பெருங்கனா – சிறார் நாவல்

Perunkana_pic

சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை வசதியற்ற அரசுப்பள்ளிகளின் அவலநிலையும் எடுத்துக் காட்டப்படும். வாசிப்பை மேம்படுத்த அடிக்கடி அரசுப்பள்ளிகளுக்குச் செல்லும் போது, இவர் நேரில் சந்தித்த குழந்தைகளின் உண்மைக் கதைகளும், இவரது சில கதைகளில் கருக்களாக இடம் பெற்றிருக்கின்றன.

இக்கதையிலும் குடியிருக்க வீடின்றிப் பூங்காவில் பெற்றோருடன் வசிப்பவன் காரி. பூங்காவைப் பராமரிப்பது அப்பாவின் வேலை; அம்மாவுக்குச் சுகாதாரப்பணியாளர் வேலை. கொரோனா இவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிடுகின்றது. பெற்றோர் இருவரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்துவிடுவதால், தாத்தாவுடன் அவரது கிராமத்துக்குச் செல்கிறான் காரி.

அக்கிராமத்து நூலகத்தில் நடக்கமுடியாத மாற்றுத் திறனாளியான மாமா கோபால், நூலகராக வேலை பார்க்கிறார். மாமாவுடன் அந்த நூலகத்துக்குச் செல்கின்றான் காரி. அந்நூலகத்தின் நிலைமையோ படு மோசமாக இருக்கின்றது. நூல்கள் செல்லரித்துக் கிடக்கின்றன. ஓர் ஆள் கூட நூலகப்பக்கம் வாசிக்க எட்டிப் பார்க்கவில்லை. இந்நாவல் மூலம் ஊர்ப்புறங்களில் இருக்கும் நூலகங்களின் தற்போதைய அவலநிலை விவரிக்கப்பட்டிருக்கின்றது.

செந்தாழை என்ற இளம்பெண்ணின் அறிமுகம், அவனுக்குக் கிடைக்கின்றது.  “ஒரு நூலகம்னா எப்படிக்கா இருக்கணும்?” என்று அவளிடம் கேட்கின்றான் காரி.

“நூலகம் ஒரு கனவு இல்லம் மாதிரி. ஒரு ஊரையே அது புரட்டிப் போடும். ஒரு நூல் ஒரு மனிதனைப் புரட்டிப் போடும்னா, ஒரு நூலகம் ஒரு ஊரையே புரட்டிப் போடும் தானே.  அது நூல்கள் கொண்ட அறை இல்லை காரி. அது ஓர் இயக்கம். அதுக்கு உயிர் புத்தகங்கள் மட்டுமல்ல, மனிதர்கள். வாசிப்பு. வாசிப்பின் வழியே ஒரு கனவு. அந்தக் கனவு வழியே ஒரு புதிய உலகம். செம்மையா இருக்கும் காரி” என்று அவள் பதில் சொல்கின்றாள். ‘பெருங்கனா’ காணும் ஆசிரியரின் குரல், இதில் செந்தாழையின் குரலாக ஒலிக்கின்றது.

மாமாவின் உதவியுடனும், செந்தாழையின் வழிகாட்டுதலுடனும் நூலகத்திற்குப் புது புத்தகங்கள் நன்கொடை வாங்குவது, ஒலிப்பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து, மக்களை நூலகம் நோக்கி வரவழைப்பது எனக் காரி தொடர்ந்து உற்சாகமாக உழைக்கின்றான். இந்நாவலில் காரியின் கனவும், அதை நோக்கிய அவன் பயணமும், படிப்படியான முன்னேற்றமும் விவரிக்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகளும், இதில் சொல்லப்பட்டுள்ளன.

“கனவு காணுங்கள்” என்று கலாம் கூறினார்; ஆனால் கனவுகளுக்கு விதைகள் தேவை; அந்த விதைகள் எங்கே கிடைக்கும்? விதைப்போம் அழகிய மரங்களாக்குவோம்” என்கிறார் ஆசிரியர், தம் முன்னுரையில். . காரி கண்ட பெருங்கனா எப்படிச் சாத்தியமாகின்றது? என்பதை இந்நாவல் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் விவரிக்கின்றது.

இதை வாசிக்கின்ற சிறார்க்குத் தங்கள் கிராமத்தில் உள்ள நூலகத்தைச் சீர் செய்து வாசிப்புக்கேற்றதாக மாற்ற வேண்டும் என்ற உத்வேகமும், தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் நிச்சயம் கிடைக்கும்.

வகைசிறார் நாவல்
ஆசிரியர்விழியன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9498062424
விலைரூ 80/-
Share this: