புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய சிறுவர் நூல்கள்-

Book_exhibition_2022_1

பரிந்துரை – 1

கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6 வரை நடக்கிறது.  குழந்தைகளை அவசியம் கண்காட்சிக்கு அழைத்து வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களைப் பெற்றோர் வாங்கிக் கொடுத்து, வாசிக்க வைக்க வேண்டும்.

இக்கால இளந்தலைமுறைக்குத் தேவையான புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் கொண்ட நூல்களைக் குழந்தைகள் வாசிப்பது மிகவும் முக்கியம் என்பதால், இத்தொடரில் வாசிக்க வேண்டிய சிறுவர் நூல்களை அறிமுகப்படுத்துகிறோம்.

தமிழில் என்னென்ன சிறுவர் புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறுவர்க்கான நூல்களை வெளியிடுகின்றன? என்பதைப் பெற்றோருக்குத் தெரிவிப்பது, இப்பதிவின் முக்கிய நோக்கம்.

இங்கே கொடுத்திருப்பது தரவரிசை பட்டியல் அல்ல.  தமிழில் வெளிவந்துள்ள சிறந்தவையும், சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவையுமான 10  புத்தகங்கள் பட்டியல் கீழே:-

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதைசிறுவர் கதைத்தொகுப்பு

ஆசிரியர்  மு.முருகேஷ்.   

அகநி வெளியீடு.  விலை ₹ 120/-. 

செல் +91 98426 37637 / 94443 60421.

Ammavukku_kathai

2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல். இதில் 16 கதைகள் உள்ளன.  ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’யில் மகள் அம்மாவுக்குக் ‘முயலும் ஆமையும்’ குறித்த கதை சொல்கிறாள்.  இது நமக்கெல்லாம் தெரிந்த பழைய ஓட்டப்பயந்தயக் கதையல்ல.  இக்காலத்துக்கேற்ற புதுக்கதை. 

‘பழைய பாட்டியும் புது வடையும்’ கதையில் வரும் காக்காவும், நரியும் யாரையும் ஏமாற்றி உணவைப் பறித்துத் தின்னும் குணம் கொண்டவை அல்ல; உழைத்துச் சாப்பிட நினைப்பவை.

‘கட்டைவிரலின் கதை’ பிறப்பைக் காரணம் காட்டி வில்வித்தை கற்றுத் தர மறுத்த துரோணாச்சாரியார் அநியாயமாய் ஏகலைவனின் கட்டை விரலைக் குருதட்சிணையாகப் பெற்ற கதையைச் சொல்கிறது.  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உண்மையைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கின்றது, இக்கதை.

‘சொட்டுச் சொட்டாய் உயிர்த்துளி’ என்ற கதை, நீரின் அருமையைப் பேசுகின்றது.   மற்ற கதைகளையும் வாசிக்க, அவசியம் இந்நூலை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள். 6-12 வயதினர்க்கான நூலிது.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்சிறுவர் நாவல்

ஆசிரியர் யெஸ்.பாலபாரதி. 

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-89 – விலை ₹ 60/-

செல் +91 91765 49991

2020 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற சிறார் நாவலிது.  ஷாலு என்ற சிறுமிக்கு, அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஷாலுவின் தோழி பூஜாவிற்கு வெளியில் சொல்ல முடியாத ஒரு சங்கடம் நேருகின்றது.  அதுவும் வீட்டுக்குக் கீழே குடியிருக்கும் தாத்தாவால் நேருகின்றது. 

தன் அம்மாவிடம் கூட பிரச்சினையைச் சொல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கும், மனவேதனைக்கும் உள்ளாகிறாள் பூஜா.  ஷாலுவின் மூலமாகப் பூஜாவின் பிரச்சினையை அறிந்து கொள்ளும் மரப்பாச்சி அவளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி விளக்குகிறது.  மரப்பாச்சி சொன்னதைக் கேட்டு, பூஜாவிற்குத்  தைரியம் வருகிறது. 

குழந்தைக்குத் தன் உடல் தன் உரிமையென்றும், பாதுகாப்பற்ற தொடுதல் நடந்தால், அது பற்றி உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வூட்டும் சிறந்த நாவல்.  குழந்தைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.6-12 வயதினர்க்கானது.

மலைப்பூ – சிறார் நாவல்

ஆசிரியர் –  விழியன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 – விலை:-₹ 95/-.

செல் +91 8778073949.

மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமி ஏழாம் வகுப்பு மாணவி.    தொடக்கப் பள்ளி மட்டுமே, அக்கிராமத்தில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்குச் சென்று வருகிறாள். போதுமான போக்குவரத்து வசதியின்றி நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவதற்கே அவள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது.

அவளுக்குத் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிடைக்கின்றது.  இந்த அறிவியல் தேசிய விழா, அவளுக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கின்றது.  மேடையில் பிரதம மந்திரியைப் பார்த்து, அவள் இரண்டு கேள்விகளைக் கேட்கிறாள். ஒட்டுமொத்த அரங்கமும், எழுந்து நின்று, அவளைக் கைதட்டிப் பாராட்டுகின்றது. 

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும், மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கல்வியே இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது என்பதையும், கிராமப்புற பள்ளிக் கட்டிடங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தால், பெண் குழந்தைகள் பலர் படிப்பைப் பாதியில் விட வேண்டிய அவலம் உள்ளது என்பதையும்  இந்நாவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் இது.09+ வயதினர்க்கான நாவலிது.

புலிக்குகை மர்மம் – இளையோர் நாவல்

ஆசிரியர் – உதயசங்கர்

வெளியீடு:- வானம் பதிப்பகம்,சென்னை-89 – விலை ₹ 70/-

செல் +91 91765 49991

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் கதாநாயகன்.  ஆசிரியருடைய ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறார் நாவலிலும், இவனே நாயகன்.

மரம் ஏறுவதிலிருந்து கிரிக்கெட் வரை, எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அவனை அடித்துக் கொள்ள ஆளில்லை.  எறிபந்து, கபடி, பம்பரம், கல்லா மண்ணா, மண்ணா மரமா, கோலிக்குண்டு, செதுக்குமுத்துக் கல் எனக் கிராமத்து விளையாட்டுகள் சிலவற்றை, இதில் குறிப்பிட்டிருக்கின்றார் ஆசிரியர்.

கோவில்பட்டி ஊரின் தெற்கு மூலையிலிருந்த சொர்ணமலையின் அடிவாரத்தில் ஒரு புலிக்குகை இருக்கின்றது.  இருள் சூழ்ந்த அந்தக் குகைக்குப் பெரியவர்களே போகப் பயப்படுவார்கள்.  குகைக்குக் கீழே இருந்த பெரிய மைதானத்தில், மேட்டுத்தெரு வெங்கடேஷ் குழுவுக்கும் மாதாக் கோயில்தெரு பாலு குழுவுக்கும், கிரிக்கெட் போட்டி நடக்கிறது.  அச்சமயம் புலிக்குகையின் அருகில், அந்நியர்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தைச் சிறுவர்கள் கவனிக்கிறார்கள்.  தொடர்ந்து அவர்கள் குழுவில் விளையாடிய சிறுவன் மாரி காணாமல் போகிறான்.

மாரி எங்கே?  மாரியைத் தேடி பாலு தலைமையில் சென்ற சிறுவர்கள் அவனைக் கண்டுபிடித்தார்களா? அந்தப் புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன?  அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்?

விறுவிறுப்புடன் கூடிய சாகச நாவல். சிறுவர்களுக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும்.  அவசியம் வாங்கிக் கொடுத்துச் சிறுவர்களுக்கு வாசிப்பின்பம் கிடைக்கச் செய்யுங்கள்.12+ வயது இளையோர்க்கானது.

பச்சை வைரம்

ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோவெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18. விலை:  ₹ 120/-

செல் +91  8778073949.

எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா. 

மோராம்மாவின் மூலம், பழங்கால ஆப்பிரிக்க மக்களின் துயரமிகுந்த கொத்தடிமை வாழ்வு பற்றியும், வெள்ளையரின் அடக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்கிறாள், பிளிகி.  மேற்கு ஆப்பிரிக்கா நாடான சியரா லியோன் நாட்டின் பின்னணியில், கதை நடக்கிறது.

மக்கள் அடிமைகளாக்கப்பட்டு, மேற்கு ஆப்பிரிக்கா வழியாகவே பெருமளவு மக்கள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கு, அனுப்பப் பட்டார்கள்.   அவர்களில் ஒரு பிரிவினர், அமெரிக்காவில் விடுதலை பெற்று நாடு திரும்பி, ஓர் இலவ மரத்தினடியில் விடுவிக்கப்படுகின்றனர்.  அதனால் சியாரோ லியோன் மக்களால், ‘பச்சை வைரம்’ என அம்மரம் கொண்டாடப்படுகின்றது.

இந்நாவல் மூலம் வெள்ளைக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மையால் ஆப்பிரிக்க மக்கள் அனுபவித்த கொடுமைகள், அமெரிக்காவில் சட்டபூர்வமாக நடத்தப்பட்ட அடிமை வியாபாரம், அவர்களது நீண்ட கால போராட்டங்களின் விளைவாகப் பெற்ற சுதந்திரம், ஆகியவை குறித்த வரலாற்றை, இளையோர் அறிந்து கொள்ளலாம்.  

பதின்பருவத்தினருக்கான சிறந்த நாவல்.  இளையோருக்கு அவசியம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

ஆயிஷா – குறுநாவல்

ஆசிரியர் –  இரா.நடராசன்

வெளியீடு:- பாரதி புத்தகாலயம், சென்னை-18 விலை – ₹14/-.

செல் +91 8778073949.

ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இக்குறுநாவல் உள்ளது.  திண்டிவனத்துக்கு அருகில்,  ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்த உண்மை சம்பவமே, இந்நாவலின் அடிப்படைக்கரு.

வகுப்பாசிரியருக்கு, அடிக்கடிச் சந்தேகம் கேட்கும் மாணவி ஆயிஷா பிரச்சினை ஆகின்றாள்.  அறிவியலின் அடிப்படையே ஏன், எதற்கு? என்று கேள்வி கேட்டு, அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் தானே அடங்கியுள்ளது?.  ஆனால் நம் கல்விமுறை, கேள்வி கேட்க மாணவர்களை அனுமதிப்பதில்லை.  கொடுத்திருக்கும் பாடத்தை, எந்தக் கேள்வியும் கேட்காமல், மனப்பாடம் பண்ணி தேர்வுத் தாளில் வாந்தியெடுப்பது மட்டுமே, அவர்களுடைய வேலை.      

நம் மனப்பாடக் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையை விதைத்துப் பரவலான கவனத்தை ஏற்படுத்திய விதத்தில், ஆயிஷா மிக முக்கியமான புத்தகம். இது வெளிவந்த பிறகு, ஆசிரியரின் பெயரில்  ஆயிஷா என்ற அடைமொழி சேர்ந்தௌ ‘ஆயிஷா நடராசன்’ என்றாகிவிட்டது.

ஒரு லட்சத்துக்கும் மேல் பிரதிகள் விற்பனை, எட்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது, இந்நூல். 20 பக்கங்களே கொண்ட இக்குறுநாவலை, அவசியம் அனைவரும் குறிப்பாகக் கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்க வேண்டும். 

டைனோசர் முட்டையைக் காணோம்!  சிறுவர் கதைத் தொகுப்பு

ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18 – விலை ₹100/-

செல் +91 88257 69056

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை.  முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் ரமணியும், பரணியும்  தாத்தா வீட்டுக்குச் செல்கிறார்கள். காட்டில் கிடைத்த மயில் முட்டையை டைனோசர் முட்டை என்று ரமணி தவறாக நினைத்து எடுத்து வருகின்றான்.  மயில் முட்டையை விற்பது சட்டப்படி குற்றம்.  தோட்டக்காரன் நாகப்பன் களவாடி விற்க முயன்ற மயில் முட்டைகள் விற்கப்படாமல் தடுக்க, ரமணியின்  செய்கை காவலருக்கு உதவுகின்றது.

‘கொசு அடித்த சிங்கராஜா’, ‘அணில்களின் ஓட்டப்பந்தயம்’, ‘புலிக்குட்டிக்கு அம்மாவான ஆடு’, ‘முட்டையைப் பாதுகாத்த அணில்’, ‘குள்ளநரிக்கு உதவிய மரங்கொத்தி’, ‘ஊஞ்சல் ஆடிய குட்டி ஆமை’ என இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில், சிறுவர்க்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பது  சிறப்பு.

மேலும் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டும்  ஒற்றுமையுடனும் வாழ்வதாகக் கதைகளை அமைத்திருப்பதும் நன்று.   முயலை மகிழ்விப்பதற்காக அணில் போட்டியில் தோற்கின்றது.  அம்மா இல்லாத புலிக்குட்டியை ஆடு ஆபத்திலிருந்து காப்பாற்றி அம்மாவாகிறது. நரிக்கு அதன் நண்பனைத் தேடித் தருகின்றது மரங்கொத்தி.  கொண்டைக்குருவி வெளியே போயிருந்த சமயத்தில் மரம் வெட்டுப்பட்டு சாய, அணில் அம்மரத்தில் இருந்த குருவி முட்டைகளைப் பாதுகாக்கிறது.

மற்றவர்க்கு உதவ வேண்டும்; எல்லோருடனும் ஒற்றுமையாக நல்லுறவுடன் வாழ வேண்டும் என்ற கருத்துகளைக் குழந்தைகள் இக்கதைகள் மூலம் பெறுவது உறுதி.   அவசியம் இந்நூலை சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். 6-12 வயதினர்க்கானது. 

அண்டசராசரம் – சிறுவர் நாவல்

ஆசிரியர் – எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா)

தேசாந்திரி பதிப்பகம், சென்னை.  (044-23644947) 

விலை ₹70/-

இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.  அம்முயற்சியில், அவர்கள் சந்தித்த விசித்திரமான பிரச்சினைகள் என்னென்ன? இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடித்தார்களா? என்பதை, நாவல் விறுவிறுப்புடன் விவரிக்கின்றது.  

இடையில் இளம் தலைமுறைக்குத் தெரிய வேண்டிய நேதாஜி உருவாக்கிய, இந்திய தேசிய ராணுவம் குறித்த வரலாற்றுச் செய்திகளும், இந்தக் காலச் சிறுவர்களுக்குத் தெரியாத, சர்க்கஸ் குறித்த சுவையான செய்திகளும் இடம்பெற்றுள்ளன.   12+ வயது சிறுவர்க்கானது.

ஒற்றைச்சிறகு ஓவியா – சிறுவர் நாவல்

ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 – விலை ₹ 110/-

செல் +91 8778073949

நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஒத்திகை பார்க்கிறார்கள்.  திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்கின்றது.

ஓவியாவுக்கு ஒற்றை சிறகு முளைக்கிறது. மற்றவர்களின் கண்கள் வழியாக அவர்கள் கனவுக்குள் போய், இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடைக்கின்றது. அந்த அதிசயத்தையே கலைநிகழ்ச்சியாக நடத்தி, கலெக்டரை அசத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் செய்ய  முடியாமல் முக்கியமான பொருள் திருட்டு போகின்றது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், சில புதிர்களை விடுவித்தாக வேண்டும்.

அவர்களுடைய தேடலின் வழியாக, தமிழகத்தின் முக்கியமான அரசியல் பிரச்சினையையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் பியூன் தாத்தா கதிரேசன் மூலம்  தெரிந்து கொள்கிறார்கள். செயற்கை உரங்களைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கியதன் விளைவாக உழவரின் நண்பனான மண்புழு இல்லாமல் போய்விட்டது; குடிதண்ணீர் நிறம் மாறிக் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் போனதற்கு யார் காரணம்? நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்கு ஏன் போனது? கார்பரேட் கம்பெனிகள் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிராக, மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதையெல்லாம், இந்த பேண்டசி நாவல் வழியாக வாசிக்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியிருப்பதற்குப் பாராட்டுகள்!

2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசு இந்நூலுக்குக் கிடைத்தது. இயற்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஃபேண்டசி நாவல்.9+ வயது சிறுவர்க்கானது.

1650 – முன்ன ஒரு காலத்துல – சிறுவர் நாவல்

ஆசிரியர் – விழியன்

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-89 – விலை ₹ 80

செல் +91 91765 49991

இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது.  வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள்.

காந்திஜி கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் என்பது தான், பொதுவாக நம் பள்ளியில் வரலாறு சொல்லும் பாடம்.  எனவே இந்திய விடுதலைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்தி, தம் உயிரைத் தியாகம் செய்து இருக்கிறார்கள் என்ற உண்மையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டியது, சிறார் எழுத்தாளர்களின் கடமை.  அதை இந்நாவல் சிறப்பாகச் செய்கின்றது.

ஒரு குழந்தையின் விவரிப்பில், ஜாலியன் வாலாபாக் நிகழ்வை வாசிக்கும் போது மனம் பதற்றமாவது உறுதி.  நிகழ்வு நடந்த அந்த இடத்தைப் பற்றியும், அந்தக் காட்சியைப் பற்றியும் அவள் செய்யும் துல்லிய விவரிப்பு, நேரடிக் காட்சி போல மனதில் படிந்து, மனத்தைக் கனத்துப் போகச் செய்கிறது.  எத்தனை குண்டு வெடித்தது என்ற விபரமும் இதில் உள்ளது.

இந்திய விடுதலைக்கு நாம் கடந்து வந்த பாதையையும்,  அதற்குக் கொடுத்த விலையையும் கண்டிப்பாக நம் சிறுவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  இந்நாவல் குழந்தைகளைக் கண்டிப்பாக வரலாற்றை நோக்கி வாசிக்கத் திசை திருப்பும் என்பதில் சந்தேகமில்லை.

சிறுவர்களுக்கும் இளையோருக்கும் இந்நூலை வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு நம் நாட்டின் வரலாறு கண்டிப்பாகத் தெரிய வேண்டும்.12+ சிறுவர்க்கானது.

Share this: