சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2023  

Adanpom_pic

2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்குக் கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு, வானம் பதிப்பகம் மூலமாக வெளிவந்தது.  

ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன்.  கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது. 

அவனுடைய மாமா பெண் மதுமிதா. வீட்டில் சிறு நூலகம் வைத்திருக்கிறாள். “பொழுது போகவில்லையென்றால், புத்தகம் வாசியுங்கள்” என்கிறாள்.  ஆனால் அவனுக்குப் புத்தக வாசிப்புப் பழக்கமே இல்லை. கதையின் நாயகனை விட, மதுமிதா என்ற பெண் பாத்திரத்தை மிகச் சிறப்பாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

மாமாவுடன் தென்னந்தோப்புக்குப் போகும், பாலுவுக்குப் பொம்மையின் உருவத்துடன் இருந்த, மண் பானை ஓட்டுச்சில் ஒன்று கிடைக்கிறது. அதிலிருந்து ஆதன் தோன்றுகிறான். அவன் கேப்டன் பாலுவை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்குக் காலயந்திரத்தில் கூட்டிச் செல்கிறான்.  

கதை இதிலிருந்து துவங்கி, கீழடியின் கண்டுபிடிப்புகள், சிந்து சமவெளி நாகரிகம், நாடோடிகளான ஆரியரின் வருகை என விரிகின்றது. ஆரியர்களால்  துரத்தியடிக்கப்பட்ட சிந்து சமவெளி மக்கள், பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, தெற்கு நோக்கி நகர்ந்து, வைகை ஆற்றங்கரையில், புது நகரை நிர்மாணிப்பது வரை, கதை பயணிக்கிறது.  

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.  சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரித்துடன் ஒத்துப் போவதையும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  ஆனால் இச்செய்திகள், நாளேடுகளில் வருவதோடு சரி. இவை பாடப் புத்தகங்களில், இடம் பெற்று, நம்மினத்தின் வரலாற்றை, நம் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வழி செய்ய வேண்டும்.    

தமிழ் மண்ணின் பழம் பெருமைகளையும், நாகரிக மேன்மையையும்,  நாம் மட்டும், வெறுமனே வாய் கிழிய பேசிக்கொண்டிராமல், அவற்றை இளைய தலைமுறைக்குக் கதை வடிவிலாவது, கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்கும், ஆசிரியருக்குப் பாராட்டும், நன்றியும்.   

நம் தமிழ் மண்ணின் வரலாற்றுச் சிறப்புச் செய்திகளைக் கதை வடிவில் சுவாரசியமாகச் சொல்லும் நாவல். இதை வாசிக்கும் சிறுவர்க்கு வரலாற்று மீதான தேடலை ஏற்படுத்தும் நாவலும் கூட.

Share this: