி கொண்டது.  குழந்தைகளுக்கான சிந்தனைகளை நாடகங்கள் வழியாகச் சொல்லும்போது, அவர்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிறார் இலக்கியத்தின் அங்கமான சிறுவர் நாடகங்களை மீட்டெடுக்க இத்தொகுப்பு நிச்சயம் உதவும். பள்ளி மாணவர்கள் இத்தொகுப்பில் உள்ள நாடகங்களைப் பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேற்றி மகிழலாம்.

வகைசிறுவர் நாடகம்
தொகுப்பாசிரியர்மு.முருகேஷ்
வெளியீடுசாகித்திய அகாடெமி,சென்னை-18 +044 24311741/24354815
விலை₹ 255/-
Share this: