எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

s_ramakrishnan

விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளர் ஆவார்.  சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம்,.மொழிபெயர்ப்பு, வரலாறு திரைக்கதை, திரைப்பட உரையாடல் என ஏராளமான படைப்புகளின் மூலம், தமிழிலக்கியத்துக்குப் பெருமளவில்   வளமை சேர்த்துள்ளார். 

தீவிர வாசகரான இவர், அயல்மொழி திரைப்படங்கள், ஓவியங்கள் குறித்தும், அவ்வப்போது கட்டுரைகள் எழுதி, தமிழ் வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார்.  ரஷ்ய இலக்கியங்களைத் தமிழ் வாசகருக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, பல்வேறு உரைகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார். இவர் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தம் படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். அவற்றுள் நாகஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்வு  குறித்து எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றது, குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காகக் கனடிய தமிழ்த் தோட்டம் விருதும் இவர் பெற்றுள்ளார்.

சிறுவர் இலக்கியத்துக்கு இவர் ஆற்றியிருக்கும் பங்கும், அளப்பரியது.  இருபதுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை இயற்றியுள்ளார்.  உலகப்புகழ் பெற்ற ‘Alice in Wonderland’ நாவலை, ‘ஆலீசின் அற்புத உலகம்’ என்ற தலைப்பில், தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

https://www.sramakrishnan.com என்ற வலைத்தளத்தில், தொடர்ந்து எழுதி வருகின்றார்.

Share this: