‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ வென்ற நூல்கள் – 1

Solakollai_pommai_pic

சோளக் கொல்லைப் பொம்மை! 

ஆசிரியர்- தங்கப்பா

ம.லெனின் தங்கப்பா அவர்கள் (1934-2018) புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மரபுக்கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பன்முகத்திறமை பெற்ற இவர், 50 க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் எழுதிய ‘சோளக்கொல்லை பொம்மை’ என்ற குழந்தைகள் பாடல் நூலுக்கு, 2010 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்தது. சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காகவும் இரண்டாவது முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 

“குழந்தைகளோடு பழகி இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாகச் ‘சோளக்கொல்லை பொம்மை’ நூலை எழுதினேன்;தகுதியான நூலுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று விருது கிடைத்த சமயத்தில், இவர் கூறினார்.

தமிழக நாட்டுப்புறச் சூழலின் அடையாளமாகச் சோளக்கொல்லை பொம்மை நிற்பதால், அதையே நூலின் முகப்புப் பாடலாகவும், தலைப்பாகவும் வைத்ததாகத் தம் முன்னுரையில், ஆசிரியர் தங்கப்பா கூறியுள்ளார்.

இந்நூலுக்குக் குழந்தை எழுத்தாளர் முனைவர் பூவண்ணன் அணிந்துரை வழங்கியுள்ளார்.  அதில் “கவிஞரின் பாடல்களில் சொற்கள் நடனமாடுகின்றன!  நடனமாடும் நங்கைகளின் கால் சதங்கை போலத் தங்கப்பாவின் பாடல் சந்தங்கள் படிப்போரைப் பாட வைப்பதோடு, குதித்துக் குதித்து ஆடவும் வைக்கின்றன.  இப்படி வாசகரை ஆட வைப்பதே அருமையான குழந்தைப் பாட்டின் உயரிய இலக்கணம்….

தங்கப்பாவின் ‘சோளக்கொல்லை’க்குள் நுழைந்தால் போதும்! சோலைக்குள் புகுந்த காட்சியின்பமும், சுவையான இனிப்பு உண்ட முகமலர்ச்சித் தோற்றமும், எளிய இனிய நல்லுரைகள் உள்வாங்கிய இலக்கிய இன்பமும் கிடைக்கும்” என்கிறார்.

இத்தொகுப்பில் மொத்தம் 105 பாடல்கள் உள்ளன. “தொடக்கப் பாடல்கள் மழலையர்க்கும், அடுத்துவரும் பாடல்கள் ஐந்து அகவைக்கு மேற்பட்ட குழந்தைகட்கும், பத்துப் பதினைந்து அடிகட்கு மேல் நீளமான பாடல்கள் பன்னிரண்டு அகவைக்கு மேற்பட்டுப் பதினைந்துக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்க்கும் ஏற்றவை” என்று ஆசிரியர் முன்னுரையில் கூறியிருப்பது போல, அடிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. 

முகப்புப் பாடலான ‘சோளக்கொல்லைப் பொம்மை’, இனிய சந்தமும்,  ஓசை நயமும் கொண்டு, சிறுவர்கள் பாடுவதற்குத் தோதான பாடல். சிறுவர்கள் உச்சரிப்பதற்கும் பாடுவதற்கும் ஏற்ற மாதிரி, எளிய சொற்களில் அமைந்த இப்பாடலிருந்து சில வரிகள் மட்டும்:-

  1. முகப்புப் பாடல்

“சோளக் கொல்லைப் பொம்மை!

முறைக்குது பார் நம்மை.

ஆளைப் போல மிடுக்கு

அட்டைக்கத்தி முடுக்கு

தாளில் தங்க மினுக்கு

தலை தான் கொஞ்சம் ஒடுக்கு

காளிகோயில் பூதம் போலக்

காவல் காத்து நிற்கும் பொம்மை.

சட்டித்தலை மேலே

சவரி முடி ஒட்டிப்

பட்டை நாமம் தீட்டிப்

பல் இளித்துக் காட்டி

நெட்டி மாலை போட்டுக் கந்தல்

சட்டை மாட்டிவிட்ட பொம்மை…..”

  • மழலையர் பாடல்

நான்கு வரிப் பாடல்கள் பெரும்பாலும் மழலைகளுக்கானவை என்பதால் இவை நாட்டுப்புறப் பாணியில் வேடிக்கையாகவும் விளையாட்டுப் பாடலாகவும் அமைந்து குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதாய் உள்ளன. இதன் இனிய ஓசை நயத்துடன் கூடிய சொற்கட்டுக் குழந்தைகளைத் தலையை ஆட்டிப் பாட வைப்பது உறுதி.

இப்பாடல்களை நம் மழலையர்க்குச் சொல்லிக் கொடுத்துப் பாடச் சொன்னால், அவர்கள் உச்சரிப்பைத் திருத்தமாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்வர்.  

காட்டாக இந்நூலிலிருந்து 3 மட்டும் கீழே கொடுத்துள்ளேன்:-

“வால், வால் குரங்கு வால்

மரத்தில் தொங்குது வவ்வால்

கால் எனக்கு இரண்டு கால்

கம்பைச் சேர்த்தால் மூன்று கால்” (வாலும் காலும்)

“குண்டு குண்டு மாம்பழம்

குழந்தை விரும்பும் மாம்பழம்

வண்டு துளைத்த மாம்பழம்

வாயில் இனிக்கும் மாம்பழம்” (மாம்பழம்)

குருவி மூக்குக் காரன்

குண்டுத் தொப்பைக் காரன்

நண்டு பிடிக்கப் போனான்

வண்டு காலில் கடிக்க

நொண்டி நடக்கலானான்.”  (குருவி மூக்கன்)

  • எண்ணுப்பயிற்சி பாடல்

குழந்தைகள் எண்களை எளிதாய்க் கற்க, எண்ணுப்பயிற்சிப் பாடல்கள் மிகவும் உதவுகின்றன.

ஒன்றும் ஒன்றும் இரண்டு;

ஓடாதே நீ மிரண்டு.

இரண்டும் இரண்டும் நான்கு;

இரவில் நன்றாய்த் தூங்கு.

மூன்றும் மூன்றும் ஆறு

முழுதும் உண்மை கூறு……………….”

என்ற பாட்டு’ இரண்டிரண்டாய்ப் பத்து வரை, எளிதாய் எண்ணக் கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகள் கிழமைகளை எளிதாய் நினைவில் வைத்துக் கொள்ள ‘கிழமைகள்’ என்ற இந்தப் பாடல் உதவும்:

“திங்கள் கிழமை விதை போட்டோம்;

செவ்வாய்க் கிழமை செடி வளர்ந்தது;

புதன் கிழமை பூப்பூத்தது;

வியாழக் கிழமை காய் காய்த்தது;

வெள்ளிக் கிழமை பழம் பழுத்தது;

சனிக் கிழமை சப்பித் தின்றோம்;

ஞாயிற்றுக்கிழமை நன்றாய்த் தூங்கினோம்”

இப்பாடலைப் பாடுவதன் மூலம் குழந்தைகள் கிழமைகளைக் கற்றுக் கொள்வதுடன் தோட்டம் போடுவதைப் பற்றியும், அதனால் விளையும் பலன்கள் பற்றியும் கூடவே கற்றுக் கொள்வார்கள்.

  •  நாப்பயிற்சிப் பாடல்

குழந்தைகளுக்கு ‘ழ’கரத்தைக் கற்றுக் கொடுப்பது தான், மிகவும் சிரமமான செயல்.  சிறுவயதில் ழகரத்தைக் கற்றுக் கொடுக்க ‘ஏழைக் கிழவன் வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்தான்’ என்ற வரியைச் சொல்லச் சொல்லிப் பழக்குவார்கள்.

இதில் ‘ழகரம்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள நாப்பயிற்சிப் பாடலிது:-

கழுவின பழம் அது

வழுவுது வழுவுது

வழுவின பழம் அது

நழுவுது நழுவுது.

நழுவுன பழம் அது

முழுகுது முழுகுது!

முழுகின பழம் அது

அழுகுது, அழுகுது!”

  • இயற்கைப் பாடல்கள்

“இன்று குழந்தைகளின் புலன்களை மழுங்கடித்து, அவர்கள் மீது திணிக்கப்படும் குருட்டு மனப்பாடக் கல்வியிலிருந்து அவர்களைச் சிறிதளவேனும் விடுவிப்பதும், புலன்களை விழிப்படையச் செய்வதும் இயற்கை ஈடுபாட்டையையும், அழகுணர்வையும் அவர்கள் நெஞ்சில் கிளர்ந்தெழச் செய்வதும், உயிர்த்துடிப்புடன் கூடிய படைப்பாற்றல் மிக்க குழந்தைகளை உருவாக்குதற்கான மிக இன்றியமையாப் பணிகள் ஆகும்” என்று நூலின் முன்னுரையில் சொல்லும் ஆசிரியர், குழந்தைகளுக்கு இயற்கையின் மீது நாட்டத்தை ஏற்படுத்தி, அதை நேசிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல அருமையான பாடல்களை இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.

யானை, ஆடு,மாடு,நாய், பூனை, கழுதை போன்ற விலங்குகளின் பெயர்களுடன், ஏராளமான பறவைகளின் பெயர்களையும் இதில் அறிமுகம் செய்துள்ளார். . பறவைகளின் ஒலிகள் குறித்த ஒரு பாடலும், இதில் உள்ளது. 

‘கனவில் பறவைகள்’ என்ற அழகிய பாடலிலிருந்து, சில வரிகள்:-

“…………..

வண்ண மரங்கொத்தி வரும் – முதுகில்

வரி வரியாம் கொண்டலாத்தி வரும்.

கண்ணினில் வியப்பு வரும் – படியே

காடெல்லாம் புத்துயிர் தழைத்து வரும்.

இங்கொரு கொக்கு வரும் – கண்கள்

ஏறெடுத்தால் பனங்காடை வரும்

அங்கொரு நாரை வரும் – பின்னே

அன்னம் வரும், குள்ள வாத்து வரும்.

குணுகும் புறாக்கள் வரும் – புள்ளிக்

குயில் வருங் கரிக்குருவி வரும்.

முணு முணுச் சிட்டு வரும் – கத்தி

மூக்கன் வரும் சிறு தூக்கன் வரும்…………………….”

மேலும் ‘மழைக்காலம்’ என்ற பாடலில், நம் மண்ணின் மரங்களையும் பூக்களையும் அறிமுகம் செய்துள்ளார். நம்மூர் மழைக்காலத்துக் காட்சிகளை இப்பாடல் மூலம் கண்முன் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்.

……………

புங்க மரம் பூத்தது

பூவரசும் பூத்தது

எங்கள் வீட்டு வேலி ஓரம்

எருக்கம் பூப் பூத்தது.

சரக் கொன்றை கொல்லையிலே

சரம் சரமாய்த் தொங்குது

உரக் குழியின் பக்கமெல்லாம்

ஊமத்தம் பூ மின்னுது

அடுக்கு மல்லி பூத்தது.

அவரைப் பந்தல் காய்த்தது.

இடுக்கி லெல்லாம் சிறு நெருஞ்சி

எட்டி எட்டிப் பார்த்தது………….”

  • பகுத்தறிவுப் பாடல்

குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டும் நோக்கத்துடன் “யார் அறிவாளி?” என்ற பாடலை ஆசிரியர் எழுதியுள்ளார்.

குளிக்கப் போனார் யானையார்;

குறுக்கே வந்தார் பூனையார்.

சுளித்து முகம் கோணாமல்

சும்மா போனார் யானையார்.

இறங்கி வந்தார் பாட்டியார்;

எதிரில் போனார் பூனையார்.

‘குரங்கு!சனி,போ!’ என்றே

கூச்சல் போட்டார் பாட்டியார்”.

குளிக்கப் போகும் யானைக்கு முன் பூனை போகிறது; யானை முகம் சுளிக்கவில்லை; ஆனால் பாட்டியாரோ “குரங்கு சனி போ!” என்று கூச்சல் போடுகிறார். ‘பூனை குறுக்கே போனால் போகின்ற காரியம் கை கூடாது’ என்ற மனிதரின் மூடநம்பிக்கையை, இப்பாடலின் மூலம் கேலி செய்கிறார் ஆசிரியர். “இருவரில் யார் அறிவாளி?” என்று கேள்வி கேட்டுக் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

  • வேடிக்கைப் பாடல்கள் –

இந்நூலின் பிற்பகுதியில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் நகைச்சுவை நிரம்பிய சில வேடிக்கையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘மருந்து குடித்த சாமியார்’ என்ற தலைப்பில் அமைந்த, நகைச்சுவையான வேடிக்கைப் பாடல் இது:-

“தொப்பை பருத்த சாமியார்

தொம் தொம் என்று குதிக்கிறார்.

குட்டை உடம்பை மேலும் கீழும்

குலுக்கிக் குலுக்கி எடுக்கிறார்.

நடப்ப தென்ன? சாமியார்

நாட்டு மருந்து குடித்தாராம்.

குடிக்கு முன்னே மருந்தை நன்றாய்க்

குலுக்க மறந்து போனாராம்!”

  • பொதுப்பாடல்கள்

நாம் பார்க்கும் பொருட்கள் ஒரு ஈயின் கண்ணில் எப்படித் தோன்றும் என்ற பாடல், இவருடைய சிறப்பான கற்பனைக்கு ஓர் எடுத்துக்காட்டு! அதிலிருந்து சில வரிகள் மட்டும்:-

கரையின் ஓரப் புல்லும் ஈக்குக்

காடு போலவாம்!

சிறிய மஞ்சள் குளவி, பாயும்

சிறுத்தை போலவாம்!

பட்டு ரோசா இதழ்கள் ஈக்குப்

பஞ்சு மெத்தையாம்.

குட்டை முள்ளும் ஈயின் முன்னே

குத்தும் ஈட்டியாம்…….”  (எப்படியிருக்கும்?)

குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வி அளிக்க வேண்டியதன் அவசியத்தைச் ‘சொந்த மொழி வேண்டும்’ என்ற பாடலில் வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர்:-

“…………………..

எந்திரம் போல் பாட்டை

இங்கிலீசில் படித்தே

ஒன்றும் புரியாமல்

ஒப்பிப்பதா கல்வி?

சொந்த மொழிப் பாட்டைச்

சுவைத்துப் பாடலாமே.

என்றும் நினைவில் இருக்கும்;

இங்கிலீசோ மறக்கும்.”

இவை தவிர கதைப்பாடல், ஆங்கிலப்பாடலைத் தழுவின பாடல் போன்றவையும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.

“தங்கப்பாவின் முதல் பாடலின் வெற்றி, நூல் முடியும் வரை தொடர்வது பாடலின் தரத்தை, அவர் கருத்தில் கலந்த உரத்தை வெளிப்படுத்துகின்றது” என்று பூவண்ணன் அணிந்துரையில் சொல்லியிருப்பது, நூறு சதவீதம் உண்மை.  கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இந்நூல் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் வாசிப்பின்பம் நல்கக் கூடியது.

சோளக்கொல்லைப் பொம்மை (முதலான குழந்தைகட்கான பாடல்கள்) – ஆசிரியர் தங்கப்பாவானகப்பதிப்பகம் எண் 7, 11 ஆம் குறுக்கு, அவ்வை நகர்,புதுச்சேரி – 605008. விலை ரூ 100/- முதல் பதிப்பு (ஆகஸ்ட் 2009)

Share this: