தலையங்கம் – பிப்ரவரி 2022

Adithi_pic_editorial

அனைவருக்கும் வணக்கம். 

சுட்டி உலகம் துவங்கி பத்து மாதம் ஆன நிலையில், பார்வைகளின் (views) எண்ணிக்கை பதினொன்றாயிரத்தைத் தாண்டிவிட்டது என்பதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். 

குழந்தைப் பாடல்களும், கதைகளும் அடங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட  காணொளிகளை எங்கள் சுட்டி உலகத்தில் வெளியிட்டுள்ளோம்.  ஆங்கில நர்சரிப் பாடல்களை மட்டுமே பாடி வளரும் நம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள்.  தமிழ் உச்சரிப்பு நன்கு பழகவும், நம் தாய்மொழியில் நல்ல பரிச்சயம் ஏற்படவும், தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.   தமிழ் தான் நம் அடையாளம்!

2021 ஆம் ஆண்டுடன் கொரோனாவின் பாதிப்பு முடிவுக்கு வந்துவிடும் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம்.  ஆனால் ஓமைக்ரான் என்ற புதிய அலை மீண்டும் நம்மை அலைக்கழித்தது. நல்லவேளையாக இந்த முறை டெல்டா வைரஸ் போல இல்லாமல், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுத்தவில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி. 

அடுத்தடுத்துக் கொரோனா வைரஸ் வெவ்வேறு விதமாக உருமாறி வந்து நம்மைத் தாக்கும் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  எனவே அனைவரும் இனி வரும் காலத்திலும் அலட்சியமாக இல்லாமல் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, பாதுகாப்பாக இருப்பது அவசியம்.   உயிரிழப்பைத் தவிர்க்கத் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம்!

ஓமைக்ரான் பரவல் காரணமாக ஒத்திப் போடப்பட்ட சென்னை புத்தகக் காட்சியைப் பிப்ரவரி 16 முதல் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.  வாய்ப்பு உள்ளோர் குழந்தைகளை அவசியம் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பும் நூல்களை வாங்கிக் கொடுங்கள்.

கல்வி என்பது பள்ளிப் புத்தகத்தோடு முடிவதல்ல; பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பே குழந்தைகளையும், மாணவர்களையும் செம்மைப்படுத்தும்.  வாழ்வின் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைத் தரவல்லவை புத்தகங்கள்.  வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்திக் கற்பனையையும், நினைவுத்திறனையும் கூட்டி அறிவை மேம்படுத்தும். 

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். நடுவயதில் தீவிர வாசகர்களாக இருப்பவர்கள் அனைவருமே, இளம் வயதில் வாசிக்கத் துவங்கியவர்கள் என்கிறது, ஒரு ஆய்வுச் செய்தி. 

கணினி, அலைபேசி,தொலைக்காட்சி போன்ற மின்னணு சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்பி, வாசிப்பின் சுவையை இளம்வயதிலேயே அறிமுகப்படுத்துவது, பெற்றோரின் கடமை. பெற்றோர் தாம் குழந்தைகளின் முன்மாதிரி.  எனவே பெற்றோர் முதலில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் அவசியம்.   

வாசிப்பின் துவக்க நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, வார்த்தைகள் குறைவாகவும், கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்கள் அதிகமாகவும் உள்ள நூல்களை வாங்கிக் கொடுங்கள்.  அது அவர்களுக்கு புத்தகத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தும்.   

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகத்தைச் சுட்டி உலகத்தில் வெளியிட்டுள்ளோம்.  உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். இது மிகவும் முக்கியம்.

புத்தகக் காட்சியில் நூல்களைத் தேர்வு செய்வதற்கு வசதியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த முக்கிய நூல்களைப் பற்றிய சிறப்புப் பதிவுகளையும் சுட்டி உலகத்தில் அவ்வப்போது வெளியிட உள்ளோம். வாசித்துப் பயன்பெறுங்கள்.

கர்நாடகா கல்லூரியொன்றில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டுக்கொண்டு ஒரு கும்பல், புர்க்கா அணிந்த மாணவியொன்றைத் துரத்திச் சென்றனர். இந்தியா போன்ற பல்வேறு சமயத்தினர் வாழும் நாட்டில், அவரவர் மத நம்பிக்கையில் மற்றவர் தலையிடாதிருப்பது மட்டுன்றி, அவர்கள் நம்பிக்கையை மதித்து நடப்பதும், மத நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும். 

இளம் தலைமுறையின் நெஞ்சில் மதத்தைக் காரணமாகக் காட்டி நஞ்சு கலக்கவோ, பிளவு ஏற்படுத்தவோ நாம் சிறிதும் அனுமதிக்கக் கூடாது.  கர்நாடகாவில் நடந்த இந்த அநாகரிகமான காட்டுமிராண்டி நிகழ்வு, தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.  இந்தப் பிளவு சக்திகளின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 

மாணவி முஸ்கான் பயப்படாமல் தைரியமாக ஒற்றை ஆளாக நின்று, ஒற்றை கையை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர்’ என்று குரல் கொடுத்துவிட்டு உள்ளே செல்கின்றார்.  இது சமூக ஊடகங்களில் பெரிதும் பேசுபொருளாயிருக்கின்றது.  மாணவி முஸ்கானைப் பலரும் ஆதரித்திருப்பது ஆறுதலாயிருக்கின்றது.  மாணவி முஸ்கானின் குரல் உரிமையின் குரல்! அறச்சீற்றத்தின் குரல்!

இரண்டு தலைமுறைகளாகத் தான் நம் பெண்களுக்கு எத்தனையோ தடைகளைத் தாண்டிக் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  எதையாவது காரணம் காட்டிப் பெண்களை வீட்டுக்குள் முடக்க நினைக்கும் பிற்போக்குச் சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்! 

மாணவி முஸ்கானை ஆதரிப்போம்!  கல்வியே பெண்களின் பேராயுதம்!    

குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், தொடுதல் குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தும், விளக்கும் காணொளி குறித்த பதிவை, அவசியம் பெற்றோர் அனைவரும் வாசிக்க வேண்டும். அதற்கான இணைப்பு கீழே:-

https://chuttiulagam.com/yarenum_indha_mounathai_conversation/

மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்!

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர் குழு.

Share this: