மாயவனம் – சிறார் நாவல்

Mayavanam_pic

இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல்.  விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப,  பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.  வனத்துக்குள்ளே சென்று உயிருடன் மீண்டவர் யாரும் இல்லை என்பதால், எல்லோருக்கும் மாயவனம் என்றாலே, அளவு கடந்த பயம்.

விசித்திரபுரி நாட்டின் அரசர் விஜயேந்திரரும், அரசி மந்தாகினியும் தவமிருந்து பெற்ற இரட்டைக் குழந்தைகள் அயனும், மயனும். பிள்ளை வரம் வேண்டி அருள்மொழி சித்தரிடம் சென்றபோது, அவர் தந்த பழங்களை அவர் சொன்னபடி செய்யாமல், அரசி மாற்றித் தின்றதனால், வினோத உருவங்களுடன் இந்தப் பிள்ளைகள் பிறக்கின்றனர். 

இளவரசர்களுக்குப் பத்து வயது ஆனவுடன், அவர்களைச் சித்தரிடம் கொண்டு விடுகின்றார் அரசர். அங்கே ஐந்து ஆண்டுகள் தற்காப்பு கலையைக் கற்கும் அவர்கள், திகிலும், மர்மமும் நிறைந்த ஆபத்தான மாயவனத்தின் வழியாக உலக ஞானம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  சித்தர் அவர்களை ஆசிர்வதித்து, மந்திர கோல், மந்திர அங்கி, கண்ணாடி, சிறப்புச் சக்திவாய்ந்த மோதிரம் போன்ற பொருட்கள் அடங்கிய ஒரு பையை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புகிறார்.

அந்த வனத்தில் தாமரை ராஜாவாகவும். ரோஜா ராணியாகவும் இருக்கின்றன. மலர்கள் பேசுகின்றன.  மலர்களை நாசம் செய்யும் பெரிய ராட்சஸ சிலந்தியை அழிக்க, அயனும், மயனும் பலவிதமான சாகசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  இருவரும் எதிரிகளிடம் சிக்கி நரபலிக்கு ஆளாகும் நேரத்தில் சமயோசிதமாக அவர்களைக் காப்பாற்றும் பஞ்சவர்ணக்கிளி,  பயணத்தின் போது பல உதவிகளை அவர்களுக்குச் செய்கின்றது. 

மாயவனத்தில் சித்திரக் குள்ளர்களின் தேசம், எறும்புகளின் ராஜ்யம், பூனை நகரம், யாளிகளின் தேசம், போன்ற விசித்திரமான தேசங்களில் பலவிதமான சோதனைகளும், பயங்கர அனுபவங்களும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

அவற்றையெல்லாம் அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? என்னென்ன சாகஸ செயல்களை அவர்கள் செய்தார்கள்? சித்தர் ஏற்கெனவே சொன்னபடி பயண முடிவில் வினோத உருவங்கள் மறைந்து, சரியான தோற்றம் அவர்களுக்குக் கிடைத்ததா? என்பதையறிய நாவலை வாசியுங்கள்.

வித்தியாசமான கற்பனை, திகில்,மாயாஜாலம்,சாகஸம், விறுவிறுப்பு என எல்லாமும் கலந்து, சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள சிறார் நாவல்.

வகைசிறார் நாவல் மின்னூல்
ஆசிரியர்புவனா சந்திரசேகரன்
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B07VFRXD4M
விலை₹ 60/-
Share this: